Thursday, November 10, 2016

பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு தினத்தந்தி தலையங்கம்





125 கோடி மக்களுக்கும் எதிர்பாராத வகையில், மிகவும் அதிர்ச்சிதரத்தக்க ஒரு செய்தியை நேற்று முன்தினம் இரவு திடீரென பிரதமர் நரேந்திரமோடி டெலிவிஷனில் அறிவித்தவுடன், ஒட்டுமொத்த மக்களுக்குமே ‘ஷாக்’ அடித்ததுபோல் இருந்தது. எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல், பிரதமர் நரேந்திரமோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ஊழல் கருப்புபண ஆதிக்கங்களை தகர்த்தெறிய புழக்கத்திலிருக்கும் ‘500, 1,000 ரூபாய் நோட்டுகளை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் செல்லாது’ என்று அறிவித்தார். இந்த ரூபாய்நோட்டுகளை கையில் வைத்திருக்கும் பொதுமக்கள் இன்றுமுதல் டிசம்பர் 30–ந்தேதி வரை எந்த வரம்புமில்லாமல் வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ டெபாசிட் செய்யலாம் என்றும் தெரிவித்தார். 

இதுமட்டுமல்லாமல், நேற்று திடீரென வங்கிகளெல்லாம் அடைக்கப்பட்டது. ஏ.டி.எம்.களும் நேற்றும், இன்றும் அடைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டதால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்குள்ளானார்கள். கடைகளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டது என்று போர்டு போட்டிருந்ததால், வேறு ரூபாய்நோட்டு இல்லாதவர்கள் எல்லாம் பரிதாபமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இது திருமண சீசன். நிலத்தை விற்று, நகையை விற்று திருமண செலவுக்காக கையில் ரூபாய் வைத்திருப்பவர்களின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. அன்றாட செலவுக்காக கையில் பணம் வைத்திருப்பவர்கள் இனி அதை மாற்றுவதற்காக தினமும் வங்கிக்கு அலையவேண்டிய பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது. கருப்புபணத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்க இதுமட்டுமே வழி அல்ல. வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஏற்கனவே கடந்த 1946–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,000, 10,000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் 1954–ம் ஆண்டு 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்விடப்பட்டன. கடைசியாக 1978–ம்ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, கருப்புபண புழக்கத்தை ஒழிக்க 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆக, இந்தமுடிவுகள் எதுவும் கருப்புபணத்தையும், லஞ்சத்தையும் ஒழிக்கவில்லை. ஆக, கருப்பு பணத்துக்கும், ஊழல் பணத்துக்கும் முடிவு கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட அதிரடி முடிவு என்பது எதிர்பார்க்கும் பலனை தருமா? என்பதை உறுதியாக சொல்லமுடியாது.

ஆனால், இந்தமுறை நாட்டின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், பணப்புழக்கம் மட்டும் 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகமாவே இருந்திருக்கிறது. கள்ளநோட்டையும், கருப்புபணத்தையும் ஒழிப்பதற்கு வேறு இன்னும் தீவிரநடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால், பிரதமர் வெளியிட்ட இந்தஅறிவிப்பு வந்தவுடனேயே பங்குமார்க்கெட் பெரும்சரிவைக்கண்டது. ரியல்எஸ்டேட் தொழில் கடும்வீழ்ச்சியைக்கண்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது. ஆக, இப்படி திடீரென்று எடுக்கப்பட்ட இந்த முடிவால், நிச்சயமாக பொருளாதாரநிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும். நாட்டில் புழக்கத்தில் 17 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதில், 13 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றவேண்டிய நிலையில் இதற்கான கூட்டத்தை வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? என்று தெரியவில்லை. இவ்வளவு தொகைக்கும் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கொடுத்து முடிக்கும்வரையில் வர்த்தகம், தொழில்களுக்கான பணபரிமாற்றங்களில் பெரிய தேக்கநிலை ஏற்பட்டு விடும். நாட்டில் முதல்முறையாக பரமஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒட்டு மொத்தமாக அனைத்து பொதுமக்களையும் பெரும் பாதிப்புள்ளாக்கியிருக்கிற இந்த முடிவை திரும்பப் பெற்று, வேறு எளிய முறைகளை கொண்டு வர வேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.