Monday, August 29, 2016

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் இயற்கை எய்தினார்

முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் காலமானார்



சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் நேற்று இரவு 9.48 மணிக்குக் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூரின் ஆறாவது அதிபரும் நீண்டகாலம் அந்தப் பதவியில் இருந்த வருமான திரு நாதனின் உயிர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் பிரிந்தது. 1999 முதல் 2011 வரை இரண்டு முறை சிங்கப்பூர் அதிபராக திரு நாதன் பதவி வகித்தார். திரு நாதனின் மரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலக அறிக்கை பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரது மரணம் அறிந்து மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் மறைந்த அவரது குடும்பத்தாருக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் கூறியது. கடந்த ஜூலை மாதம் 92 வயதை எட்டிய திரு நாதன், சென்ற மாதம் 31ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவி ஏற்கும் முன் திரு நாதன் பொதுச் சேவையில் 40 ஆண்டுகாலமாக தனிச்சிறப்புமிக்க வகையில் பணியாற்றினார். தொழிற் சங்கங்கள், பாதுகாப்பு, அரச தந்திரம் என பல்வேறு துறைகளில் அவர் பங்காற்றினார். 1962ஆம் ஆண்டில் திரு நாதன் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தொழிலாளர் ஆய்வுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். வேலைநிறுத்தங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைக் கையாண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தொழிற் சங்கங்களில் கம்யூனிச சார்பு சக்திகள் ஊடுருவி இருந்தன. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிலும் திரு நாதன் 1961லிருந்து 1971 வரை, பின்னர் மீண்டும் 1979லிருந்து 1982 வரை என இரண்டு முறை முதன்மை நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றி னார். சிங்கப்பூரின் பாதுகாப்பு, உளவுத் துறைப் பிரிவின் தலைவராக 1971ல் இருந்து 1979 வரை இவர் பணியாற்றினார். அப்போது லாஜு என்ற பயணிகள் படகு கடத்தல்காரர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில், பிணை பிடித்து வைக்கப்பட்ட பயணிகளை விடுவிக்க தான் பிணையாளியாக விமானத்தில் குவைத் வரை கடத்தல் காரர்களுடன் சென்றார்.

பொதுச் சேவையில் இருந்து 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபின் திரு நாதன் ஊடக நிறுவனமான ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்பட்டார்.



தமிழ் ஒலிக்க உணர்வுபூர்வ பிரியாவிடை

தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு’ எனும் தமிழ்த் திரைப்பாடலுடன் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிபர், பிரதமர், அமைச்சர்கள், பிரமுகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் திரு நாதனுக்குப் பிடித்தமான ‘பொற்காலம்’ திரைப்படப் பாடல் முழுமையாக ஒலித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண், தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்துப் பொம்மை செய்வதாக இயற்றப்பட்டிருக்கும் அந்தப் பாடலைப் போல பல்வேறு இனங்களும் பாரம்பரியங்களும் ஒன்றிணைந்து இன்று நாம் காணும் சிங்கப்பூர் இருப்பதாக திரு நாதன் உருவகப்படுத்திப் பார்த்தார் என்று கூறி, அப்பாடலை அறிமுகம் செய்தார் அரசாங்கச் சேவைத் தலைவரும் இறுதிச்சடங்கை வழிநடத்தியவருமான பீட்டர் ஓங். அதைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியன் லூங் உட்பட எழுவர் திரு நாதனுக்குப் புகழுரை வாசித்தனர். தமது புகழுரையில், திரு நாதன் ஒவ்வொரு முறையும் தன்னைவிட நாட் டிற்கே முன்னுரிமை அளித்ததாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு



சிங்கப்பூரின் நீண்டகால அதிபராக சேவையாற்றிக் கடந்த திங்கட்கிழமை இன்னுயிர் நீத்த திரு எஸ் ஆர் நாதனின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற இல்லத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம், திரு நாதனுக்கு நெருங்கிய தொடர்புடைய சிட்டி ஹால், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல், என்டியுசி மையம் ஆகிய இடங்கள் வழியாகச் சென்று பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் நிறைவடையும் என்று இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கை தெரிவித்தது.

பிறகு பல்கலைக்கழகக் கலாசார நிலையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திரு நாதனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். இறுதி ஊர்வலத்தின்போது சாலை யின் இருபுறமும் உள்ள நடைபாதை களில் பொதுமக்கள் பாதுகாப்பாக அணி வகுத்து நிற்கும்படியும் ஊர்வலத்திற்கும் மற்றவர்களுக்கும் இடையூறு ஏற்படும் படியாக எந்த ஒரு பொருளையும் வீசவோ அல்லது ஆளில்லா விமானங்களை இயக்கவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இறுதிச் சடங்கில் திரு நாதனின் குடும்பத்தார், அதிபர், பிரதமர், அமைச் சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். அரசு மரியாதையுடனான இறுதிச் சடங்கின்போது பிரதமர் லீ சியன் லூங், பேராசிரியர் டாமி கோ, திரு ஸைனல் அபிதின் ர‌ஷீத், திருவாட்டி ஜென்னி சுவா, திரு ராமசுவாமி அத்தப்பன், திரு சான் சுன் சிங், திரு கோபிநாத் பிள்ளை ஆகியோர் புகழுரை ஆற்றவிருக்கின் றனர்.

நாடாளுமன்ற இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே. உடன் அவரது துணைவியார் அகி (இடமிருந்து 2வது) பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 3வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்


0 comments:

Post a Comment

Kindly post a comment.