Tuesday, August 30, 2016

முல்லைப் பெரியாறு வழியில் அட்டப்பாடி! -தினமணி தலையங்கம்



முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு இன்னல் தந்தது போதாதென்று, இப்போது சிறுவாணி நதியிலும் பிரச்னை ஏற்படுத்தத் திட்டமிடுகிறது கேரள அரசு. ரூ.900 கோடி செலவில் அட்டப்பாடி அருகே முக்காலி என்ற இடத்தில் 51 அடி உயரம் கொண்ட அணையைக் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அணை கட்டினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடத்த மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது.

அட்டப்பாடி பாசனத் திட்டம் என்ற பெயரில் திட்டமிடப்படும் இந்த அணையைக் கேரள அரசு கட்டினால் பயனடையப் போகிறவர்கள் யார்? நிச்சயமாக அங்குள்ள பழங்குடி மக்கள் அல்லர். அவர்களது விவசாய நிலங்களும் அல்ல. அங்கே பண்ணைகள் வைத்துள்ள ஒரு சில நிறுவனங்களும், சில குடிநீர் போத்தல் நிறுவனங்களும் மட்டுமே! இதனால் கிடைக்கப்போகும் புனல் மின்சாரத்தின் அளவு மிகக் குறைவு.

அட்டப்பாடி ஏற்கெனவே குடிநீர் போத்தல் நிறுவனங்களின் மனதைக் கொள்ளைகொண்ட இடம். ஒரு பன்னாட்டு மென்பான நிறுவனம் தனது ஆலையை அங்கு நிறுவ முற்பட்டபோது, கோவை மாவட்டச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், கேரள அமைப்

பினரும் எதிர்த்தனர். அவர்கள் காட்டிய முனைப்பான நடவடிக்கையால் அத்திட்டம் அப்போது கைவிடப்பட்டது. ஆனால் தற்போது அரசாங்கமே அணை கட்டுவது இவர்களுக்கு ஆதரவாகத்தான் முடியுமே தவிர, அட்டப்பாடி பழங்குடியினருக்கு நன்மை பயக்காது.

அட்டப்பாடியில் கேரள அரசு அணை கட்டினால், முதலில் பாதிக்கப்படப்போவது கோவை மக்களின் குடிநீர் தேவைதான். கோவையில் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி ஏறக்குறைய இல்லையென்றே ஆகிவிட்ட நிலையில், கோவை மக்கள் குடிநீருக்காக திண்டாடியபோது, தமிழக அரசு கேரள அரசுடன் ஒப்பந்தம் போட்டு சிறுவாணி அணையைக் கட்டியது. அணைக்கான முழுச்செலவையும் தமிழக அரசு ஏற்றது. கேரள அரசு அணையைக் கட்டித் தந்தது. இந்தத் திட்டம் 1980-களில் சுமார் எட்டு லட்சம் மக்களுக்கு சுவையான குடிநீரைத் தந்தது. அன்றைய கேரள அரசு இத்திட்டத்துக்கு இணங்கக் காரணம் கோவையில் வசிப்போரில் மூன்றில் ஒரு பங்கு கேரளத்தவர் என்பதுதான்.

இந்த சிறுவாணி அணை குடிநீர் திட்டத்தின் சிறப்பு என்னவெனில், அணையிலிருந்து நகரின் மையப்பகுதி வரை நீரேற்று இயந்திரம் இல்லாமல், இயல்பான புவியீர்ப்பு விசையிலேயே குடிநீர் வந்து சேர்வதுதான். மின் தேவை கிடையாது. அத்தனை நுட்பமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தால் அன்று கோவை மாநகரத்தின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

கோவையின் மக்கள்தொகை பெருகியபோது இந்தத் திட்டத்தால் அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில், பில்லூர் அணையைக் கட்டத் தொடங்கியது தமிழக அரசு. புனல் மின் நிலையமாகவும் குடிநீர்த் திட்ட

மாகவும் இந்த அணை நீர் பயன்படுத்தப்படுகிறது. பில்லூர் குடிநீர் திட்டத்தால் சுமார் 15 லட்சம் மக்கள், அதாவது கோவை மாநகராட்சியின் விரிவாக்கம் பெற்ற பகுதிகளில் வசிப்போர் பயனடைந்துள்ளனர்.

தற்போது அட்டப்பாடியில் அணை கட்டுவதால் முதலில் பாதிக்கப்படுவது கோவை மக்கள். சிறுவாணி அணைக்கு நீர் வரத்து குறையும். அதேபோன்று, பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு வரும் நீரும் குறையும். ஆகவே பில்லூர் அணையின் புனல்மின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, பில்லூர் குடிநீர்த் திட்டமும் பாதிக்கப்படும். பவானி ஆற்றினால் பாசன வசதி பெறும் மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதி விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்.

இவ்வளவு பேரின் வாழ்க்கையில் இருள் சேர்த்து, அட்டப்பாடியில் எந்த பழங்குடியின மக்களுக்காக இந்தப் பாசனத் திட்டத்தை செயல்படுத்தப்போகிறது கேரள அரசு? அதிலும் குறிப்பாக, கேரளத்தவர் அதிகம் வசிக்கும் கோவை மாநகருக்குக் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதால் கேரள அரசுக்கு என்ன லாபம்?

இந்த அணை தொடர்பாக தமிழக அரசு 2012 ஜூன் மாதமே கடிதம் எழுதியது. தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பியதாக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் பதிவு செய்திருப்பது தவறானது என்று தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதற்கு பிறகும், தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் கடிதத்திற்கு "ஏன் பதில் அளிக்கவில்லை, ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்று கேட்பது பொருந்தா வாதம்.

தமிழக அரசு கடிதம் அனுப்பிய 2012 ஜூன் மாதத்தில் மத்தியிலும், கேரளத்திலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியில் இருந்தன. தனது கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலத்திற்கு சாதகமாக அன்றைய மத்திய அரசு நடந்து கொண்டிருந்தால் அதில் வியப்படைய எதுவும் இல்லை.

இந்த விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேச வேண்டும். குறிப்பாக, கோவையின் நூற்பாலைத் தொழிலாளர்களால் மிகப்பெரும் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அணை கட்டப்பட்டால் பாதிக்கப்படப்போவது தங்கள் தொழிலாளர்கள்தான் என்ற உணர்வுடன் கேரளத் தோழர்களிடம் பேச வேண்டிய சமூகப் பொறுப்பு இருக்கிறது.

தமிழகத்தில் தங்களுக்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை என்பதால் முல்லைப் பெரியாறு பிரச்னையை முன்வைத்து காங்கிரஸýம் இடதுசாரிகளும் கேரளத்துக்கு சாதகமாக அரசியல் நடத்தியதுபோல, இப்போது பா.ஜ.க.வும் இடதுசாரிகளும் அட்டப்பாடி விவகாரத்தில் நடந்துகொள்கிறார்களோ என்கிற அச்சம் மேலெழுகிறது. இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழக பா.ஜ.க.வுக்கும் இருக்கிறது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.