Sunday, November 22, 2015

புஷ் வழி எடுபடாது ஐஎஸ் ஒழிப்புக்கு ! - தியாகு


ஐஎஸ்ஸை ஒழிக்க என்ன வழி ?

பாரிஸ் அழுகிறது, பாரிஸுக்காக உலகமே அழுகிறது! பாரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம். வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி - பிரெஞ்சுப் புரட்சி, 1789 - பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 - வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்ததும் இங்கேதான்.

உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். இப்போது அதற்கு இடமில்லை. ஆனால், இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐஎஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், அரசுக் கணக்கின்படி, 129 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அரசு நோக்கமும் வழியும்

பாரிஸ் 13/11 தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் என்பது இஸ்லாமிய அரசு என்பதன் சுருக்கம். முழுப் பெயர் ‘இராக்-சிரியா இஸ்லாமிய அரசு’ அல்லது ‘இராக்-லெபனான் இஸ்லாமிய அரசு’. சிரியாவிலும் இராக்கிலும் சேர்த்து ஒரு பெரும் பரப்பை இந்த அமைப்பு தன் ராணுவக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேச எல்லைகளைக் கடந்த அனைத்துலக இஸ்லாமிய அரசு அமைப்பதுதான் ஐஎஸ் குறிக்கோள். இதற்காக அது திரட்டும் படையில் ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்தும் இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரம் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக இருந்துவருகிறது.

எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுதான் ஒரு குறிக்கோளை அடைய முடியும் என்றால் அது நல்ல குறிக்கோளாக இருக்கவும் முடியாது. மேலும், எந்த மதத்தின் அடிப்படையில் ஆனாலும் சரி, சமயஞ்சார்ந்த அரசு காணும் முயற்சி மனிதகுல வரலாற்றின் முற்போக்குத் திசைவழிக்கு எதிரானது என்பதே வரலாற்றுப் பாடம்.

பாகிஸ்தானின் இஸ்லாமிய அரசும், அதிலிருந்து விடுபட்ட வங்க தேசத்தின் மதச் சார்பற்ற அரசும் சிங்கள பௌத்த சிறிலங்காவும் சமயச் சார்பற்ற தமிழீழ விடுதலைப் போராட்டமும் நேபாளத்தில் நடந்துவந்த இந்து தத்துவ மன்னராட்சியும், இப்போது மலர்ந்துள்ள மதச் சார்பற்ற மக்களாட்சியும் இஸ்ரேலின் யூதவெறி அரசும், அதிலிருந்து தாயக மீட்புக்காகப் போராடும் மதங்கடந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் முன்னாளைய யூகோஸ்லாவியா உடைந்து உருவாகியுள்ள தேசிய அரசுகளும்... இவையெல்லாம் சமயஞ்சார்ந்த தேசியங்களின் பிற்போக்குக்கும் மொழியினம் சார்ந்த தேசியங்களின் முற்போக்குக்கும் நம் காலத்திய கண்கூடான சான்றுகள்.

சிலுவைப் போர்?

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கண்களை மறைக்கும் பழைமைத் திரை அவர்களை வரலாற்றுப் போக்குக்கு எதிராக நிறுத்தியுள்ளது. அவர்கள் இன்னமும் பதினொன்றாம், பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட மத்திய காலத்தின் சிலுவைப் போர்க் காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. பாலஸ்தீனம், குர்து, காஷ்மீர் உள்ளிட்ட தேசங்களின் மக்கள்தொகை பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பினும், இந்தத் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை ஏற்க ஐஎஸ்ஸுக்கு மனமில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்களை (ஏகாதிபத்தியங்களை) எதிர்ப்பதாக ஐஎஸ் பயங்கரவாதிகள் சொல்லிக்கொண்டாலும், தேசிய விடுதலைப் போராட்டங்களை எதிர்ப்பதிலும் சிதைப்பதிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ வல்லாதிக்கங்களின் கைக்கருவிகளாகச் செயல்படுவதை அக்கறையுள்ள எந்த அரசியல் மாணவரும் எளிதில் உய்த்துணரலாம்.

ஐஎஸ்ஸுக்கு எதிராக குர்திய விடுதலைப் படை

ஐஎஸ் பயங்கரவாதிகளைக் களத்தில் எதிர்த்து நிற்பது குர்திய விடுதலை இயக்கப் படைகளே தவிர, அமெரிக்காவோ பிரித்தானியாவோ பிரான்ஸோ இஸ்ரேலோ அல்ல. சிரியா, லெபனான், இராக் ஆகிய அரபு நாடுகளின் பிற்போக்கு அரசுகள் தங்கள் ஆட்சிப்புலத்தில் பெரும் பரப்பை ஐஎஸ் வசம் இழந்து பரிதாபமாய் நிற்கின்றன. இந்த அரசுகள் பிழைத்துக் கிடக்கவே வல்லாதிக்க அரசுகளின் வான் குண்டு வீச்சைத்தான் நம்பியுள்ளன. ஐஎஸ்ஸிடமிருந்து கொபானே நகரை மீட்க குர்திஷ் விடுதலைப் படை நடத்திய வெற்றிகரமான வீரப் போர்தான் ஐஎஸ் பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஐஎஸ் எதிரணியினருக்குத் தந்தது. இப்போதும் துருக்கிக்குள் ஊடுருவ முடியாமல் சிரியா எல்லையில் ஐஎஸ் படையைத் தடுத்து நிற்பது குர்திஷ் விடுதலை வீரர்கள்தாம்.

அல் கொய்தா வழியில் ஐஎஸ்

கோட்பாட்டிலும் செயற்பாட்டிலும், ஒசாமா பின் லேடன் நிறுவிய அல் கொய்தாவின் தொடர்ச்சிதான் ஐஎஸ். ஐஎஸ் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய பயங்கரவாத ஆற்றலாக வளர்ந்ததன் வரலாற்றுக் காரணிகள் ஆழ்ந்து விரிந்த ஆய்வுக்குரியன. அரசியல்-வரலாற்று மாணவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை, ஒரு விஷயத்தைக் குறிப்பிடலாம்.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிருந்து மத்திய கிழக்கு அல்லது மேற்காசியா எனப்படும் இந்தப் பூபாகம் ஒரு வெப்பப் புள்ளியாகவே இருந்துவருவதற்கு அடிப்படைக் காரணம் இப்பகுதியின் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளம். சயோனிச இஸ்ரேலிய அரசை ஏற்படுத்தியதும், பாலஸ்தீனர்களைத் தாயகம் விட்டுத் துரத்தியதும், இராக் மீது படையெடுத்ததும், அரபு நாடுகளில் பிற்போக்கு மன்னராட்சிகளுக்கும் கொடுங்கோலாட்சி களுக்கும் முட்டுக்கொடுத்துவருவதும், இறுதியாகப் பார்த்தால், மேலை வல்லாதிக்கங்களின் எண்ணெய்வளக் கொள்ளைக்காகவேதான். பாலஸ்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டத்தை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்கள் தோண்டிய பெட்ரோலிய கிணற்றிலிருந்துதான் அல் கொய்தா, ஐஎஸ் போன்ற பூதங்கள் கிளம்பின. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னுங்கூடக் கிளம்பப் போகின்றன.

தீர்வு என்ன?

இப்போதும்கூட பாலஸ்தீனம், குர்து உள்ளிட்ட தேசிய விடுதலைப் போராட்டங்களின் வளர்ச்சியும், அரபு நாடுகளின் ஜனநாயக மலர்ச்சியும்தான் அல் கொய்தா, ஐஎஸ் பயங்கரவாதத்தை வேரறுத்து வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை. மதவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் சரியான மாற்று, மொழிவழித் தேசியமும் முழுமையான ஜனநாயமும்தான் என்ப தற்கு ஐரோப்பிய வரலாறும், குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறுமே போதிய சான்றுகள்.

ஆனால், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசிய அதே அடாவடி மொழியில்தான் இப்போது பிரெஞ்சு அதிபர் ஒல்லாந்தும் பேசிக்கொண்டிருக்கிறார். புகை போட்டுப் பிடிப்பதும்... துரத்தித் துரத்தி வேட்டையாடுவதும்... சட்டங் கருதாமல் தீர்த்துக் கட்டுவதும்! இவை பயங்கரவாதிகளுக்குப் பிடித்தமான சொற்றொடர்கள், நினைவிருக்கட்டும்! பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கு இவையும் ஒரு காரணம் என்பது நினைவிருக்கட்டும்!


- தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,

 தொடர்புக்கு: thozharthiagu@gmail.com

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.