Thursday, September 1, 2016

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்...?



"1975 ஆகஸ்ட் 18... "அபூர்வ ராகங்கள்' படத்துக்காக முதன் முறையாக கேஸ்ரீரா முன் நின்ற ரஜினி, 41 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்து விட்டார். 178 படங்கள், விதவிதமான வேடங்கள், இந்திய நடிகர்கள் யாரும் தொட முடியாத வசூல் என ரஜினி கடந்து வந்த பாதை அவருக்கு மட்டுமே சாத்தியம். 41 ஆண்டுகளை சினிமாவில் பூர்த்தி செய்துள்ள ரஜினிக்கு இந்த முறை தேசிய அங்கீகாரம் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது."

தமிழில் 105, கன்னடத்தில் 10, தெலுங்கில் 17, ஹிந்தியில் 23, மலையாளத்தில் 2, ஆங்கிலத்தில் 1, பெங்காலி 1, சிறப்பு வேடங்களில் 19 என 178 படங்களை முடித்துள்ள ரஜினி, தற்போது ஷங்கர் இயக்கி வரும் "2.0' படத்தில் நடித்து வருகிறார். "எந்திரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை அடுத்து இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

 ஆரம்ப காலங்களில் "ஆறிலிருந்து ஆறுபது வரை', "எங்கேயோ கேட்ட குரல்', "முள்ளும் மலரும்', "புவனா ஒரு கேள்விக்குறி', "படிக்காதவன்' "காளி', "தர்மயுத்தம்'என அவ்வப்போது தனது நடிப்பை வெளிக்கொணரும் வேடங்களை ஏற்று நடித்து வந்த ரஜினி, பின் நாள்களில் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக மாறிப் போனார். 

 பாலசந்தர், மகேந்திரன்,பாஸ்கர், ஆர்.சி.சக்தி, பாரதிராஜா,  எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் மாறுபட்ட ரஜினியை அவ்வப்போது வெளிக் கொண்டு வந்தனர். பின் நாள்களில் வியாபாரத்தை மட்டுமே நிர்ணயிக்கும் நடிகராக மாறிப் போனதால், முத்திரை பதிக்கும் வேடங்கள் அவர் கை நழுவி விட்டன.

 தமிழ் சினிமாவை வியாபார ரீதியாக அணுகும் போது ரஜினிக்கு பல பெருமைகள் உண்டு. ஆனால், நடிப்பு ரீதியாக பார்த்தால் ஒரு பெரும் குறை இருக்கிறது.

 அதாவது அவர் நடிப்புக்காக இதுவரை ஒரு தேசிய விருது கூட பெற்றதில்லை.  கமர்ஷியல் அம்சங்கள், வியாபாரம் என அவரை தமிழ் சினிமா முன் நிறுத்திய விதம் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

 இந்தச் சூழலில் இந்த ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் ரஜினியின் பெயர் இடம் பெற வேண்டும் என விரும்புகிறது ரஜினி தரப்பு. இது அண்மையில் வந்த "கபாலி' படத்தின் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறது ரஜினியின் வட்டாரம். கடந்த 41 வருட சினிமா பயணத்தில் அழுத்தமான நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்த போதும், ஏனோ தேசிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தக் குறை தற்போது "கபாலி'யின் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறார் ரஜினி.

 இதற்காக "கபாலி' படத்தை தேசிய விருது தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. எல்லாம் சரியாக அமைந்தால் தனது 65-ஆவது வயதில் தேசிய விருதை பெறுவார் ரஜினி. பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு அரசு விருதுகளை பெற்றுள்ள ரஜினியின் திரைப் பயணத்தை இந்த முறை தேசிய விருது அலங்கரிக்கப் போவது உறுதி என்கிறார்கள் ரஜினியின் தீவிர விசுவாசிகள்!

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.