Wednesday, August 31, 2016

காவிரி தண்ணீர் திறக்கக் கோரி போராட்டம்: 6 ஆயிரம் பேர் கைது:!




சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய போராட்டத்தில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

நீராதார உரிமைகளை மீட்கவும்...:

சம்பா சாகுபடிக்கு காவிரியில் உடனே தண்ணீர் திறக்க கர்நாடக அரசை வலியுறுத்தியும், பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தீர்வு காண வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய ரயில்-சாலை மறியல், கடை அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தப் போராட்டத்தின் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும்...:

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 74 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது; இதே போன்று 500-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரயில், சாலை மறியலில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்...:

தஞ்சாவூர் மாவட்டத்தில் 29 இடங்களில் ரயில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3,011 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 2,700 பேரும், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 217 பேரும், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் 65 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் 6,000-த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

கடைகள் அடைப்பு:

இந்தப் போராட்டம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

2,500 லாரிகள் ஓடவில்லை:

 விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்ததால், மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 2,500 லாரிகள் ஓடவில்லை. மதுரையிலிருந்து வெளியூர்களுக்குச் சென்ற லாரிகளும் வெளியூர்களிலிருந்து மதுரைக்கு வந்த லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு: சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

எழும்பூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.

இப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடந்த வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினரையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் போலீஸார் கைது செய்தனர். தாம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 350 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர் வருத்தம்:

போராட்டத்துக்குப் பிறகு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: நீராதார உரிமைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் நடத்திய இந்தப் போராட்டத்துக்கு உணர்வு ரீதியாக தமிழக அரசு ஆதரவு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும்கூட காவிரியில் தண்ணீர் அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் பிரதமரை விரைவில் சந்தித்து கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் பி.ஆர்.பாண்டியன்.
நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.