Wednesday, August 31, 2016

கணினித் தொழில்நுட்பத்தில் தமிழ் ! விக்கிபீடியாவில் 283 உலக மொழிகள் !



தற்போது கணினியில் ஏராளமான உலக மொழிகள் மிக எளிதாக செயல்படும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்த்துவிட்டது. விக்கிப்பீடியா என்ற இணையவழி கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் மட்டும் 283 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்திய மொழிகளுள் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளுள் ஒன்றுமான நமது தமிழ் மொழியும் கணினித் தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. 

 கணினித் தொழில்நுட்பம் என்ற டிஜிட்டல் டெக்னாலஜி பல்வேறு தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினி, மடிக்கணினி, பலகைக் கணினி, திறன் பேசி என்று எண்மத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்ற எல்லா இடங்களுக்கும் தேவையான வடிவங்களில் தமிழ் மொழியும் மாற்றம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 படிப்பதற்கு மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கும் எளிய வகையில் தமிழ் மொழி கிடைக்கின்றது. நீங்கள் பயன்படுத்துவது எந்தவகையான டிஜிட்டல் கருவியாக இருந்தாலும் அதற்கு ஏற்ற தமிழ் செயலி கிடைக்கின்றது. அவை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 கடிதங்கள் உருவாக்குதல், இணைய தளங்களில் பதிவு செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, வலைப்பூக்கள் உருவாக்குவது போன்ற பல்வேறு பகுதிகளுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துருக்களே ஒருங்குறி(Unicode) எழுத்துருக்களாகும். விண்டோஸ் 7வது பதிப்பு நிறுவப்பட்டுள்ள அனைத்து வகையான கணினிகளிலும் தமிழ் உட்பட 190க்கும் அதிகமான உலக மொழிகளை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.

 விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஒருங்குறி எழுத்துக்கள் தற்போதைக்கு இன்ஸ்க்ரிப்ட் என்ற வகையான விசைப்பலகை அமைப்பிலேயே செயல்படுகின்றன.

 ஒருங்குறி அல்லாமல் வேறு வகையான விசைப்பலகை அமைப்பு மற்றும் எழுத்துருக்கள் தேவையெனில், புதுதில்லியிலிருந்து இயங்கும் இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம் (Technology Development for Indian Languages) வழங்கும் விசைப்பலகைகளையும், எழுத்துருக்களையும் அவர்களது வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அல்லது அவர்களது இணையதளம் வழியாக விண்ணப்பித்தால் விலையில்லாமல் குறுவட்டு ஒன்றினை உங்கள் முகவரிக்கு அனுப்பித் தருவார்கள். அதனை உங்கள் கணினியில் நிறுவி இந்தியாவின் 22 மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அவர்களது வலைத்தளமான http://tdil.mit.gov.in/ அல்லது http://ildc.in/langcdinit.html என்பதைப் பார்க்கவும். 

 திறன்பேசிகளைப் பொருத்தமட்டில் அவற்றிற்கான செயலிகள் தற்போது பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. உங்கள் திறன்பேசியில் உள்ள இணைய இணைப்பு வழியாக Tamil for Android என்று கொடுத்துத் தேடிப் பாருங்கள். முரசு, எழுத்தாணி என்று ஏராளமான செயலிகள் கிடைக்கின்றன. பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்திப் பாருங்கள்.

 எந்த விசைப்பலகை அமைப்பும் தெரியாதவர்களும் கணினி 

தொழில்நுட்பத்தில் தமிழை எளிதாகப் பயன்படுத்துவதற்கும் வசதி உள்ளது. Google Writer என்பதைப் பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்துங்கள். 

இதனால் திறன் பேசியின் திரையில் உங்கள் விரலால் நீங்கள் எழுதுவது 

நீங்கள் தெரிவு செய்துள்ள மொழியின் அடிப்படையில் எழுத்தாக மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

 மிகச்சிறப்பான செயல்பாடான இது தமிழ் மொழியைத் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்குக் கிடைத்த வசதியாகும்.

 கணினியிலும், திறன் பேசியிலும் உருவாக்கிய தமிழ் கட்டுரை உள்ளிட்டவற்றை சரிசெய்வதற்கும் ஒரு வலைத்தளம் உதவுகிறது. 

நீச்சல்காரன் என்ற பெயருள்ள இந்தத் தளத்தை http:www.neechalkaran.com என்று தேடிப்பிடித்து அதிலுள்ள எழுத்துப் பிழை மற்றும் சந்திப் பிழை திருத்தியை பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.

 தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் http:www.projectmadurai.org என்ற தளத்தில் ஒருங்குறி எழுத்துருவிலும், பிடிஎஃப் கோப்பாகவும் கிடைக்கின்றன. நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இது தவிர தமிழ்நாடு அரசின் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளமான http://www.tamilvu.org/library/libindex.htm  என்பதில் நாட்டுடமையாக்கப்பட்டுள்ள நூல்கள் மற்றும் பிற இலக்கிய நூல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

 ஒருங்குறி உள்ளிட்ட பல முறைகளில் கிடைக்கும் தமிழ்ச் செய்திகளைத் தேவையான வடிவத்திற்கு அமைப்பிற்கு மாற்றுவதற்கு http://software.nhm.in/products/converter என்ற தளத்தில் தரப்பட்டுள்ள செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம்.

 கணினி தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியை மிக எளிதாக பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், செயலிகளும் எந்தவிதமான செலவும் இல்லாமல் தற்போது கிடைக்கின்றன. பயன்படுத்திப் பலனடையுங்கள்.

 - ஜெ. வீரநாதன்
நன்றி :-தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.