Monday, August 29, 2016

மேகதாது அணை, பாலாறு தடுப்பணை,சிறுவாணி அணை தமிழகத்தில் விஸ்வரூபம் !

மேகதாது அணை, பாலாறு தடுப்பணை விவகாரத்தை அடுத்து, சிறுவாணி அணை பிரச்னையும், தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, தமிழக அரசு விரைந்து செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தமிழகத்திற்கு வளம் சேர்க்கும், காவிரி, பாலாறு, சிறுவாணி போன்ற ஆறுகள், அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றன. நதி நீர் ஒப்பந்தம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை கண்டுகொள்ளாமல், அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் நதிகளின் குறுக்கே, அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் துவக்கி உள்ளன.

காவிரி:

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி யானது, குடகு, ஹசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு ஊரகம் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக, தமிழகம் வருகிறது; இங்கு தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் வழியாகச் சென்று, கடலில் கலக்கிறது.

காவிரியில், கிருஷ்ணராஜ சாகர் அணை உட்பட சில அணைகளையும், தடுப்பணைகளையும், கர்நாடக அரசு கட்டி உள்ளது. இவை நிரம்பினால் மட்டுமே, தமிழகத்திற்கு தண்ணீர் வருகிறது. உரிய தண்ணீரை பெற, தமிழக அரசு ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை வாரியம், நதி நீர் பங்கீட்டு குழு அமைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், அதை அமைக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இச்சூழ்நிலையில், கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், அணை கட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.மேகதாதுவில் அணை கட்டப்பட் டால், தமிழகத்தில் டெல்டா உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்; விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.

பாலாறு:

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திரா வழியாக, தமிழகம் வருகிறது. ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள, தடுப்பணை களின் உயரத்தை உயர்த்துவதோடு, புதிய தடுப்பணைகளையும் கட்டத் துவங்கி உள்ளது.

தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவ தால், பாலாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் தடைபடும். இதனால், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உட்பட, வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

சிறுவாணி:

நீலகிரி மாவட்டம், குந்தா அருகே உள்ள, அமைதி பள்ளத்தாக்கு பகுதியில், சிறுவாணி ஆறு உற்பத்தியாகிறது. நீலகிரி வழியாக, கேரளா செல்கிறது. அங்கு அட்டப்பாடி, அகழி வழியாகச் சென்று, முக்காலி என்ற இடத்தின் அருகே, தமிழக எல்லைக்குள் வருகிறது.

கேரள மாநில எல்லையில் உள்ள, சிறுவாணி அணையில் இருந்து, கோவை மாவட்ட  மக்களுக்கு, குடிநீர்எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணையை, கேரள பொதுப்பணித் துறை பராமரித்து வந்தாலும், அதற்கான செலவுத் தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது. 

சிறுவாணி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், சிறுவாணி ஆற்றில் கலந்து, 15 கி.மீ., துாரம், கேரள வனப்பகுதி வழியாக ஓடுகிறது; இந்த ஆற்றில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி யாகும், சில கிளை நதிகளும் கலக்கின்றன. சிறு வாணி ஆறு, முக்காலி என்ற இடத்தின் அருகே, பவானி ஆற்றில் சங்கமிக்கிறது. 

அப்பகுதியில் அணை கட்ட, கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி மேற்கொண்டது; தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த முடிவை கைவிட்டது. தற்போது, அட்டப்பாடியில், அணை கட்டும் முயற்சிகளை துவக்கி உள்ளது.

இதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள, அனுமதி  அளித்துள்ளது. கேரள அரசு அணை கட்டினால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும்.

அண்டை மாநிலங்கள் மூன்றும், நதிகளின் குறுக்கே, அணை கட்டினால், தமிழகத்தில், 15 மாவட்டங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். மூன்று மாநிலங்களும், தமிழகத்திற்கு வரும்  நதிகளில், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது என, நதி நீர் ஒப்பந்தத்தில் உள்ளது.அதை மீறி, மூன்று மாநில அரசுகளும், அணை கட்ட முயற்சிக் கின்றன. 

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர் பாக, முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார்; சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

அத்துடன், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடன், டில்லி சென்று, பிரதமரை சந்தித்து பேச, முதல்வர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்!:

பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடியில் கேரள அரசு, 4.5 டி.எம்.சி., அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், அணை கட்ட திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுனர் குழு, தமிழக அரசின் கருத்தை கேட்காமல், தன்னிச்சையாக பரிந்துரை செய்துள்ளது; அதை திரும்பப் பெறும்படி, தாங்கள் உத்தரவிட வேண்டும்.

சிறுவாணி ஆறு, மாநிலங்களுக்கு இடையில் பாயும், காவிரி ஆற்றின் கிளை நதியாகும். எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் வகையில், ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை, கேரளா துவக்கக் கூடாது என, அறிவுறுத்த வேண்டும்; இதை வலியுறுத்தி, 2012 ஜூன், 21ம் தேதி, தங்களுக்கு கடிதம் எழுதினேன்.

இந்நிலையில், அட்டப்பாடி அணை திட்டம் தொடர்பாகவோ, அதுகுறித்து வல்லுனர் குழுவின், 96வது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றோ, மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசுக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், பல முறை கடிதம் எழுதியதாகக் கூறுவது உண்மையல்ல.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக, கேரளா மற்றும் கர்நாடகா சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசும், சில விபரம் தொடர்பாக, மனு தாக்கல் செய்துள்ளது; இவ்வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில், எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது. 

எனவே, அட்டப்பாடியில் அணை கட்டுவ தற்கான, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அளித்த பரிந்துரையை, உடனே திரும்பப் பெற, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும். 

அதுவரை, காவிரி படுகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில், எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என, தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள் ளார்.

நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.