Monday, November 23, 2015

விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு




First Published : 23 November 2015 12:27 AM IST

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்டியலின்கீழ் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், 

"விஜய் மல்லையா, அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம்' என்று தெரிவித்தனர்.


 முன்னதாக, விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்' என்ற பட்டியலின்கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.


 யு.பி. குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார்.


 இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.


 எஸ்பிஐ - 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - 800 கோடி, ஐடிபிஐ வங்கி -800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா - 650 கோடி, பாங்க் ஆஃப் பரோடா - 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 410 கோடி, யுகோ வங்கி - 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி - 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன.


 மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் - 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 140 கோடி, ஃபெடரல் வங்கி - 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி - 60 கோடி, ஆக்சிஸ் வங்கி - 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.


 இருப்பினும், தொடர்ச்சியான தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை
.
 இதனிடையே, யு.பி. குழுமத்தின் பங்குகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டதன் மூலம் ரூ.1,100 கோடி கடன் தொகையை வங்கிகள் கடந்த 2013-ஆம் ஆண்டில் மீட்டெடுத்தன.


 மேலும், மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, ரூ.100 கோடி மதிப்புமிக்க கிங்ஃபிஷர் இல்லத்தை எஸ்பிஐ வங்கி கையகப்படுத்தி வைத்துள்ளது.


 இதைப்போலவே, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள், இரும்புத் தூண்கள், எடைதூக்கிகள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளை அடுத்த மாதம் இணையதளம் மூலமாக ஏலம் விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

 


நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.