Sunday, November 22, 2015

முதலில் ஐஎஸ்ஸை ஒழிப்போம் அப்புறம் பின்னணி பேசுவோம் - பி.ஏ.கிருஷ்ணன்


பாரிஸ் படுகொலைகளுக்குப் பின் ஐஎஸ் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அதை எப்படி இயங்காமல் செய்யலாம் என்பதைவிட அது எப்படித் தோன்றியது என்பதைப் பற்றிய விவாதங்களே நமது ஊடகங்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்கு முக்கியக் காரணம் அமெரிக்கா என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஐஎஸ் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி, இராக்கில் இருந்த புக்கா சிறையில் பல ஆண்டுகள் கைதியாக இருந்தவர். அவரை விடுவித்திருக்காவிட்டால் இந்த இயக்கம் தோன்றியே இருக்காது என்று சொல்பவர்களும் உண்டு.

எவ்வாறு இயங்குகிறது?

நாம் ஐஎஸ் பற்றிப் பேசும்போது, அது பிரிட்டனைவிடப் பெரிய பரப்பளவை தன் கட்டுப்பாடில் வைத்திருக்கிறது என்பதையும், 80 லட்சத்திற்கும் மேலாக மக்கள் இந்தப் பரப்பில் வசிக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம். ஜூன் 2015 வரை. அதன் கீழ் 3 லட்சம் சதுர கி.மீ. இருந்தது என்று அல் ஜசீரா பதிவு ஒன்று சொல்கிறது. அது லஷ்கர் போலவோ, ஜைஷ்-இ-முஹம்மது போலவோ அரசு மேற்பார்வையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பு அல்ல. அதுவே ஒரு அரசை தனது மேற்பார்வையின் கீழ் இயக்குகிறது; விடுதலைப் புலிகள் இயக்கியதைப் போல. ஆனால், புலிகள் கையில் இருந்ததைவிட 20 மடங்கிற்கும் மேலான நிலம் அதன் கையில் இருக்கிறது.

ஐஎஸ் அமைப்பின் கீழ் இயங்கும் உலகம் நமது சிறிய ஊர்களில் எவ்வாறு இயங்குமோ அவ்வாறு இயங்குகிறது. மக்கள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குகிறார்கள். தினமும் சமையலறையில் அடுப்பு எரிகிறது. இந்தப் பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றால், இங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், அவர்களோடு வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த வியாபாரத்தை வெளியுலகம் நிறுத்திவிட்டால், அப்பாவி மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

உலகத்திற்கு எதிரிகள் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அல்ல. உலகத்திற்கு எதிரிகள் அதன் தலைவர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவமும். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கணக்கின்படி சென்ற வருடம் சுமார் 30,000 பேர் இயக்கத்தின் தலைமையில் போர் புரிந்தார்கள். 50,000 பேர் என்று வைத்துக் கொண்டாலும் உலகம் அடக்க வேண்டியது இவர்களைத்தான்.

எண்ணெயும் ஆயுதங்களும்

இயக்கத்திற்குப் பணம் எண்ணெய் வியாபாரத்திலிருந்து கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர்களிலிருந்து இரண்டு மில்லியன் டாலர்கள் வரை எண்ணெய் வியாபாரம் நடக்கிறதாகச் சொல்லப்படுகிறது. இதிலிருந்து கணிசமான தொகை ஐஎஸ்க்குக் கிடைக்கிறது. ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியின் எல்லைகளில் கணக்கிலடங்காத எண்ணெய் டேங்கர்கள் வரிசையில் நிற்கின்றன என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர தனி மனிதர்கள் மூலம் எண்ணெய் கடத்தல் நடக்கிறது. 25 லிட்டர் எண்ணெய்க்குப் பண்டமாற்று சுமார் 25 கிலோ கோதுமை மாவு. மேலும், ஐஎஸ் பல அரபுப் பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் வாங்குகிறது. தாமாகவே முன்வந்து பணம் அளிப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டுதான் அது ஆயுதங்களை வாங்கிறது.

வாங்கும் ஆயுதங்களைப் பற்றிப் பேசும் முன் அதற்குக் கிடைத்த ஆயுதங்களைப் பற்றிப் பேச வேண்டும். லிபியா போர் முடிந்தவுடன் அங்கு இருந்த ஆயுதங்கள் பல ஈராக் மற்றும் சிரியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டன. அமெரிக்கா ஈராக் போர் வீர்ர்களுக்கு கொடுத்த ஆயதங்களும் ஐஎஸ்க்குக் கிடைத்தன. 40 ஆப்ராம்ஸ் டேங்குகள் உட்பட 220 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க ஆயுதங்கள் ஐஎஸ் கைவசம் இருக்கின்றன என்று ‘சிஎன்பிசி’ சொல்கிறது. ஆனால் அதன் கையில் இருக்கும் 35 வகைகள் ஆயுதங்களில் 19 வகைகள் ரஷியாவைச் சேர்ந்தவை. முக்கியமாக கஜகிஸ்தான் வழியாக கடத்தப்பட்ட ஆயுதங்கள்.

எது முக்கியம்?

இன்று ஐஎஸ் குலமுறை எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்வது முக்கியம் அல்ல. அதை எப்படி ஒழிப்பது என்பதே முக்கியம். ஹிட்லர் சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியபோது, நாஜி கட்சி எப்படிப் பிறந்தது என்பதில் ஸ்டாலின் நேரத்தைச் செலவிடவில்லை. இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். ஐஎஸ் பிறப்பதற்கு அமெரிக்கா உதவி செய்தது என்றாலும் அது பிறந்த வயிறு தீவிர இஸ்லாமிய மதவாதம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் - சவுதி அரேபியாவின் கிரேண்ட் மஃப்டி உட்பட - ஐஎஸ் உலகத்தின் முதல் எதிரி, இஸ்லாமின் மிகப் பெரிய எதிரி என்று சொன்னாலும்கூட ஷாரியா சட்டங்களை கூறியது கூறியபடிச் செயல்படுத்துபவர்கள் நாங்கள்தான் என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை வலியுறுத்தும் வகையில் அவர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக் கணக்கில் இருப்பார்கள். எனவே இஸ்லாமியருக்கு முதல் எதிரி ஐஎஸ்.

இந்துக்களும் ஷியா, அகமதியா முதலானவர்களும், கிறிஸ்தவர்களும், பௌத்த, ஜைன, சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும், கம்யூனிஸ்ட்டுகளைப் போல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் ஐஎஸ் பின்பற்றும் மதத்திற்கு மாற்றத்தக்கவர்கள் அல்லது இந்த உலகத்திலிருந்து துரத்தப்பட்டு நரகத்தில் வேகத்தக்கவர்கள் என்று ஐஎஸ் உறுதியாக நம்புகிறது. அடிமை வியாபாரத்தை அது அனுமதிக்கிறது. யெஸ்தி பெண்களுக்கு நடந்தது நமது பெண்களுக்கு நடக்காது என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஐஎஸ் பிறப்பிற்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சியை ஐஎஸ் இறப்பிற்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

Keywords: ஐஎஸ் ஒழிப்பு, என்ன வழி, புஷ் வழி, இஸ்லாம் மீதான போர், ஐஎஸ்ஸை ஒழிப்போம், பின்னணி பேசுவோம்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.