Sunday, November 22, 2015

இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம் - வி.எஸ்.முஹம்மது அமீன்


துருக்கியில் அக்டோபரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகள் அடுத்து பிரான்ஸில் நவம்பரில் தம் ரத்த வேட்டையை அரங்கேற்றி இருக்கின்றனர். ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான கொடூரமான அமைப்பாக உருவெடுத்திருக்கிறது ஐஎஸ். உலகம் இன்றைக்கு எப்படி ஐஎஸ் அமைப்பை அச்சுறுத்தலோடு பார்க்கிறதோ, அதே அச்சுறுத்தலோடும் இன்னும் கூடுதல் சங்கடத்துடனும் பார்க்கிறது இஸ்லாமியச் சமூகம்.

இவர்கள் எந்த இஸ்லாமின் பெயரைத் தங்கள் அமைப்புக்குச் சூட்டியிருக்கிறார்களோ, அந்த இஸ்லாமிற்கும் இவர்களுக்கும் எள் முனையளவும் தொடர்பு இல்லை. உண்மையில் இஸ்லாமின் அடிப்படைகளுடனே முரண்பட்டு நிற்கிறது ஐஎஸ்.

இஸ்லாம் சொல்வது என்ன?

இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு ஓரிறைத் தத்துவம். திருக்குர்ஆனும், நபிகள் வழியுமே இஸ்லாத்தின் ஆதாரச் சுருதிகள். திருக்குர்ஆனிலும் சரி, நபிகள் காட்டும் வழிகளிலும் சரி, பயங்கரவாதத்துக்குத் துளியும் இடம் இல்லை. “எவர் ஒருவர் அநியாயமாக ஒருவரைக் கொல்கிறாரோ, அவர் மனித இனம் முழுவதையும் கொன்றவரைப் போன்றவர் ஆவார்” என்பதே இஸ்லாம் போதிக்கும் இறைவனின் கட்டளை.

போரில்கூட எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற விதிமுறைகளை இஸ்லாம் வகுத்துள்ளது. போரில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், துறவிகள் கொல்லப்படக் கூடாது. விளைநிலங்கள் அழிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாத் சொல்லும் முக்கிய விதிகளில் ஒன்று. லட்சம் படை வீரர்களுடன் மெக்காவை வென்று அதன் ஆட்சியாளராக நகருக்குள் நுழைந்ததுமே நபிகள் வெளியிட்ட முதல் அறிவிப்பு, “போரில் நேர் நின்று நம்மைக் கொன்றுக் குவித்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று பொது மன்னிப்பு” என்பதுதான். நபிகள் நாயகம் உருவாக்கிய மதீனா அரசு இஸ்லாமிய அரசின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்திக் காட்டியது. நபிகள் அமைத்த இஸ்லாமிய அரசான மதீனாவில் யூதர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுடனான ஒப்பந்த விதிகள் மனித உரிமை சாசனமாக இன்றும் போற்றப்படுகிறது. அன்பும் சகோதரத்துவமுமே இஸ்லாமின் அடிப்படை.

இஸ்லாம் மீதான போர்

உண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலும் இஸ்லாம் மீதான அடையாள தாக்குதலாகவே அமைகிறது. அப்பாவிகளைக் கொன்று குவிப்பதும், முகமூடி அணிந்து கழுத்தை அறுப்பதும், பத்திரிகையாளர்களைக் கடத்தி தீயிட்டுக் கொளுத்துவதும், இந்தக் கொடூரங்களையெல்லாம் படம் பிடித்து உலகிற்குக் காட்டுவதும் இஸ்லாமிய அறநெறிகளுக்கு எதிரான தாக்குதல்கள்தான். ஐஎஸ் பயங்கரவாதிகள் கிலாஃபத், ஜிஹாத், கலீஃபா போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்துக் கூவுவதனாலேயே அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியாது. உலகின் முக்கியமான மார்க்க மேதைகள் யாவரும் ஐஎஸ்க்கு எதிரான மார்க்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது இங்கே குறிப்பிட வேண்டியது. மனித குலத்துக்கு எதிரான ஐஎஸ் அழிக்கப்பட வேண்டியது, முற்றிலுமாக!

- வி.எஸ்.முஹம்மது அமீன், 

ஊடகவியலாளர், 

தொடர்புக்கு: vsmdameen@gmail.com

நன்றி : தி  இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.