Wednesday, August 31, 2016

தாய்மண் உயிர்மண்ணாக வேண்டும்!

"தாய் மண்ணே வணக்கம்' என்றால் "வந்தே மாதரம்' என்றுணர்ந்து நாட்டைக் காக்கும் நாட்டுப்பற்று என்று பொருள் கொண்டு வாழவேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற இந்திய எல்லையில் காவல்புரிந்து வீரமரணத்திற்குத் தயாராகும் ராணுவ வீரர்கள் நாட்டுப்பற்றுக்கு அர்த்தமாகிறார்கள்.

இனத்தாலும், மொழியாலும் துண்டு துண்டாகச் சிதறிக்கிடந்த இந்திய ராஜ்யங்களை ஒரே குடையின் கீழ் அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்ந்த விடுதலைப் போரினால் நாட்டுப்பற்றுக்குரிய "வந்தே மாதரம்' என்ற சொல்லாட்சி பிறந்து ஒரே இந்தியாவை அர்த்தமாக்கியது.

எனினும் மதத்தின் பெயரால் பாகிஸ்தான் தனி நாடாகப்பிரிந்து காஷ்மீரைப் பிரச்னையாக்கிவிட்டது. மொழியைப் பிரச்னையாக்கி பாகிஸ்தானிலிருந்து பிரிந்த கிழக்கு வங்கம், வங்கதேசம் ஆனது. இவ்வளவு நிகழ்ந்தும் இந்திய ஒருமைப்பாடு சீர் குலையவில்லை. பிரிந்தவர்கள் பிரியட்டும். ஒருங்கிணைந்தவர்களின் ஒற்றுமையே ஒருமைப்பாடு.

அகண்ட பாரதத்தை பிரிட்டிஷ் அரசு ஆளுவதற்கு முன்பே மகதத்தில் தோன்றிய சந்திரகுப்தர், அசோகர், மத்திய ஆசியாவையும் இணைத்து ஆண்ட கனிஷ்கர், குப்தர்கள், ஹர்ஷவர்த்தனர், பின்னர் மொகலாயர்களின் பேரரசர் அக்பர் காலங்களிலேயே இந்திய ஒருமைப்பாட்டின் வேர் எல்லா மொழிவாரி மாநில மண்ணிலும் வேரூன்றியிருந்தது. அந்தநாளில் இன்று போல் போக்குவரத்துகளும் செய்திப்பரிமாற்ற சாதனங்களும் இல்லை.

வடவர் என்றும் தென்னவர் என்றும், ஆரியர் என்றும் திராவிடர் என்றும் பேதங்கள் கற்பிக்கப்பட்டாலும், இந்தியக் கலாசார ஒருமைப்பாட்டில் அப்படிப்பட்ட பேதங்கள் தூளாகிவிட்டன. காரணம் சகிப்புத்தன்மை மட்டுமல்ல, மாற்றுக் கலாசாரத்தைத் தமதாக்கிக் கொள்வதில் உள்ள ஆர்வமும் செயல்பாடும்கூட.

உடை, உணவு, ஊடகங்களில் சிறப்பாக பெரியதிரை, சின்னத்திரைகளில் இந்திய ஒற்றுமையை கவனிக்கலாம். உடை என்று எடுத்துக் கொண்டால் நீண்ட அங்கி - அதாவது ஷெர்வானி, குர்த்தா, பைஜாமா ஆகியவை ஆரிய - இஸ்லாமிய மரபு. அவற்றைத் தமிழர்கள் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் திராவிடர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதைவிட ஆரிய - திராவிட ஒருமைப்பாட்டைப் பெண்கள் உடைகளில் பார்க்கலாம். முழுப்புடவை உடுத்தும் கலாசாரம் திராவிடப் பெண்களிடம் உண்டு.

வடநாடு - ஆரியப் பெண்கள் பாவாடை, அரைப்புடவையுடன் குங்கட், அணிவர். இன்று வடக்கத்திப் பெண்கள் திராவிடப் பண்பாடாகிய முழுப்புடவையை உடுத்துகின்றனர். காஞ்சிபுரம் புடவைகளுக்கு வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு. அதைவிடச் சிறப்பான விஷயம் ஆரியப் பண்பாடு போற்றும் பஞ்சாபி உடையான சுடிதார் - துப்பட்டா, தமிழ்நாட்டில் பிரபலம். 16 வயதுப் பெண்களிலிருந்து 60 வயதுப் பெண்மணி வரை எல்லாப் பெண்களும், சிறுமிகளும்கூட சுடிதார் - துப்பட்டா அணிவது ஒரு புதிய மரபு.

உணவு என்று பார்த்தால் ஈரானியம் அல்லது ஆரியப்பண்பாட்டில் விளைந்த பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, பூரி ஆகியவற்றைத் தமிழர்கள், திராவிடர்கள் ஏற்றுக்கொண்டதைப்போல் நமது இட்லி, தோசை, வடை அங்கு பிரபலம். ஜிலேபி, லட்டு, குலாப் ஜாமுன் போன்ற ஆரியச்சிறப்பு திராவிடத்தில் மணம் வீசுகிறது. இதைவிடச் சின்னத்திரையும், பாலிவுட் படங்களும், சினிமா இசையிலும் உள்ள ஒருமைப்பாடு இன்னமும் சிறப்பு.

தொலைக்காட்சித் தொடர்களில் ஹிந்தி சானல்களே கொடிகட்டிப் பறக்கின்றன. சமூகக் கதையாக இருந்தாலும் சரி, புராணக் கதைகளாயிருந்தாலும் சரி சக்கைபோடு போடுகின்றன. ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்கள் இன்று எல்லாத் தமிழ் சேனல்களிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பாகின்றன. தமிழ் கற்ற ஹிந்தி பண்டிதர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வட இந்தியாவில் பட்டி தொட்டிகளில் திரையிடப்படுகின்றன.

இவையெல்லாம் இந்தியத் தாய் மண்ணின் தனித்தன்மை. வேற்றுமைகள் பல இருப்பினும் இந்திய ஒருமைப்பாடு போற்றப்பட்டுத் தாய்மண் காக்க, மொழிவாரிகள் ஒருங்கிணைந்து வாழ்வதுதான் இந்தியச் சிறப்பு.

உலக வரலாற்றில் இரண்டு உலகப்போர்கள் நிகழ்ந்தன. முதல் உலகப்போர் காலகட்டத்தில் கெய்சர் எட்டு லட்சம் சிறைக்கைதிகளை அமோனிய விஷவாயுவைச் செலுத்திக் கொன்றார். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் ஆஷ்விச் என்ற இடத்தில் பிணம் எரிக்க மாபெரும் சுடுகாடு ஆலை நிறுவிய ஹிட்லர், நாசிசம் என்ற பெயரில் 16 லட்சம் யூதர்களை நிர்வாணமாக்கி அடைத்துவைத்துச் சிறையில் பூட்டி அமோனிய வாயு செலுத்தி மூச்சுத்திணறிச் செத்தவுடன், மறு அறையில் தகனம் செய்தார்.

மனிதனையே கொல்லும் ஆற்றல் உள்ள அப்படிப்பட்ட அமோனிய வாயுவிலிருந்து யூரியா உரம் தயாராகிறது. பாஸ்வரம், பொட்டாசியம் ஆகிய வெடி உப்பிலிருந்து பாஸ்பேட்டும், பொட்டாஷ் உரங்களும் தயார் செய்து இந்த விஷக்கலவையே விவசாயத்தில் பயனாகும் என்.பி.கே. கலப்பு உரம். இப்படிப்பட்ட விஷங்கள் தாய்மண்ணில் வழங்கப்படுகின்றன.

விஷமுள்ள ரசாயன உரங்கள் பயன்படுத்துவதன் காரணமாக மண்ணுக்குள் ஏற்படும் வெப்ப ஆற்றலால் மண்ணில் உள்ள உலோகச் சத்துக்கள் கரைந்து பயிருக்கு ஏற்றித்தருகிறது. விளைச்சலும் கூடுகிறது. ஆனால், மண்ணில் உள்ள வளம் வேகமாகச் சுரண்டப்படுகிறது. கரையாத ரசாயன உரம் மண்ணை விஷமாக்குகிறது. சொல்லப்போனால், மனித இனத்தை அழிக்கும் ஆற்றல் கொண்ட எரிசக்திகள் கொண்டு உயிர்மண் அழிக்கப்படுகிறது.

ரசாயன உரம், பூச்சி மருந்துகளால் மண் விஷமாவதையும், விளைபொருள்கள் விஷமாவதையும் உலகத்துக்கு முதலில் எடுத்துக்காட்டிய பிரிட்டிஷ் வேளாண் விஞ்ஞானி, ஆல்பர்ட் ஹாவார்டு இந்தியாவில் பணி செய்து கொண்டிருந்தார்.

உலகப்போர் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரசாயன விவசாயம் மேலோங்கியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ரசாயன விவசாயத்தை அறிமுகம் செய்ய இந்தியாவுக்கு வந்தவர், ரசாயனத்தால் உயிர்மண், அழிவதையும் விளைபொருள்கள் விஷமாவதையும் கண்டு மனம் வெதும்பி தாய்மண்ணைக் காப்பாற்றுங்கள் என்று உயில் எழுதினார்.

அவர் எழுதிய வேளாண்மை உயில் என்ற நூல், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமானது. பிரிட்டிஷ் இந்திய அரசு இவரின் உத்தியோகத்தைப் பறித்துத் தாய்நாடு செல்லும்படி உத்தரவிட்டது. ஆனால் இவரோ, இந்தியாவில் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களை எல்லாம் கற்றுக்கொண்டு சொந்த நிதியில் பயிற்சியும் சோதனைகளும் செய்த பின்னரே இங்கிலாந்து சென்று தன் கொள்கையைப் பரப்பினார். அப்போது இரண்டாவது உலகப்போரின் உச்சகட்டம். ஐரோப்பா முழுவதையும் வென்ற ஹிட்லர் ரஷியப் படையெடுப்புக்குத் தயாரானார்.

ஐரோப்பா முழுவதும் நாசி எதிர்ப்பு இயக்கம் வலுப்பெற்ற வேளையில், தாய்நாட்டைக் காப்பாற்றுவது, தாய்மண்ணையும் விஷத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய ஈவா பெல்ஃபோர் என்ற பெண்மணி "உயிர் மண்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினார்.

ஈவா பெல்ஃபோர் ஒரு விவசாயி. சுவாச கோச நோயாளி. வாத நோயாலும் பாதிக்கப்பட்டவர். இவர் ஹாவார்டின் பேச்சால் கவர்ச்சியுற்று அவரைத் தன் பண்ணைக்கு வரவழைத்து கம்போஸ்டிங் - அதாவது மாடு, குதிரை சாணம், அறுவடைக் கழிவுகள் கொண்டு மக்கு உரம் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்து கொண்டு இயற்கை வழியில் கோதுமை சாகுபடி செய்து, அதே கோதுமை மாவில் முழுதானிய ரொட்டி தயாரித்து உண்டதின் பலன் சுவாச கோசம் நோயிலிருந்தும் விடுதலை, வாத நோயிலிருந்தும் விடுதலை

யானார். இயற்கை விவசாயம் மண்ணை மட்டும் காப்பாற்றவில்லை. நஞ்சில்லா உணவு மூலம் நோயையும் குணப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களை நன்கு மக்கு உரமாக மாற்றிப் பயன்படுத்தினால் பயிர்கள் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தியும் பெறுகிறது என்று அவர் "உயிர் மண்' என்ற நூல் மூலம் உலகுக்கு அறிவித்தார்.

அதுமட்டுமா? "நாசிசத்தின் பெயரால் ஒரு கொடுங்கோலன் ஐரோப்பாவை வென்றதாக மமதை கொண்டு இயற்கையையும் வென்று விட்டதாக மனப்பால் குடிக்கிறான். இயற்கை தன் போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. வளத்தைச் சுரண்டும் மனிதர்களை இயற்கை சும்மா விட்டுவிடாது. நாட்டையும் மண்ணையும் சுரண்டும் மனிதனுக்கு தண்டனை நிச்சயம்' என்று துண்டுப் பிரசுரம் வினியோகித்த அந்தப் பெண்மணி ஒரு தீர்க்கதரிசி என்பது இன்று புரிகிறது.

புவி வெப்பமாகிறது. வேளாண்மை வளம் குன்றுகிறது. மனிதன் தன் சுயநலத்திற்காக உயிர்க்காற்றையே பலியிடுகிறான். வளர்ச்சியின் பெயரால் வனங்களும், வன வேளாண்மையும் அழிந்து வருகின்றன. தட்வெப்பம் தடம் மாறிவிட்டது. பனி மலைகள் உருகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலை நீடித்தால் உலகமே அழியும் என்றெல்லாம் சூழலியல் நிபுணர்கள் பேசுகிறார்கள். இதைப்பற்றி 75 ஆண்டுகளுக்கு முன்பே பெல்ஃபோர் அம்மையார் எச்சரித்துள்ளார்.

இன்று நாம் காண்பது என்ன? மனிதனின் இயற்கை வளச் சுரண்டலைக் கண்டு பொறுக்காத இயற்கை பொங்கி எழுந்துவிட்டது. சுனாமி, காலம் தவறிப் பெய்யும் மழை, ஊழிபோல் வெள்ளம் அல்லது அதற்கு நேர்மாறான வறட்சியின் வெப்பக் கொடுமை.

வனங்களை அழித்த மனிதன் வாங்கிக் கட்டிக் கொள்கிறான். இந்நிலையில் உலகநாடுகள் ஒன்று கூடி காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், வெப்ப நிலையைக் கட்டுக்குள் வைக்கவும் பேச்சு நடத்துகின்றன. செயலில் முன்னேற்றம் இல்லை.

எனினும், பூமியைக் குளிர்விக்க மரங்களை நடவேண்டும். வன வேளாண்மையை வளர்க்க வேண்டும். 1994 ரியோ புவி மகாநாடு மண்ணை வளப்படுத்தி எரிசக்தியை மிச்சப்படுத்தும் வளம் குன்றா இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தது.

இதன்பலனாக, இது நாள்வரை பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயன விவசாயத்தை வளர்த்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இன்று உயிர்மண்ணைக் காப்பாற்றும் இயற்கை விவசாயத்திற்கும் வழிகாட்டத் தொடங்கியுள்ளார்.

உயிர் மண் என்றால் கோடானுகோடி நுண்ணுயிரிகள் அடங்கிய மண். தாய் மண்ணில் இயற்கை இடுபொருள்களைக் கொண்டுதான் உயிர்மண்ணை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட உயிர் மண்ணில் விளைந்த உணவுதான் மனிதனை நோயின்றி வாழ வழிவகுக்கும்.

தாய் மண்ணை உயிர் மண்ணாக மாற்றுவதுதான் விவசாயத்தின் இலக்கு. அப்பணி வெறும் பணியல்ல; தேச பக்தியின் அடையாளம்.கட்டுரையாளர்:

இயற்கை விஞ்ஞானி.

ஆர்.எஸ். நாராயணன்

நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.