Wednesday, August 31, 2016

போலி சாதனை: இந்தியத் தம்பதிக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 10 ஆண்டுகள் தடை !



உலகிலேயே மிகப் பெரிய சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளதாக போலியான புகைப்படத்தைக் காண்பித்து, சான்றிதழ்களை பெற்றதாகக் கூறி, புணேவில் காவலர்களாக பணிபுரிந்துவரும் தம்பதிக்கு நேபாளத்தில் உள்ள எந்தவொரு சிகரத்திலும் அடுத்த 10 ஆண்டுகள் ஏறுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தினேஷ், தாராகேஷ்வரி என்ற இருவரும் புணேவில் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்ததாக சமூக வலைதளமான முகநூலில் புகைப்படம் பரவி வந்தது. ஆனால், மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு இவர்கள் இருவரும் உண்மையிலேயே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார்களா? என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேபாள சுற்றுலாத் துறையிடம் சிலர் புகார் அளித்தனர். முதலில் அந்தத் தம்பதி மலையேற்றத்தில் ஈடுபட்டதாக நேபாள சுற்றுலாத் துறை அறிவித்து சான்றிதழ் வழங்கியிருந்தது. எனினும், பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை கண்டறிந்தது.

இதுகுறித்து அந்நாட்டின் சுற்றுலாத் துறை தலைவர் சுதர்ஸன் பிரசாத் தாக்கல் கூறுகையில், "தம்பதியர் இருவரும் சிகரத்தில் ஏறவில்லை. அவர்களுக்கு வழங்கிய சான்றிதழை ரத்து செய்துவிட்டோம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு எவரெஸ்ட் உள்பட நேபாளத்தில் உள்ள எந்தவொரு மலையிலும் அவர்கள் இருவரும் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.