Monday, August 29, 2016

அமெரிக்காவில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா



அமெரிக்காவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரையில் உள்ள அவரது வீட்டின் முன்பு மனைவி சனிக்கிழமை தர்ணாவில் ஈடுபட்டார்.

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் ஜெனிபா ராணி(32). இவருக்கும் தபால்தந்தி நகரைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவருக்கும் 2005-இல் திருமணம் ஆனது. சிவசங்கரன் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மிதுன் பாலாஜி(9) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிவசங்கரன் அமெரிக்காவில் டயானா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. எனவே, அவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஜெனிபா ராணி, தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சிவசங்கரன் வீட்டின் முன்பு மகன் மிதுன் பாலாஜியுடன் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு சனிக்கிழமை தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ஜெனிபா ராணி கூறியது: திருமணத்தின் போது 150 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் அளித்தோம். அனைத்தையும் பறித்து என்னையும் எனது மகனையும் வீட்டை விட்டு துரத்திவிட்டனர். பொறியாளரான எனது கணவர் சிவசங்கரன் அமெரிக்காவில் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் டயானா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் தற்போது 3 குழந்தைகள் உள்ளன. இதனால் என்னிடம் விவாகரத்து கேட்டு எனது கணவர் மற்றும் வீட்டார் துன்புறுத்தினர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.

ஜெனிபா ராணியின் போராட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

https://news.google.co.in  தினமணியிலிருந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.