Wednesday, November 18, 2015

மாற்றுக்களம் என்று ஓர் வலைப்பூ : மெட்ராஸ்காரன் பார்வையில் மெட்ராஸ் - அ. பகத்சிங்

POSTS TAGGED ‘சென்னை குடிசை மக்கள்’

10511249_623522564422551_1081090026135520044_n
மெட்ராஸ்காரன் பார்வையில் மெட்ராஸ்
Posted: November 1, 2014 in Uncategorized
Tags: A.BHAGATH SINGH, சென்னை குடிசை மக்கள், சென்னையில் தலித்துகள், மெட்ராஸ்,Bhagath, chennai, chennai history, cinema, dalit cinema, dalits in chennai, madras, madras history, north chennai, vada chennai0
என்னது சென்னையபத்திப் படமே வரலையா? என்று யாராவது கேட்டால், ”என்னது  சிவாஜி கணேசன் செத்துடாரா?” என்று நீங்கள் திடீர் அதிர்ச்சி அடைவதாக நாங்க நினைக்க மாட்டோம். ஏன்னா எங்க மத்தியிலேயே உருவாக்கப்படுற படங்க எங்களபத்தி ஏன்டா பேசமாட்டுதுனு நாங்களே இப்பதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்கோம். சென்னையைக் களமாகக் கொண்டு பல படங்கள் வந்துள்ளது, ஆனால் அதில் எதிலும் சென்னை வாழ்மக்களின் வாழ்வியலோ, தனித்த அடையாளங்களோ என்றும் இடம் பெற்றதில்லை. முதலில் சென்னைக்கென்று தனித்த வாழ்வியல் அடையாளமென்ற ஒன்று இருக்கிறது என்பதையே நிறுவவேண்டியுள்ளது. அது வெறும் வந்தேறிகளின் நகரமல்ல, அப்பார்ட்மென்டிலும், காரிலும் பவனிவரும் மேல்தட்டு, நடுதரவர்க்கத்தவரின் நகரமல்ல, ஏழை எளிய உழைப்பாளி மக்களின் நகரம். இங்குப் பூர்வீகமாக வாழும் மக்களும் இருக்கிறார்கள். இவர்களே இந்நகரின் அடிப்படை, அவர்களுக்கென்று தனித்த பண்பாடும், வாழ்வியலும் இருக்கிறது. அவற்றை குறித்த இலக்கியங்களையும், சினிமாக்களையும் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
 இதுவரையிலான தமிழ் சினிமாவில் கேடிகளாகவும், ரவுடிகளாகவும் மட்டுமே  அடையாளப்படுத்தப்பட்ட எங்களின் உண்மை முகத்தை முதல் முறையாகத் திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி. நூற்றாண்டை தொடும் தமிழ் சினிமாவிற்கு, அதன் தலைமையகத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை இயல்புடன் பிரதிபலிக்க இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது வருத்ததிற்கும் விமர்சனத்திற்கும் உரியதுதான் என்றாலும் இப்போதாவது நடந்ததே? என்று பெரும் மூச்சுதான் விடத்தோன்றுகிறது.
இப்படி அடையாளங்கள் புறகணிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியை முன்னிறுத்திதான் மெட்ராஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பெரும் எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது. படத்தின் உள்ளடக்கம், களம் என அவ்வப்போது ஊடகங்களில் கசிந்த பல செய்திகளின் மூலம் சென்னையின் புதுப் பரிணாமத்தை இது வெளிபடுத்தும் என்று மிகவும் கவரப்பட்டேன். அந்த வகையில் எமக்கிருந்த எதிர்பார்ப்பை நிவர்த்திச் செய்துவிட்டார் படத்தின் இயக்குனர் ரஞ்சித்.


இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளின் உள்ளூர் தலைவாகள் சுவர் பிடிப்பதில் உள்ள அதிகார போட்டிதான் படத்தின் மைக்கருவே, இதற்குக் களபலியாக்கப்படுபவர்கள் தலித்துகள். இப்போராட்டத்திற்கு மத்தியில் இயங்கும் முரண்பட்ட குணாம்சங்களைக் கொண்ட இரண்டு இளைஞர் வாழ்க்கைதான் படமே. அரசியல் அதிகாரம்தான் தன் மக்களின் விடுலைக்கு வழிவகுக்கும் என்று களத்தில் நிற்பவன் அன்பு, கல்வியறிவு தான் சமூக முன்னேற்றத்தை கொண்டுவரும் என்று நம்புபவன் காளி, படித்து மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். இவர்கள் இருவரும் இடையிலான நட்பு, இவர்களது காதல், கோபம், சர்ச்சை, சிக்கல் என பல சூழ்நிலைகளோடு மிக இயல்பாக இவர்களது கதாபாத்திரம் சித்தரிகப்பட்டள்ளது. சுவரை மீட்டிக்கும் முயற்சியில் அன்பு இறங்க பலியாகிறான். அன்புவின் மரணத்திற்குப் பின்புள்ள சதியை அப்பகுதி மக்களுக்கு அம்பலபடுத்தி எதிரிகளை அழிக்கிறான் காளி. இதுதான் படத்தின் சுருக்கமான கதை. சமூக அரசியலில் சாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சுவரும், அதில் உள்ள ஓவியமும் ஒரு வகையில் சாதிய அதிகாரத்தின் அடையாளம் தான் என்று வெளிப்படையாகவே படம் பேசுவதோடு,  பெருங்கட்சிகளின் அதிகார அரசியலில் பலியிடப்படும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிக இயல்பாக முன்வைத்துள்ளது மெட்ராஸ்.
செயற்கையற்ற சென்னை தமிழ்
படத்தின் வெற்றியே, அதன் அப்பட்ட அழகான சென்னை மொழியிலான வசனங்கள் தான். மிக இயல்பாகச் சென்னை தமிழைப் பதிவுசெய்தது. சும்மா மண் வாசனை மணக்குதுபா.. இதுவரையிலான தமிழ் சினிமாவின் தேங்காய் சீனிவாசன் பாணி சென்னை தமிழ கேட்டாலே நாராசமா இருக்கு, இத கேட்க பல தடவை இரத்தம் கொதிச்சுப் போய்யிருக்கு. ஏன்னா  தமிழ்சினிமாவின் சென்னை தமிழைச் சென்னையின் நகரத்தின் எந்த மூலையிலும் கேட்டமுடியாது. கேட்டா இது ரிக்சாகாரங்க பேசுர தமிழாம், சென்னையில எந்த ரிக்சாகாரரும் இப்படி பேசமாட்டார், சினமாவில் தவிர. எனது அனுபவத்தில் மட்டுமல்ல, என் தந்தை அனுபவத்திலேயே கூட அப்படியொரு மொழிய அவரு எங்கயும் கேட்டதில்லையாம். ஏன்? எங்க ஆயா கூட அவங்க அம்மா மேல சத்தியமா கேட்டதில்லனு சொல்லிடிச்சு. எப்படியோ கமலஹாசன், தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி போன்றவர்கள் சென்னை தமிழைக் கொஞ்சம் நல்லா பேசியது ஆறுதலை தந்ததுவந்தது. ஆனால் மெட்ராஸ் படத்திற்குப் பின் இவர்களதும் செயற்கையாகத் தோன்றுகிறது என்பதே உண்மை. அந்த அளவிற்கு மெட்ராஸ் தமிழ் உண்மையா இருக்கு.
இப்படம் வெகுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதோடு. சமூக அரசியல் தளத்திலும் நல்ல விவாதத்தைக் கிளப்பியுள்ளது. படத்தை விமர்சனபார்வையில் ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்து விவாதங்கள் நிகழந்துக்கொண்டே வருகிறது. தலித் கருத்தியல் கொண்டவர்கள், முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், வெகுஜன சினிமா விரும்பிகள் எனப் பலரும் படத்தை ஆதரிகின்றனர். எதிர்ப்பவர்களை எவ்வாறு தனித்து அடையாளபடுத்துவது என்றுதான் தெரியவில்லை, ஏனென்றால் மேலே குறிப்பிட்ட அதே கருத்தியல் கொண்டவர்களை உள்ளடக்கியதுதான் எதிர்கருத்து பரப்பிவருபவர்களும். எதிர்ப்பவர்களாக இங்கே சூட்டுவது விமர்சன பூர்வமாக நிறை குறைகளைச் சுட்டிகாட்டி படத்தைத் திறனாய்வு செய்பவர்களை அல்ல, மாறாகப் படம் எதை அடிப்படை கருவாக கொண்டுள்ளதோ அதையே இல்லை என்று மறுப்பவர்களைத்தான். அவர்களுக்குத்தான் நிறைய பதில் சொல்ல வேண்டியுள்ளது.
இவர்களுக்கு ஏன் மெட்ராஸ் கசக்கிறது என்பது ஆய்விற்குரியதே. படத்தை முழுமையாக நிராகரிப்பவர்களைக் கூட ஏதொ ஒருவகையில் ஏற்கலாம், ஆனால் படம் நல்ல படம்தான் என்று சொல்லவிட்டு, ”கொஞ்சம் உப்பு கம்மிய இருக்கு” “இன்னும் ரெண்டு இன்ஞ்ச் ஒசரமா இருந்திருந்தா, உலக மார்க்கெட்டல போயிருக்கும்” “கொஞ்சம லைட் ஒயிட்டா இருக்கு, இன்னும் கொஞ்சம் டார்க் கறுப்பா இருந்திருந்தா, நச்சுன்னு இருந்திருக்கும்” “நீலக்கலரே காணும் ஒரே ப்ளுவா இருக்கு” இப்படியாகப் பல விமர்சனங்கள். படத்தில் உள்ளதை விமர்சன ரீதியாகப் பார்ப்பதைவிட்டுட்டு, படத்தில் என்னவெல்லாம் இல்லை, சேர்த்திருக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் பரிந்துரை பட்டியல் இருக்கே.. எப்பாப்பா!! தாங்க முடியல. இது ஒரு பக்கம் இருக்கட்டும்..
இன்னொரு பக்கம் வந்தா, ”மெட்ராஸ் பட்டைய கிளப்பிடுச்சு. நல்ல முயற்சி ஆனா இதுவே மொத முயற்சினு கிடையாது. இதுக்கு முன்னாடி நிறையபேரு போட்ட ரோட்டுலதான் ரஞ்சித்து மெட்ராஸ்சுக்குப் பஸ் விட்டிருக்காரு அப்படினு” ஒரு வரலாற்று கருத்து. ரோடு போட்டது யாரெல்லாம்னா ”பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அமீர், சசிகுமார், சமுத்திரகனி, திருமுருகன், ‘பூ’ சசி, சுசீந்திரன்” என்று பெரிய பட்டியலே வைக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ரஞ்சித்திற்கு முன்பு பயணித்தவர்களே, உண்மைதான். இவர்களும் சுயம்புவாகக் கிளம்பியவர்கள் இல்லை என்பதையும் ஏற்க வேண்டும். இதை ரஞ்சித் உட்படப் பட்டியலில் உள்ள அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன். ஆனா நம்ப இளைஞர்களின் விடிவெள்ளி இளைய தளபதியின் “கில்லி, திருமலை” போன்ற சென்னை படங்களின் தொடர்ச்சிதான் ”மெட்ராஸ்” படமுன்னு ஒப்பிட்டது இருக்கு பாருங்க… அய்யய்யையோ.. பிரமாதம். இதுக்கு நீங்க ரஞ்சித்த கூப்பிட்டு ”தம்பி நீ அடுத்து இளைய தளபதிய வைச்சு சொறாவோட இரண்டாம் பாகத்தை “திமிங்களம்”ன்னு சென்னை மீனவர்கள பத்தி ஒரு மாயஎதார்த்தவாதம் கோட்பாட்டை சினிமா எடுங்கன்னு சொல்லியிருக்கலாம்!! மக்களும் விடிவெள்ளியின் படத்த பாத்து தெளிவடைஞ்சு இருப்பாங்க!!
”மெட்ராஸ் தான் சென்னை மக்களைப் பற்றி முதன்முதலாகப் பேசிய படம் என்று கிடையாது, அதற்கு முன்பாகவே பொல்லாதவன், சென்னை 600028, புதுப்பேட்டை, இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா அகிய படங்கள் ஓரளவு செய்ததின் தொடர்ச்சியே எனது மெட்ராஸ்” என்று ரஞ்சித் விஜய் டி.வி பேட்டியில் வெளிபடையாக சொல்லியிருக்கிறார்.  இது சரியான மதிப்பீடுதான். பாரதிராஜாவின் “என்னுயிர் தோழன்(1990)” செய்யாதையா மெட்ராஸ் செய்துவிட்டது என்கிறார்கள், பாரதிராஜாவின் படம் சென்னை சேரிவாழ் மக்கள் மீதான அரசியல்வாதிகளின் சுரண்டலை பேசிய படைப்புதான். ஆனால் அது அவ்வளவு இயல்புதன்மையோடு சென்னையைப் பிரதியெடுக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்திற்கு அது ஒரு பங்களிப்பாக கொள்ளலாமே தவிர எதார்த்த படைப்பாகவெல்லாம் சொல்ல முடியாது.
எதார்த்த சினிமா இல்லையா?
      மெட்ராஸ் எதார்த்த படமெல்லாம் கிடையாது, வழக்கமான பலிக்குபலி வாக்கும் மசாலா படம்தான் என்று மாற்றுச் சினிமா குறித்து பல விவாதங்களை நடத்திவரும் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். ஒரு அரசியல் படம் பாமரர், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரியும் வகையிலும், முக்கியமாகப் பிடிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டால் அது எதார்த்தம் என்ற வகைபாட்டில் இருந்து விலகிவிடுமா என்ன? வழக்கமான தமிழ் படங்களில் இருந்து இது எத்தனை இடங்களில் விலகி, அதே வேலையில் மக்களை ரசிக்க வைத்துள்ளது என்பது மிக முக்கியமானது.
படத்தில் நாயகனுக்கும்-நாயகிக்கும் டூயட் இல்லை, நாயகனின் வல்லமைகளைச் சொல்லும் அறிமுகப் பாடல்களும் இல்லை. படத்தின் அறிமுக பாடலில் கூட அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்புதான் நாயகன் அறிமுகமே வருகிறது. இது கூடப் பழைய டிரெண்ட்தான், இப்போதைய டிரெண்ட் என்னானா? நாயகன் காதல் தோல்வியில் குடித்துவிட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தையே பங்கப்படுத்தி பாட்டு பாட வேண்டும். ஆனால் மெட்ராஸ் படத்திலும் காதல் தோல்வி பாடல் வருகிறது, ஆனால் நம்பிக்கை ஊட்டும் வகையில் வேறுபரிணாமத்தில் ஒலிக்கிறது. குத்துப்பாட்டு என்பது கூடத் தமிழ் சினிமாவின் ஒருவகை வணிக உட்கூறாக மாறிவிட்து, மெட்ராஸில் கானா பாலா, இரண்டு பாடல்களைப் பாடியும் வழக்கமான குத்துபாட்டு அதில் இல்லை என்பதை மாற்று சினிமா விரும்பிகள் என்னவாக புரிந்துகொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சென்னையின் பிரத்யேக அடையாளமாக மரணக் கானாவை படத்திற்குள் காட்சிபடுத்தியது மிகவும் முக்கியமான எதார்த்த பதிவு.
10167914_836847686339372_981653989116167863_n
மெட்ராஸை வெகுமக்களை ரசிக்க வைத்ததில் அதில் பங்கேற்ற நடிகர்களுக்கும், தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. காளி-கலையரசி ஜோடியைவிட அன்பு-மேரியே ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்கள், இவர்கள் இருவரது நடிப்பும் மிக எதார்த்தம். ஜானியாக அரிகிருஷணன் பட்டையைக் கிளப்பியுள்ளார், 1980களின் ஆடை ஒப்பனையும், அவரது உடல்மொழியும், நடிப்பும் மக்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பதற்கு முகநூலில் அவருக்குக் கிடைத்துள்ள பரவலான பாராட்டுகளும் வரவேற்புமே சாட்சி. கவிஞர் ஜெயபாலனின் ஓவியமே படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே உறுபெற்றுவிட்டது. மேலும் கோபி, வினோத் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் மெட்ராஸின் தனித்தன்மைதான். இப்படத்தில் வரும் பலரும் வடசென்னை வாழ் கலைஞர்கள் என்பதும் மிகமுக்கியமானது. இசை, பாடல், கேமிர என மூன்றும் படத்திற்கு முழுமையாகத் துணை நின்றுள்ளது. குறிப்பாகப் பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் தன்மையில் உள்ளதோடு, அரசியலோடு உள்ளது முக்கியமானது.

இது தலித் சினிமாவா?
அவர்களின் அடுத்தகேள்வி, இதில் எங்கே தலித் வாழ்வியல் இருக்கிறது என்று? தலித் அடையாளம் என்ற உடன் ஊரிலே மிக மோசமான பண்ணையார், ஊர் கோவில் பிரச்சனை, பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் இருந்து ஒரு படித்த இளைஞன், தலித் மக்களுக்குப் படிப்பு வேண்டும், குடிக்கக் கூடாது என்று அறிவுரைப்பது, பண்ணையார் மகளோடு காதல், ஊர் எரிப்பு, ”எஜமா நாங்க தெரியாம பண்ணிடோம்எங்க வயத்துல அடிச்சிடாதீங்க”………………… இப்படியாக எதவாது வசனங்களுடன் படம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது போலா. படத்தின் களம் சென்னை தலைவா, இங்குச் சாதியம் நுணுக்காமாதான் செயல்படுதாம், புத்திஜீவிங்க ரொம்பபேரு சொல்லியிருக்காங்க. அத படத்திலயும் நுணுக்கமாதான் தலைவா சொல்லமுடியும். நமது சினிமா உருவாக்கிய உளவியல் பிரச்சனை என்னான்னா. சமூக பிரச்சனைய பேசும் சினமானாலே பக்கம் பக்கமா வசனம் பேசி,கொழகொழகொழன்னு மொக்கபோடுரது. உணர்ச்சிகரமா வசனம் பேசி மதம், சாதி பிரச்சனைய பேசியே தீக்குறது, கேஷ்மீர் தீவிர வாதியையே பேசி திருத்துர சினிமா பாத்து நம்ப மூல மங்கி போச்சுப் பாஸ், அதான் காட்சிமொழியில் அரசியல முன்வைச்சா கூடக் கண்ணையும் காதையும் பொத்திகிட்டு. என்னப்பா ஒன்னும் புரியலனு கேள்வி கேட்க தோணுது. சரி உங்க கேள்விக்கு ஒரு எதிர் கேள்வி, இதுவரையிலான தமிழ் சினிமால (அவா சினிமா, தேவர் சினிமா, கவுண்டர் சினமா……) ஆதிக்கச் சாதி பெருமைய வாய்கிழிய பேசினாங்களே, அவங்களோட உண்மையான அடையாளத்த தைரியமா சொல்லமுடிஞ்சுதா? குற்றப்பரம்பரை பிரச்சனையையும், பெருங்காமநல்லூர் போராட்டத்தையும் வெளிபடுத்தி இருக்காங்களா.  சினிமாவின் ஏ, பி, சி னு எல்லாச் சென்டர்லயும் ஆதிக்கம் செலுத்துர அவங்களாலேயே வெட்டிபெருமையைத் தான் பேசு முடிஞ்சதே தவிர, உண்மையைப் படமெடுக்க முடியலயே.. நாங்க பேசுரது ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம் பாஸ் அவ்வளவு லேசுல சொல்வதற்கான சமத்துவச் சூழல் இங்க இல்லை. இத ஒத்துக்கறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்குதான் பிரச்சனை. இதுக்காக அசிங்கப்பட வேண்டியது நீங்கதான், நாங்க இல்லை.  ”செல்லுலாயிட்” என்ற மலையாளப்படத்தில் புலையர், பறையர். நாடார், நாயர், நம்பூதரி எனச் சாதிகளின் பெயர்கள் மிக இயல்பாக வசனத்தில் இடம்பெற்றதோடு, அன்றைய கேரளத்தின் சாதியவெறியை விமர்சன பூர்வகமாக முன்வைத்து வெற்றியும் பெற்றது. இது தமிழ் சினிமாவில் என்று சாத்தியமாகும். அசமத்துவமற்ற சமூகச் சூழலில் தமிழ் சினிமாவில் மட்டும் தனியா சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. சமூக அசமத்துவத்திற்கு எதிர எப்படி அடித்தல எதிர்ப்புக் குரல்கள் வலுக்குதோ, அதே போலச் சினிமாவிலும் எதிர்ப்பு குரல் மெல்ல வலுக்கும். அக்குரலில் ஒன்றுதான் மெட்ராஸ்.
கேள்விக்குக் கேள்வி பதிலாகாதுன்னு நீங்க சொல்லறது எனக்குக் கேட்குது.  சரி.. தலித் அரசியலின் நிறம் நீலம், அது படத்தில் எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா? காளியும், அன்பும் விளையாடும் கால்பந்து அணியின் ஆடை நீல நிறம், அவர்களின் நடனக்குழுவின் பெயர் புலு பாய்ஸ், அன்பு வெட்டி கொல்லப்படும் போது அவனது உடை நீலம், இப்படி நிறையச் சொல்லமுடியும். சுவரோவியம் அழிக்கப்படும்போது முதலில் ஊற்றப்படும் நிறமும் நீலம்தான், அதைதொடர்ந்தே பிற நிறங்கள் ஊற்றப்படுகிறது. சமூக மாற்றத்திற்கான படை அணிவகுப்பில் தலித்துகளே முன்னனிப்படை என்பதையே இயக்குனர் உணர்த்துவதாகப் புரிந்துக்கொள்கிறேன். “இங்க இருக்கிறவனுங்கெல்லாம் தமிழ் தமிழ் இன்றானுங்க சாதி மதமுன்னா மட்டும் கத்தியத்தூக்கினு வரானுங்க” என்ற வசனமெல்லாம் யாருடைய அரசியல் பிரச்சனை. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகள் தங்களின் அதிகார விளையாட்டிற்குத் தலித்துகளை எப்படிக் களபலி கொடுக்கிறது என்பதையும், இவ்வமைப்பிற்குள் தலித் ஒருவன் தலைவனாக (மாரி) வந்தாலும் அவன் தன் மக்களுக்குத் துரோகத்தை செய்யும் கருவியாகத்தான் இருப்பான் என்பதை பட்டவர்தனமாக பேசுகிறது.
வடசென்னையும் தலித் அடையாளமும் வெவ்வேறயா
தமிழ் இந்துவில் வெளியான குறுக்கு விசாரணையொன்றில் ”வடசென்னை வாசிகளெல்லாம் தலித்துகள் அல்ல!” என்று மாபெரும் கண்டுபுடிப்பு வெளியானது. ஏன்பா!  மதுரக்காரங்க எல்லாம் தேவரா காட்டினப்ப நீங்களெல்லாம் எங்க போயி இருந்தீங்க, பரவாயில்லை மதுரக்காரங்ய்க மேல இல்லாத பாசம் எங்கமீது வந்திருக்குன்னு நினச்சிகிறோம். எங்க அடையாளத்துமேல கரிசன படுரவரு வடசென்னைய பற்றிப் புரிதலோடு எழுதியிரக்கர குறுக்கு விசாரணைய படிக்கனுமே. அடேயப்பா! வாய்ப்பேயில்ல. அப்படியொரு புரிதல், கூகில் மேப்புல கூட வடச்சென்னைய இவரு பாத்திருக்க மாட்டாரு போல. இவர் மட்டுமல்ல சென்னையின் பூர்வக்குடிகள் மற்றும் சேரிவாழ் மக்கள் குறித்து மனவருத்தம் தெரிவிக்கும் பலர் வடசென்னை பக்கம் தப்பிதவறி கூட தலைவைச்சது கிடையாது. அதிக வாடகை கொடுத்தாலும் பரவாயில்லை, தென்சென்னையிலேயே இருக்கோம் என்கிறார்கள். கட்டமைப்பு வசதிகள் என்பதைவிட ஸ்டேடஸ் இவர்களை தடுக்கிறது. வடசென்னையில் இவர்கள் அதிகம் வந்துபோன இடம் சென்டரல் ஸ்டேஷனும், பாரிமுனையும் தான். பஸ்லயும், ரயிலயும் குட்கார்ந்து பார்த்த அனுபவத்திலேயே இவர்கள் வடசென்னையைப் பற்றி பக்கம்பக்கமா எழுதி தள்ளுராங்க.
உண்மையில் வடசென்னை வாசிகள் எல்லாம் தலித் இல்லை, என்பது சரிதான். ஆனால் இங்குள்ள அடிப்படை மக்களில் பெரும்பகுதி தலித்துகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையின் பாரம்பரிய குடியிருப்புகளில், வீட்டு வசதிவாரிய தொகுப்பு வீடுகளில் பறையர், ஆதி ஆந்திரர், மீனவர், வன்னியர், நாயுடு மற்றும் இஸ்லாமியர்கள் என பலர் பாரம்பரியமாக வாழ்ந்துவருகின்றனர். இவற்றைத் தவிர்த்து பிராமணர், முதலியார் உள்ளிட்ட பிற ஆதிக்கச் சாதியினரும் பாரம்பரியமாக இருந்துள்ளனர். வெள்ளைக்காரன் கட்டியெழுப்பிய கறுப்பர்நகரத்தின் வளர்ச்சியில் இரத்தமும் சதையுமாக இவர்களின் பங்களிப்பு உள்ளது. கபிலனின் வரிகளில் சொல்வதனால் “ரிப்பன் பில்டிங் ஐகோர்ட் எல்லாம் செங்கல் மணல் மட்டுமல்ல எங்களோட இரத்தங்களும் சேர்ந்திருக்குடா”, என இவர்களின் பங்களிப்பிலேயே சென்னை வளர்ந்தது. இன்றைய வடசென்னை முழுக்கப் பூர்வக்குடிகளின் நகரம் இல்லை, ஆனால் சென்னையின் பூர்வக்குடிகள் கணிசமாக வடசென்னையில்தான் இருக்கிறார்கள். இப்படிப் பாரம்பரிய மக்களும், பிற மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் இணைந்தே இங்கு வாழ்கின்றனர். வளர்ந்த நகரத்தில் பின்னர் வந்து குடிபெயா்ந்தவர்களின் ஆதிக்கம் இன்று தொடர்வதால் சென்னை வந்தேறிகளின் நகரம் என்று வந்தேறிகள் கருத்தை கட்டமைத்து வடச்சென்னையைின் அடையாளத்தை மறுக்கின்றனர்.
இதில் வியாசர்பாடி பகுதியின் குடியிருப்பை மையமாக வைத்து செய்த படம்தான் மெட்ராஸ், அதில் அப்பகுதியில் உள்ள தலித் இளைஞர்களை முன்வைத்துக் கதைசொல்லியிருக்கிறார் ரஞ்சித். சென்னையின் சமூக அரசியல் தெரிந்தவர்களுக்கு இது சரிதான் என புரியும், நமக்குத் தான் அரசியல் என்பதே கெட்ட வார்த்தை ஆச்சே, அப்புறம் எப்படிப் புரியும். பேசாம சராசரிப் ரசிகராக படத்தை ரசிக்க வேண்டியதுதானே. உங்களுக்கு அரசியலே வரலயே பாஸ். வராத அரசியல வா.. வா..னா எப்படி வரும். உங்கள் புலம்பலுக்காக வேண்டி ஒன்று பண்ணலாம், ரஞ்சித் அடுத்தப் படம் பண்ணும்போது, அவர் படம் பண்ணும் வடசென்னையின் ஏரிய, தெரு, வீடு எண், அதில் உள்ளவர்களின் எண்ணிக்கை, சாதி குறியீட்டு எண் மற்றும் ஆதார் அட்டை விபரங்களுடன் ஒரு அறிமுகத்தைத் தரசொல்லலாம். நீங்க கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்கதானே??
என்னைப் பொறுத்தவரை சுவர் அரசியலே வடசென்னையின் முக்கிய அடையாள வெளிபாடுதான். திருவொற்றியூர் சுங்கங்சாவடி, ராயபுரம் ரயில் மேம்பாலம், பெரியமெடு, பெரம்பூர் பி.என்.சி மில், வில்லிவாக்கம் என வடசென்னை முழுக்க ஆங்காங்கு உயர்ந்த சுவர்களில் அரசியல் விளம்பரம் செய்ய நடக்கும் போட்டி இருக்கிறதே. இது பிற மாவட்டங்களுக்குப் பொறுந்துமா எனத் தெரியவில்லை, ஆனால் இந்தச் சுவர்களை தற்காப்பதில் அடித்தளக் கட்சி தொண்டர்கள் மேற்கொள்ளும் போட்டா போட்டிகள் அபூர்வமானாது. ஒரு கட்சியின் கட்டுபாட்டில் உள்ள சுவரை பிடித்துவிட்டால் அதற்கு வரும் பஞ்சாயத்து இருக்கிறதே எப்பாப்பா, அதைச் சரியாகவே மெட்ராஸ் பதிவு செய்துள்ளது.
குறையே இல்லாதல்ல மெட்ராஸ்!
madras-review
   மெட்ராஸ் படமே முழுமையானது, அப்பழுக்கற்றது என்றெல்லாம் ஒன்றுமில்லை. சினிமா அடிப்படையிலும், அரசியல் ரீதியாகவும் சில குறைபாடுகளை இப்படம் கொண்டுள்ளது. “எவ்வளவோ அரசியல் ரீதியாகக் கதைபண்ணாலும், பல விசயங்களை நேரடியாகச் சொல்வதற்கான வெளி இங்குயில்லை என்பதே உண்மை, இது ரஞ்சித்திற்கும் பொருந்தும். முதல்பாதியில் முன்வைக்கப்பட்ட கதை போக்கு இரண்டாம் பாதியில் தடம்தவறி போனதை யாரும் மறுக்க முடியாது. கதைகளத்தோடு ஒட்டாத கதாநாயகி, எதிரிகளைத் தன்னந்தனியாக வேட்டையாடி நண்பனின் இழப்பிற்குப் பலிவாங்கும் வழக்கமான திரைநாயகன் எனச் சில சருகல்களைச் இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக ஆதிக்கவாதிகளிடம் இருந்து கைபற்றப்படும் சுவரில் “அன்பு” படத்தை வரையாமல் போனது கூட ஒருவகையில் குறையாகவே எனக்கு தோன்றியது. இவ்வாறான குறைபாடுகளுடன்தான் வணிக ரீதியாக இப்படம் வெற்றிபெற்றுள்ளது. இக்குறைபாடுகள் இல்லாது இருப்பின் அரசியல் ரீதியாக இன்னும் முழுமைபெற்றிருக்கும். இருப்பினும் இதுவரையிலான அரசியல் படங்களில் இது தமிழக அரசியலின் அடிமட்டத்தை மிக நுணுக்கமாகவே விமர்சன பார்வையோடு பேசியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சினிமாவின் வெற்றிக்குக் கை, கால், வாய் அசைத்த கதாநாயகனை புரட்சி நாயகர்களாக, அரசியல் தலைவர்களாக, தத்துவ ஆசான்களாகக் கொண்டாடிய காலம் போய், படத்தின் இயக்குனரை முதன்முறையாகக் கொண்டாடுவதும், வாழ்த்துவதும் கூட அளவியல் ரீதியாகப் பெரிய முன்னேற்றம்தான். மெட்ராஸ் வெற்றியை இவ்வளவு வரவேற்பிற்கும், கொண்டாடத்திற்கும், விமர்சனத்திற்கும், எதிர்ப்பிற்கும் உள்ளாவதற்குக் காரணம், இது ஒரு தலித்தால் தலித் அரசியல் செயல்பாட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட படம் என்பதால்தான். அப்படினா ரஞ்சித்தான் திரைப்பட இயக்குனராகும் முதல் தலித்தா என்றால், இல்லை. இதற்கு முன்பு சிலர் வெற்றிபெற்றுள்ளனர், அவர்கள் தங்களுக்கான அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்வதற்கு மெட்ராஸ்சின் மூலம் ரஞ்சித் பெற்ற வெற்றிக் காரணமாக இருந்துள்ளது. ஒரு படத்தை, கலைஞனை சாதிய சார்பு நிலையில் மட்டும் வைத்து கொண்டாடுவதும் ஒருவகைச் சாதிவெறிதான், இதில் தலித்-தேவர்-பிராமணா என்றெல்லாம் வேறுபாடுகிடையாது என்று சிலர் தீடீர் சமத்துவம் பேசுகிறார்கள். அவ்வளவு சமத்துவ விரும்பியாபா நீங்க? இதே கேள்வியை நீங்கள் எல்லாரிடமும் கேட்டது உண்டா?, குறைந்தபட்சம் கேட்கனுமுன்னு நினைச்சதாவது உண்டா. அப்படியென்றால் கௌதம் கார்த்திக், விக்ரம்பிரபு போன்ற ஓன்றிரண்டு படங்களே நடித்துள்ள இளம் நடிகர்களுக்கு ஒட்டப்படும் ரசிகர் மன்றப் போஸ்டர்களை கண்டும்காணாமல் போனது ஏன்? இவர்களைத் தூக்கிபிடித்துக் கொண்டாடுவதற்குப் பின்னால் சாதிவெறி இல்லையா? கார்த்திக் மற்றும் பிரபுவுக்கு எந்தச் சாதியவெறியர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினார்களோ அவர்கள் இப்போது அவர்களது மகன்களுக்கு ஒட்டுகிறார்கள். மெய்யாலும் பாஸ்.. பாருங்க சொன்னா நம்பமாட்ரீங்க.  இவையெல்லாம் மீறி ஆதிக்கவாதிகளின் கருத்தியலை ஆதரிப்பதற்கும், ஒடுக்கப்பட்டவர்களின் கருத்தியல் வெற்றியை கொண்டாடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது பாஸ்.
இறுதியாக… ஒன்னுமட்டும் சொல்கிறேன்..
 மண்ணு வாசம், கொழம்பு வாசமெல்லாம் எங்க சென்னை மண்ணுக்கும் உண்டு, கொஞ்சம் மூக்கையும் மனசையும் திறந்து மோந்து பாரு” என்று தெனாவட்டாகச் சொல்லும் கர்வத்தை மெட்ராஸ் எங்களுக்குத் தந்துள்ளது. இதுவொன்றும் தானாக நடந்த ஒன்றல்ல.  எங்களில் இருந்து ஒருவன் சமூக-அரசியல் புரிதலுடன் உருவானதன் வெளிபாடே இது என்பதோடு, இதற்குக் “கானா” பாலா, கபிலன், கோபி மற்றும் பல வடசென்னை சார்ந்த கலைஞர்களும், பிற முற்போக்காளர்களின் முழுப் பங்களிப்பும், ஆதரவுமே இதை சாத்தியமாக்கியுள்ளது. 
அட! இனி சென்னை படம்தான் தமிழ் சினிமால டிரெண்ட் பாஸ்” இப்படி ஒரு கும்பல் இந்நேரத்துக்குக் கிளம்பியிருக்கும். அந்தக் கொடுமையையெல்லாம் இனிமே நாங்களும் பொருத்துக்கனும். பரவாயில்லை.. பரவாயில்ல… ஆனா அவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ”ஏய்ய்…..ய்ய்ய.. நாங்களும் மெட்ராஸ் காரங்கதான்டா” என்ற ரேஞ்சுக்கு எங்களயும் மட்டமாக ஆக்கிவிட்டுடாதீங்க!!. பீலீஸ்!!..

0 comments:

Post a Comment

Kindly post a comment.