Thursday, September 1, 2016

சூரியசக்தி பம்ப்செட்டுகளுக்கு 80% அரசு மானியம் !



முதல்வர் ஜெயலலிதா 110ம் விதியின் கீழ் 4 அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

* இந்த ஆண்டு 10 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார்  பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும். 500 விவசாயிகள் பயன்  அடையும் வகையில் ரூ.21  கோடியே 90 லட்சம் செலவில் இத்திட்டம்  செயல்படுத்தப் படும். நெல் நடவு இயந்திரங்கள், பவர் டில்லர், சுழற் கலப்பை, களையெடுக்கும் கருவிகள்,  டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயக்கப்படும் கருவிகள் உள்ளிட்ட வேளாண்  இயந்திரங்களை விவசாயிகள் வாங்க ரூ.31 கோடியே 6 லட்சம் மானியம்  வழங்கப்படும். 

* உலக முதலீட்டாளர்கள்  மாநாட்டில்  98  புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடுகள்  ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர் கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவரை 64 நிறுவனங்கள் ரூ.87,062 கோடி  முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை ரூ.25,020 கோடியே 48 லட்சம் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. ஏனைய நிறுவனங்கள் தேவையான முன்ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளன. தொழில்  வளர்ச்சியில் தமிழ்நாடு மேலும் மேன்மை அடையும் வகையில், உயிரி தொழில்நுட்ப  அபிவிருத்தி மையம் ரூ.20 கோடி செலவில் சென்னை தரமணியில் உள்ள டைசல்  பயோபார்க் நிறுவனத்தில் நிறுவப்படும்.  

* பதிவுத்  துறையில் ஆவணப் பதிவு தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்படும். ஆவணதாரர்களின்  விரல் ரேகைப் பதிவுகள் மூலம் அத்தாட்சி செய்தல் மற்றும் அவர்களின் அலைபேசி  எண்கள் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றைப் பெற்று, குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால் போலி ஆவணப்பதிவு மற்றும் ஆள் மாறாட்டம் தடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாக உரிய  கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால் இணையதளம் மூலமாகவே அவற்றை வழங்க வகை  ஏற்படும்.  

* கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் போது அவற்றை காப்பாற்ற  2015-16ம் ஆண்டு நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை திட்டம் 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், மேலும் 27  மாவட்டங்களில் ரூ.37 கோடியே 88 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

நன்றி :- தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.