Tuesday, August 30, 2016

போதைக்கு அடிமை : தடம் மாறும் பள்ளி மாணாக்கர்கள் !





தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

போதைக்கு அடிமையாவதில் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, வழிகாட்டுதல் இன்றித் தத்தளிக்கும் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் உள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் நாமக்கல், கடலூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வகுப்பறையிலும் பொது இடங்களிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, மாணவிகளும் மது போதையில் மயங்கிக் கிடந்தனர்.

இந்த மாணவர்களின் செயல்கள் வெளியில் தெரிந்ததால், அடையாளம் காணப்பட்டனர். ஆனால், வெளியில் தெரியாமல் போதைக்கு அடிமையான மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் எத்தனை மாணவர்களுக்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தெரியும். ஆனால், இத்தகைய மாணவர்களின் செயல்களை ஆசிரியர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

இப்போது நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களில் 5 முதல் 7 சதவீதம் பேருக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இதைத் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிலையை விளக்கும் புள்ளிவிவரம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

தனியார் பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒருசில தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மது மற்றும் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

இப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 3 மாவட்டங்களுக்கு ஓர் உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரால் பெரும்பாலான பள்ளிகளுக்குச் செல்ல முடிவதில்லை.

இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் உளவியல் ஆலோசகரை நியமித்து, மாணவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்குவதோடு, மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை படக் காட்சிகள் மூலம் விளக்க வேண்டும் என்றார் அவர்.

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் பிரவீண்குமார் கூறியதாவது:

இப்போது பள்ளி மாணவர்களிடையே மதுப் பழக்கம் மட்டுமல்லாது, விநோதமான போதைப் பழக்கங்களும் ஏற்பட்டுள்ளன. ஒயிட்னர், இருமல் டானிக், பெட்ரோல், சைக்கிள் மற்றும் மோட்டார்சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் பசை போன்றவற்றை பல்வேறு வகைகளில் போதைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற போதைப் பழக்கத்தால் மாணவர்களின் உடல் வலிமை பறி போகிறது. மன வலிமையும் பறிபோவதுடன், பிற்காலத்தில் மன நோயாளிகளாக மாறும் நிலைமையும் உள்ளது. போதைப் பழக்கத்தால் மாணவர்களின் இருதயம், நுரையீரல் பாதிப்படைந்து, விரைவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் போதைக்கு அடிமையான மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவது இல்லை. இத்தகைய மாணவர்களைக் கண்காணித்து அவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர் விடுமுறையில் மாணவர்கள் இருந்தால், பெற்றோரை வரவழைத்து அதற்கான காரணங்களைக் கேட்டறிய வேண்டும்.

சில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் பெற்றோர் நேரில் வந்து விடுமுறைக்கான காரணத்தை எழுதிக் கொடுத்தால் மட்டுமே அனுமதிக்கும் நிலை உள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வாய்மொழியாகக் கூறும் பெரும்பாலான பொய்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

எனவே, அரசுப் பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவர்களைக் கண்காணித்து, அதற்கான காரணத்தை பெற்றோரிடம் கேட்கவோ அல்லது பெற்றோர் கவனத்துக்குக் கொண்டு செல்லவோ ஆசிரியர்கள் முன்வர வேண்டும். மது மட்டுமல்லாமல், போதைக்குப் பயன்படுத்தும் இதர பொருள்களும் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன. பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில்கூட இந்தப் பொருள்கள் கிடைக்கின்றன. எனவே, பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் இதுபோன்ற பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.

தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இத்தகைய பொருள்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். போதை தரும் பொருள்களை சிறுவர்களுக்கு வழங்கினால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளைத் தொடர்ந்து சோதனை செய்யவும், கண்காணிக்கவும் கல்வித் துறை, காவல் துறை, பெற்றோர்- ஆசிரியர் கழகம், உணவு பாதுகாப்புத் துறை போன்றவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை கட்டாயம் குழுவாக இணைந்து மாணவர்கள் விளையாட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், இதுபோன்ற போதைப் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதைத் தடுக்க முடியும்.

இவை அனைத்தையும்விட மிக முக்கியானது பெற்றோர் மதுப் பழக்கம் இல்லாதவராகவும், புகையிலைப் பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும், பெற்றோரின் செயல்களையே குழந்தைகளும் பின்பற்றுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 2 மாவட்டங்களுக்கு ஓர் உளவியல் ஆலோசகரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது, அதற்கான நடைமுறைகளை அரசு தொடங்கியுள்ளது என்றார் அவர்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.