Tuesday, August 30, 2016

பதின்பருவப் பெண் தந்த அறிவியல் திகில் - ஆகஸ்ட் 30: ஃபிராங்கென்ஸ்டைன் தினம்



ஆகஸ்ட் 30: ஃபிராங்கென்ஸ்டைன் தினம்



அறிவியல் புனைகதைகளுக்கு உலகம் முழுக்க விரிவான வாசகர் வட்டம் உண்டு. மேரி ஷெல்லி என்ற பிரிட்டன் எழுத்தாளர் தனது 17 வயதில் எழுதிய நாவலே, உலகின் முதல் நவீன அறிவியல் புனைகதை என அறியப்படுகிறது.

பல்வேறு நாடுகளின் பண்டைய இலக்கியங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே ஆச்சரியமூட்டும் அறிவியல் புனைவின் கூறுகள் உண்டு. அந்தப் புனை கூறுகள் பலவும் பிற்பாடு நவீன உலகத்தில் நடைமுறை எந்திரங்களாகவும், கண்டுபிடிப்புகளாகவும் ஆச்சரியம் தந்திருக்கின்றன. ஆனால் நவீன அறிவியலின் புனைவு என்பது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து அரங்கேறிய தொழிற்புரட்சியும் அவை உண்டாக்கிய அதிர்வலைகளும் அறிவியல் புனைவுகளை புதிய அலையாக எடுத்துச்சென்றன.

முதல் நவீன அறிவியல் புனைகதை

பிரிட்டனை சேர்ந்த மேரி ஷெல்லியின் தந்தை வில்லியம் காட்வின் ஒரு அரசியல் தத்துவியலாளர். தாய் மேரி வால்ஸ்டன்கிராஃப்ட் ஒரு பெண்ணியவாதி. இதனால் சிறுவயதிலேயே வாசிப்பு, பயணங்கள் எனப் பக்குவம் பெற்ற மேரி ஷெல்லி, 1818-ல் தனது 17வது வயதில் ‘ஃபிராங்கென்ஸ்டைன்; ஆர் த மாடர்ன் ப்ரோமெதியஸ்’ (Frankenstein; or The Modern Prometheus) என்ற நாவலை எழுதினார். மேரி ஷெல்லியின் பெயரில்லாது வெளியான அந்நாவலுக்கு வரவேற்பு எகிறவே, அடுத்த பதிப்புகளில் அவரது பெயர் பிரதானமாக இடம் பிடித்தது. திகில் பரப்பும் இந்த நாவலே நவீன அறிவியல் புனைகதையின் தொடக்கம் என்கிறார்கள்.

விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன் என்ற அறிவியல் ஆய்வாளர், அதுவரையில்லாத புதுமையான ஆய்வு ஒன்றில் ஈடுபடுகிறார். பல்வேறு சடலங்களின் பாகங்களை ஒருங்கிணைத்து கிடைக்கும் புதிய உடலுக்கு மின்சாரம் மூலம் உயிரூட்டுகிறார். தான் உருவாக்கிய விபரீதத்தைத் தாமதமாக உணரும் ஃபிராங்கென்ஸ்டைனிடமிருந்து, அந்த பயங்கர மனிதன் தப்பிச்செல்வதோடு அவரது நண்பர், மனைவி என காவு வாங்குவதை திகில் தோய்த்து கதையோட்டம் செல்லும்.

இயல்புக்கு அப்பாற்பட்ட, விநோதமான அம்சங்களை உள்ளடக்கிய ‘காத்திக்’(Gothic) எனும் அக்காலத்தில் பிரபலமான புனைவிலக்கிய ரகத்தில் உருவான இந்த நாவலே, நவீன அறிவியல் புனைவுகளுக்கு முதல் சுழி போட்டது. பிற்காலத்திய எந்திர மனிதன் கதைகளுக்கும், நிஜ கண்டுபிடிப்புகளுக்கும் அவை எவ்வகையிலும் சாத்தியமில்லாத காலத்தில் இருந்தபடி தனது அறிவியல் புனைகதையை மேரி தந்திருந்தார். சிறுகதை, நாடகம், பயணக்கட்டுரைகள் என மேரி ஷெல்லியின் படைப்புலகம் விரிவானது என்றபோதும், அவரது ஃபிராங்கென்ஸ்டைன் நாவலே இன்று வரை அதிகம் பேசப்படுகிறது.

ஷெல்லியை உலகுக்கு காட்டியவர்

கடந்த நவம்பரில் ஹாலிவுட் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை மிரட்டிய ’விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன்’ உட்பட, சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், அனிமேஷன் வெளியீடுகள், காமிக்ஸ் மற்றும் விளையாட்டுகள் என ஏராளமானவை ஃபிராங்கென்ஸ்டைன் கதையை மையப்படுத்தி வெளிவந்துள்ளன. தமிழில் வெளியான எந்திரன் திரைப்படம் உட்பட ஃபிராங்கென்ஸ்டைன் கதையின் தாக்கம் நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டு தொடர்கிறது.

மேரி ஷெல்லி தனது கணவரின் படைப்புகளை செம்மைப்படுத்தி வெளியிட்ட வகையில் ஆங்கில இலக்கிய உலகுக்கு, ஷெல்லி என்ற மகத்தான கவிஞர் கிடைத்தது தனிக்கதை. 30 வயதுக்குள் இறந்த கவிஞர் ஷெல்லியின் படைப்புகள் பிற்பாடு உலகம் கொண்டாட, அவரது மனைவி மேரி ஷெல்லி மேற்கொண்ட மெனக்கிடலே காரணம். மேரி ஷெல்லியின் முதல் படைப்பின் தாக்கத்தினால், அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 30, ’ஃபிராங்கென்ஸ்டைன் தினமா’க வருடந்தோறும் நினைவுக்கோரப்படுகிறது. திகில் நாவல் அலையை தொடங்கி வைத்த மேரி ஷெல்லியின் வாழ்க்கையும் ஒரு திகில் அத்தியாயமாக அவரது 52-வது வயதில் தற்கொலையில் முடிந்தது.

நன்றி :- எஸ்.என்.லெனின், வெற்றிக்கொடி, இந்து தமிழ் நாளிதழ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.