Monday, November 23, 2015

பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறிக் கடை


பொதுவாக ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்லவேண்டுமானால், அது விலைவாசி உள்பட பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளின் வெற்றியில்தான் இருக்கிறது. தற்சமயம் ஒட்டுமொத்த விலைவாசி குறியீட்டு எண் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், நாடு முழுவதும் உணவு பணவீக்கம் உயர்ந்து வருவதுதான் கவலை அளிக்கிறது. 

சமீபத்தில் உணவு பணவீக்கம் 2.44 சதவீதம் உயர்ந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இது மேலும் உயர்ந்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிப்பது உணவு பணவீக்க உயர்வுதான். அதாவது உணவு பொருட்களின் விலை உயர்வாகும். கடந்த அக்டோபர் மாத புள்ளி விவரப்படி பருப்பு வகைகள், வெங்காயம், காய்கறிகள், பால் போன்ற உணவுபொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வுக்கு அரசை குறை கூறமுடியாது. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்புகள்தான் காரணம். இதுபோன்ற நிலையைத் தவிர்க்க, இந்த காய்கறிகள் இந்த பகுதிகளில்தான் விளையும் என்ற நிலையை மாற்றி, எல்லா காய்கறிகளையும் எல்லா மாநிலங்களிலும் பயிரிடலாம் என்ற வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய தேவையான உதவிகளை வழங்கவேண்டும்.

இந்த நிலையில், சென்னை நகரில் காய்கறி விலையைக் குறைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. சென்னை நகர மக்களுக்கு நியாயமான விலையில் தரமான காய்கறிகள் கிடைப்பதற்காக ஏற்கனவே 20.6.2013 அன்று ஜெயலலிதா பண்ணை பசுமை நுகர்வோர் கடைத்திட்டத்தை தொடங்கிவைத்தார். 

கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, விழுப்புரம், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளிடம் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதுதான் இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். அந்தவகையில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பண்ணை பசுமை கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களிடம் பலத்த வரவேற்பு இருக்கிறது.

இப்போது தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருவதால், சென்னை நகருக்கு காய்கறி வரத்து குறைந்து, விலையும் அபரிமிதமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையைத் தவிர்க்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் திறந்து, அங்கு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், பீட்ரூட் ஆகிய காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்தார். வெளியே கடைகளில் விற்கப்படும் காய்கறி விலையைவிட, இங்கு விற்கப்படும் காய்கறிகளின் விலை பாதி அளவே இருந்ததால், கூட்டம் அலைமோதியது. இதைக்கண்ட தனியார் கடைகளும் உடனடியாக விலையை குறைத்துவிட்டனர்.

தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அனைத்து நகராட்சிகளிலும் இத்தகைய பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை அமைக்கவேண்டும். ஒவ்வொரு நகராட்சியில் உள்ள கடைகளில் இருந்து நகரும் பண்ணை கடைகளாக சென்னையில் இருப்பதுபோல, வேன்கள் மூலம் அருகில் இருக்கும் கிராமங்களிலும் விற்பனை செய்யலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. விவசாயிகளுக்கும் இடைத்தரகர் தலையீடு இல்லாமல், போக்குவரத்துச் செலவு இல்லாமல் உரிய விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கும் குறைந்தவிலையில் காய்கறிகளை கொடுத்து அதேநேரத்தில் விலைவாசியையும் கட்டுக்குள் வைக்க உதவும் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு பரிசீலிக்கவேண்டும்.

பண்ணைப்  பசுமை நுகர்வோர் காய்கறிக் கடை’

தினத்தந்தி தலையங்கம்



0 comments:

Post a Comment

Kindly post a comment.