Thursday, September 1, 2016

அமைச்சர்களின் சமோசா செலவுரூ. 9 கோடி!உத்தரப் பிரதேச பேரவையில் தகவல் !





உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் தங்களைச் சந்திக்க வருபவர்களுக்கு சமோசா, தேநீர், குலோப்ஜாமூன் உள்ளிட்டவை வாங்கிக் கொடுத்ததற்காக மட்டும் சுமார் ரூ.9 கோடி செலவிட்டுள்ளனர்.

அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். எனினும், இந்த வகையில் முதல்வர் எவ்வளவு செலவு செய்தார்? என்ற தனிப்பட்ட தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தனது அமைச்சர்களின் இந்தச் செலவை நியாயப்படுத்தும் வகையில் பேசிய அகிலேஷ் யாதவ், "தங்களைச் சந்திக்க வருபவர்களுக்கு தேநீர், திண்பண்டம் வாங்கிக் கொடுப்பதற்காக அமைச்சர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.2,500 ஒதுக்கப்படுகிறது. இதுவே அமைச்சர் தங்கள் பணிக்காக வெளிமாநிலத்துக்குச் சென்றால் நாளொன்றுக்கு ரூ.3,000 வரை செலவிட அனுமதியுள்ளது. இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 8 கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 474 ரூபாய் செலவாகியுள்ளது' என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் அருண் குமார் கோரி தேநீர், திண்பண்டச் செலவாக அதிகபட்சமாக ரூ.22,93,800 செலவிட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது ஆஸம் கான் ரூ.22,86,620 செலவு செய்துள்ளார்.

இந்தப்பட்டியலில் குழந்தைகள் நலன், தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் கைலாஷ் செளராசியா மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் ரூ.22,85,900-க்கு தேநீர், திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள சிவ்பால் யாதவ் மட்டும் இந்த வகையில் ஒரு பைசாவைக் கூட செலவு செய்யவில்லை. மூத்த அமைச்சர்களான ராம் கரண் ஆர்யா, ஜகதீஷ் சோன்கர் உள்ளிட்டோர் தேநீர், திண்பண்டத்துக்காக செலவிட்டது, ரூ.21 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு மட்டுமே அமைச்சராக இருந்த மகளிர் நலத்துறை அமைச்சர் சதாப் பாத்திமா ரூ.72,500 செலவிட்டதாக கணக்குக் காண்பித்துள்ளார்.

தேநீர், தின்பண்டத்துக்காக அமைச்சர்கள் ரூ.9 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியானது உத்தரப் பிரதேசத்தில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரீஷ்சந்த் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில், "மாநிலத்தில் சுகாதாரம், கல்வி, நலத் திட்டங்களில் அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்ட நிலையில், அமைச்சர்கள் தங்கள் விருந்தினர்களுக்கு திண்பண்டம் வாங்கிக் கொடுக்க கோடிக்கணக்கான ரூபாயை வீணாகச் செலவிட்டுள்ளனர். இது மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடிக்கும் செயல்' என்றார்.

இது தொடர்பாக விளக்கமளித்த ஆளும் சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, "அமைச்சர்களைச் சந்திக்க வருபவர்களுக்கு தேநீர், திண்பண்டம் கொடுத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றுதான். துறைரீதியாக அதிகாரிகள் கூட்டங்கள் நடைபெறும் போதும் தேநீர் வழங்கப்படுகிறது. இதற்காகவே பணம் செலவிடப்பட்டுள்ளது' என்றார்.

நன்றி :- தினமணி



0 comments:

Post a Comment

Kindly post a comment.