Thursday, November 10, 2016

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் சாதனை 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி !




அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தலில் மேல்–சபையான செனட் சபைக்கும், கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கும் இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டு வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை 4 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கமலா ஹாரீஸ்

செனட் சபைக்கு நடந்த தேர்தலில் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்ப்பெண் கமலா ஹாரீஸ் (வயது 52) போட்டியிட்டார். அவர் தனது சக கட்சி வேட்பாளரான லோரட்டா சான்சேஸ்சை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

இதன் மூலம் கமலா ஹாரீஸ், அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிற 6–வது கருப்பு இனத்தவர் என்ற பெயரை பெறுகிறார். ஒபாமா 5–வது கருப்பு இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளில், செனட் சபைக்கு கருப்பு இனப்பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2–வது கருப்பு இனப்பெண் என்ற பெருமையும் அவருக்கு சேர்கிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் அரசு தலைமை வக்கீலாக 2 முறை அவர் பதவி வகித்துள்ளார். 

கமலாவின் தாயார் சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை டொனால்டு ஜமைக்காவை சேர்ந்தவர். 

பிரமிளா ஜெயபால்

பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர், பிரமிளா ஜெயபால் (51). இவரும் தனக்கு அடுத்தபடியாக வந்த தனது சக கட்சி வேட்பாளர் பிராடி வாக்கின்ஷாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரமிளாவுக்கு 57 சதவீத ஓட்டுகளும், பிராடிக்கு 43 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. 

பிரமிளா சென்னையில் பிறந்தவர். தனது 5 வயதில் அவர் குடும்பத்தினருடன் இந்தோனேசியா சென்றார். பின்னர் சிங்கப்பூர் சென்று கடைசியில் அமெரிக்காவில் குடியேறினார். எனவே இவரும் தமிழ்ப்பெண்தான்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

பிரதிநிதிகள் சபைக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி (43). தொழில் அதிபர். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பீட்டர் சிசியானியை தோற்கடித்தார்.

டெல்லியில் பிறந்த இவரது பூர்விகம், சென்னை. அந்த வகையில் இவரும் தமிழர் ஆகிறார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 2–வது இந்து என்ற பெருமை இவருக்கு கிடைக்கிறது.

ரோகன்னா

பிரதிநிதிகள் சபைக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் களம் கண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோகன்னா (40), தனக்கு அடுத்த படியாக வந்த தனது கட்சியின் சக வேட்பாளர் மைக் ஹோண்டாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதே போன்று கலிபோர்னியாவின் சிலிக்கான்வேலியில் இருந்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா, குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்காட் ஜோன்சை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதில் இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டால், 3–வது முறையாக வெற்றி பெற்றவர் என்ற பெருமை கிடைக்கும். அத்துடன் அமெரிக்க பாராளுமன்றத்தில் கூடுதல் காலம் பதவி வகித்த இந்திய வம்சாவளி என்ற பெருமையையும் இவர் பெற முடியும்.

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில், செனட் சபை, பிரதிநிதிகள் சபை தேர்தல்களிலும் டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்று, இரு சபைகளையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.