Wednesday, September 7, 2011

61வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தினமலர்; ஐ-பாடிலும் முத்திரை பதித்தது

தமிழர்களின் உரிமைக் குரலாக, போர்வாளாக , 1951ல் உதயமாகிய உண்மையின் உரைகல்லான தினமலர், இன்று 61வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறது. இந்த வேளையில் தனது இனிமையான வாசகர்களுக்கு, ஐ-பாடில் தினமலர் செய்திகளை வாசிக்கலாம் என்ற இனிப்பான செய்தியை வழங்குகிறது.

உயர்திரு. டி.வி.ராமசுப்பையரால் துவக்கப்பட்ட தினமலர் என்றுமே தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுடைய பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மக்கள் பணியே மகத்தான பணி என்ற அடிப்படையில் அதன் சேவை என்றென்றும் தொடரும் என்று இந்நன்னாளில் உறுதி கூறுகிறோம்.தினமலர் நாளிதழின் இந்த மகத்தான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாசகர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய நாளில், தமிழ் காலைப்பத்திரிகை உலகில் முதல் முறையாக ஐ-பாடில் தினமலர் நாளிதழ் தனது அனைத்து செய்திகளையும் வழங்குகிறது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திற்கு இணையாக, தினமலர் தனது புதிய தலைமுறை வாசகர்களுக்காக அறிமுகப்படுத்தும் புதிய பரிணாம வளர்ச்சி ஐ-பாட் செய்திகள். தொடுதிரை வசதியில் செய்திகளையும் படங்களையும் பார்ப்பதும் படிப்பதும் ஒரு புதிய அனுபவம்.

இதில் புதிய வடிவமைப்புடன் கூடிய தமிழக, இந்திய, உலக செய்திகளும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கடைசி செய்திகளும், வெளிநாடுவாழ் வாசகர்களுக்கான உலக தமிழர் செய்திகள், வர்த்தகம் மற்றும் மாவட்ட செய்திகளும், இடம் பெற்றுள்ளது.

சினிமா பிரியர்களுக்காக செய்திகள், சினி வதந்தி, ஜாலிவுட் செய்திகளும், விமர்சனங்கள், வரவிருக்கும் படங்கள் குறித்த செய்திகளுடன், விளையாட்டு ஆர்வலர்களுக்காக விளையாட்டு செய்திகள், கிரிக்கெட், ஸ்கோர்போர்டு, கால்பந்து, டென்னிஸ், பேட்மிடன் ஆகியன இடம் பெற்றுள்ளன.

வீடியோ செய்திகளாக 8 மணி செய்திகள், சினிமா டிரெய்லர், விளையாட்டு போன்றவைகளும், சினிமா, அரசியல், பொது, உலகம், விளையாட்டு, கோவில்கள், விழாக்கள் போட்டோ கேலரியிலும் கண்டு மகிழலாம். ராசிபலன், நட்சத்திர பலன்களை அறிய ஜோதிட பகுதியும், வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த டீக்கடை பெஞ்சு, டவுட் தனபாலு, இதப்படிங்க முதல்ல ஆகியன இடம் பெறுகிறது.

வாரமலர், சிறுவர்மலர், புதிய பகுதிகளான விக்கி வெர்சஸ் வேதாளம், ஷேர் மார்க்கெட், காலநிலை போன்ற பகுதிகளும் இடம் பெறுகின்றன.

வெகுவிரைவில் ஆண்டிராய்டு 3.2 செயல் முறையிலும், பிளாக்பெர்ரி மற்றும் விண்டோஸ் முறையிலும் தினமலர் செய்திகளை படித்து மகிழலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.