Friday, December 25, 2009

தொண்டுளங் கொண்ட டாக்டர் பினாயக் சென்! அவரது துணவியார் இலினா அம்மையாருடன்!



இந்தப் படத்தில் இருப்பவர் பெயர்தான் பினாயக் சென். அசல் டாக்டர். ஆம்! நமது தமிழ் நாட்டில் உள்ள வேலூர் சி. எம்.சி. மருத்துவக் கல்லூரியில் (1966-1970) குழந்தைகள் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தவர். அருகில் இருப்பது அவரது மனைவி, இலினா.

2007-மே மாதம் சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில், காவல்துறையினர் இவரைக் கைது செய்தனர். சிறையிலும் அடைத்தனர். எதற்காக?

அந்த மாநில மனித உரிமை ஆணையத்திடம் இவர் அளித்த புகார் பெரும் புயலை ஏற்படுத்தியதுதான் காரணம். இவரது புகாரின் அடிப்படையில் , மேற்கொண்ட விசாரணையால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. சந்தோஷ்பூர் என்ற இடத்தில் மொத்தமாகக் கொன்று குவித்துப் பூமிக்குள் புதைக்கப் பட்ட ஆதிவாசிகளின் பல உடல்கள் தோண்டி எடுக்கப் பட்டன. அப்பாவி மக்களை மாவோயிஸ்டுகளாக்கி, கோடாரியால் வெட்டியும், துப்பாகியால் சுட்டும் கொலை செய்து புதைத சிறப்புக் காவல் படையினரின் செயல்கள் அம்பலத்துக்கு வந்தன. உண்மை கண்டறியும் குழுக்கள் பலவற்றை ஏற்படுத்தினார். மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்தார். தக்க சாட்சியங்களுடன் மக்களின் கவனத்த்ற்குக் கொண்டு வந்தார். நீதித்துறை மூலமாக நியாயம் பெறவும் முயற்சித்து வந்தார். இவரது மனித உரிமைப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே , இவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டாக்டருக்குப் படித்த சென்னுக்கு ஏன் மக்கள் மேல் இவ்வளவு கரிசனம்? காந்தீயத்தின் பால் கொண்ட கொள்கைப் பிடிப்பு , இந்திராஜியின் அவசர நிலைக் காலக் கட்டத்தில், இவரை ஜெயப் பிரகாஷ் நாரயணரின் இயக்கத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தது. மார்க்சிய சிந்தனையாளர்களுடன் ஏற்பட்ட தொடர்பு இவரை தொண்டுளங் கொண்ட டாக்டராகப் பரிணமிக்கச் செய்தது.

சதிஸ்கர் சுரங்கத் தொழிலாளர் உதவியுடன், சென்னும், அவரது மனைவி இலினாவும் சேர்ந்து ஷகீத் மருத்துவ மனையை உருவாக்கினர். அவர்களது நலனுக்காகப் பாடுப்ட்டு வந்தனர். மொத்ததில் சுரங்கத் தொழிலாளர்களுடன் ஐக்கியாமாகிவிட்டனர்.

சுரங்கத் தொழிலாளர்கள், புறக்கணிக்கப் பட்ட மக்கள் ஆகியோரின் , அரசியல் சமூக பொருளாதார உரிமைகளை மீட்டெடுப்பதில்தான் அவர்களது மெய்யான ஆரோக்கியம், மற்றும் முன்னேற்றம் உள்ளதென்ற கொள்கையுடன் கணவனும், மனைவியும் செயலாற்றி வந்தனர்.

ரூபென்தா என்ற சேவை அமைப்பின் மூலம், மக்களிடமிருந்த குடிப்பழக்கம், பெண்களுக்கெதிரான கொடுமைகளை எல்லாம் அகற்றிட முயன்று வந்தார். இத்தகைய மனிதாபிமானச் செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் இவரை அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்து ஜெயிலில் அடைக்குமளவிற்குக் கொண்டு சென்றது.

உண்மையைச் சொல்பவன் எல்லாம் கம்யூனிஸ்ட் என்றால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் என்பது போன்ற் வசனத்தைக் கமல் ஒரு திரைப்ப்டத்தில் பேசி நடித்ததாக ஞாபகம். ஆனால், நடை முறை வாழ்க்கையில், எந்த ரகசியச் செயல்களிலும் ஈடுபடாத சென்னை மாவோயிஸ்டுகளோடு கூண்டில் ஏற்றி, பொடாவை விட மோசமான, சத்திஸ்கர் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் கைது செய்தது காலத்தின் கொடுமை என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

ஆனால், அமர்த்யாசென், அருணாராய், அருந்ததிராய், டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார், சினிமா தயாரிப்பாளர் ஷ்யாம் பெங்கால், மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ- அறிவியல் பிரபலங்கள் எல்லோருமே பினாயக் சென் கைது செய்யப் பட்டதைக் கண்டித்ததோடு, விடுதலை செய்யுமாறும் வற்புறுத்தினர். அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இயங்கி வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் இவர்களோடு இணந்து போராடின.

பல சதுரமைல்கள் நிலப்பரப்பை சீனாவிடம் பறிகொடுத்த நிலையிலும், காஷ்மீர்ப் பிரச்சினையிலும், பாகிஸ்தானின் வ்ன்கொடுஞ்ச் செயல்பாடுகளிலும் ராஜ தந்திரம் என்ற போர்வையில் மெத்தனப் போக்கைக் கைப்பிடிக்கும் இந்திய அரசு, பினாயக் சென் விஷயத்தில் மட்டும் தீவிரமாகச் செயல் பட்டதன் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்ததாகவே என் புத்திக்குத் தோன்றுகின்றது.

எனக்கும் பினாயக் சென்னுக்கும் எந்தவிதமான ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. ஆனால், இந்தியர் எல்லாம் உடன்பிறப்புக்கள் என்றால் அவரும் என் உடன் பிறப்புத்தான்!

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி ஆண்டுதோறும் வழங்கிவரும் கிராமப்புற ஏழை மக்களுக்காக உழைக்கும் உத்தமர்களைக் கௌரவிக்கும் பால்ஹாரிசன் விருதினை 2004-ல் சென்னுக்கு வழ்ங்கியது.

இந்திய அகடமி ஆப் சோஷியல் சயின்ஸ் ஆர்.ஆர். க்யித்தன் தங்கப் பதக்கம் 2007-ல் வழங்கியது.

உலக சுகாதார மனித உரிமை அமைப்பு 2008-ல், ஜோனாதன் மன் விருதுக்கு இவரைத் தெரிவு செய்தது.

இத்தகைய எல்லாப் புகழுக்கும் சொந்தகாரரான பினாயக் சென்னை, இந்திய அரசாங்கம் பெருமைப் படுத்திட வேண்டாம், சிறுமை படுத்தாமலாவது இருந்திருக்கலாமல்லவா?

கடலில் தூக்கிப் போட்டாலும் மூழ்கிவிட மாட்டேன் கட்டுமரமாவேன்; நீங்கள் அதன் மீதேறிப் பயணஞ் செய்யலாம் என்று நடைமுறைக்கு ஒத்து வராத வசனத்தை நாள்தோறும் ஒளிப் பெட்டியில் கேட்டுத் தொலக்க வேண்டிய சூழலில் வாழும் நமக்கு,

கடாமார்க் சாராயத்தை அறிமுகப் படுத்தி சாராய வாடையே தெரிந்திராத ஒரு தலைமுறையைக் குடிமகனாக்கிய பலமுறை தமிழக முதல்வரான தமிழ்ப் புதல்வரின் தமிழகத்தில் வாழும் நமக்கு,

குடிபோதைக்கு மக்கள் ஆளாகக் கூடாதென்ற கரிசனமும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோளும் கொண்ட பினாயக் சென்னைப் பற்றி சிறிதளவேனும் வலைப்பூ அன்பர்களோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் விமோசனம் கிடைக்கும் என்ற உள்ளோசையோடு ,(உளியின் ஓசை அல்ல) வாய்ப்புக் கிடைத்த்தால் தமிழ்நாட்டிற்கு ஒருமுறையேனும் அந்த மெய்யான மனித தெய்ப்வத்தை வரச் செய்திட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு இந்தப் பதிவினைத் த்ற்போதைக்கு நிறைவு செய்கின்றேன்.

இரண்டாண்டுக்கால சிறை வாசத்திற்குப்பின் நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் பினாயக் சென்னை பிணையக் கைதியாய் கடந்த மே 2009-ல் வெளியே விட்டுள்ளது என்பது பதிவில் விடுபட்ட செய்தி.

"வெறுக்கப் பட வேண்டியது குற்றங்கள்தான்; குற்றவாளியை அல்ல" என்று போதித்த மகாத்மா காந்தியைத் தந்தையாகக் கொண்ட புண்ணிய பூமியில் ஒரு புனிதருக்கு சாதாரண அமைதியான வாழ்க்கை கூட மறுக்கப் படுவதென்பது எந்த வகையில் நியாயம் ?



1 comments:

  1. //இத்தகைய எல்லாப் புகழுக்கும் சொந்தக்காரரான பினாயக் சென்னை, இந்திய அரசாங்கம் பெருமைப் படுத்திட வேண்டாம், சிறுமைப் படுத்தாமலாவது இருந்திருக்கலாமல்லவா?//

    ஆம். எத்தனை உண்மை.

    இந்தக் கட்டுரை உங்களின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம்.

    //"வெறுக்கப் பட வேண்டியது குற்றங்கள்தான்; குற்றவாளியை அல்ல" என்று போதித்த மகாத்மா காந்தியைத் தந்தையாகக் கொண்ட புண்ணிய பூமியில் ஒரு புனிதருக்கு சாதாரண அமைதியான வாழ்க்கை கூட மறுக்கப் படுவதென்பது எந்த வகையில் நியாயம் ? //

    முத்தாய்ப்பாக முடித்த விதம் மிக மிக அருமை,

    உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    ReplyDelete

Kindly post a comment.