Wednesday, August 31, 2016

100 வயதில் 100 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம்: இந்திய மூதாட்டி அசத்தல்!





இந்தியாவைச் சேர்ந்த மான் கெளர் என்ற 100 வயது மூதாட்டி, முதியவர்களுக்கான மகளிர் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வயதானவர்களுக்காக, கனடாவில் உள்ள வான்கூவரில் "அமெரிக்கன் மாஸ்டர்ஸ்' என்ற போட்டி நடைபெறுகிறது. செப்டம்பர் 4-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் போட்டியில், 30 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 100 மீ. ஓட்டத்தில் சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த மான் கெளர் பங்கேற்றார்.

மான் கெளர் வயதுப் பிரிவில் (100) அவரைத் தவிர வேறு போட்டியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியொருவராக அந்தத் தடகளத்தில் தடம் பதித்த மான் கெளர், 1 நிமிடம் 21 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார்.

முன்னதாக, ஈட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகளிலும் மான் கெளர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

100 மீ. ஓட்டத்தின் நிறைவு எல்லையை அவர் எட்டும் வேளையில், அங்கு கூடியிருந்த, 70-80 வயது போட்டியாளர்கள் மான் கெளரை உற்சாகப்படுத்தினர். அவரது இந்த விடாமுயற்சி, அந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.

பந்தயத்தை நிறைவு செய்த மான் கெளர் உற்சாக சிரிப்புடன் அனைவரையும் நோக்கி கையசைத்தார். வெற்றி குறித்து கேட்டபோது, மூச்சிரைக்க நின்றிருந்த மான் கெளருக்கு பதிலாக அவரது மகன் குருதேவ் சிங் பதிலளித்தார். 78 வயது நபரான குருதேவ் சிங்கும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற தனது தாயார் குறித்து குருதேவ் சிங் பூரிப்புடன் கூறியதாவது:

வெற்றி பெற்றுள்ள எனது தாயார் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றதும், கனடாவில் தான் பதக்கங்கள் வென்றதை அனைவரிடமும் உற்சாகத்துடன் கூறுவார். இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மூட்டு வலி, இதய நோய் என அவருக்கு எந்தவொரு உடல் உபாதையும் இல்லாததால், ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள அவரை ஊக்கப்படுத்தினேன். அதைத்தொடர்ந்து தனது 93-ஆவது வயதில் அவர் ஓடத் தொடங்கினார். வீட்டில், தினமும் மாலையில் குறைந்த தூரத்துக்கு ஓடி பயிற்சி மேற்கொள்வார்.

தற்போது, உலகம் முழுவதும் நடைபெற்ற "மாஸ்டர்ஸ்' போட்டிகளில் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

இதர மூதாட்டிகளையும் எனது தாயார் ஊக்குவிப்பார். தவறான உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், அவர்களது குழந்தைகளும் விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிப்பார் என்று குருதேவ் சிங் கூறினார்.

மான் கெளர் குறித்து, அமெரிக்கன் மாஸ்டர்ஸ் போட்டியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கனடா தடகள வீராங்கனை சார்மைன் க்ரூக்ஸ் (54) கூறுகையில், "மான் கெளர் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவர் என்னைப் போன்ற வயதுடையவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளார்' என்றார்.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.