Saturday, October 29, 2011

14 ஆயிரம் பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

உள்ளாட்சி பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமை (அக்டோபர் 29) நடைபெறுகிறது. மொத்தம் 14,019 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

மறைமுகத் தேர்தல்: நகர்ப்புறப் பகுதிகளில் 10 துணைமேயர், 125 நகராட்சித் துணைத் தலைவர், 529 பேரூராட்சித் துணைத் தலைவர் என மொத்தம் 664 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஊரகப் பகுதிகளில் 31 மாவட்ட ஊராட்சித் தலைவர், 31 மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், 385 ஊராட்சி ஒன்றியத் தலைவர், 385 ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், 12,524 ஊராட்சித் துணைத் தலைவர் உள்பட மொத்தம் 13,356 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளன.

நகர மற்றும் ஊரகப் பகுதியைச் சேர்த்து மொத்தம் 14,019 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தல்களையும் உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளே நடத்துவர். காலை 9.30 மணிக்கு தேர்தல் தொடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்தப் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள்.

துணை மேயர் பதவிக்கு... சென்னை மாநகராட்சி துணைமேயர் பதவிக்கு பா.பெஞ்சமின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூருக்கு வி.டி.தர்மலிங்கம், சேலத்துக்கு எம்.நடேசன், ஈரோடுக்கு கே.சி.பழனிச்சாமி, திருப்பூருக்கு சு.குணசேகரன், கோவைக்கு என்.சின்னதுரை, திருச்சிக்கு எம்.ஆசிக்மீரா, மதுரைக்கு ஆர்.கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலிக்கு பி.கணேசன், தூத்துக்குடிக்கு பி.சேவியர் ஆகியோர் அதிமுக சார்பில் துணைமேயர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். இதைப்போல நகராட்சித் துணைத் தலைவர், பேரூராட்சித் துணைத் தலைவர் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

10 மாநகராட்சிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளதுடன் கவுன்சிலர் இடங்களையும் அதிக அளவில் கைப்பற்றியுள்ளன. இதனால் மாநகராட்சிகளின் துணை மேயர் பதவி அனைத்தையும் அதிமுகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

89 நகராட்சித் தலைவர் பதவிகளையும், 259 பேரூராட்சித் தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

இதிலும் பெரும்பான்மையான துணைத் தலைவர் பதவிகளை அதிமுகவே கைப்பற்றும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மறைமுகத் தேர்தல் என்பதால், சுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் போட்டியிடும் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.