Saturday, November 7, 2015

வை.கோ.தாயார் காலமானார்

வைகோ தாயார் மரணம்: கலிங்கப்பட்டியில் இன்று உடல் தகனம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
சனி, நவம்பர் 07,2015, 5:52 AM IST
பதிவு செய்த நாள்:
சனி, நவம்பர் 07,2015, 5:52 AM IST
நெல்லை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் 97 வயது தாயார் மாரியம்மாள் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

வைகோ தாயார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மமாள். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார்.

அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பாளையங்கோட்டை தென்றல்நகரில் உள்ள வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவில் அவருக்கு திடீர் என்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பாளையங்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மரணம்

நேற்று காலையில் மாரியம்மாளுக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமானது. உடனே அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி காலை 9 மணிக்கு மாரியம்மாள் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 97.

மாரியம்மாளின் கணவர் வையாபுரி. அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ராஜலட்சுமி, சரோஜாதேவி, தேவராணி ஆகிய 3 மகள்களும், வைகோ, ரவிச்சந்திரன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

மரண செய்தியை அறிந்து உள்ளூர் பிரமுகர்கள் வந்து மாரியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வைகோ அஞ்சலி

நேற்று முன்தினம் வைகோ டெல்லியில் இருந்தார். அவரிடம் தம்பி ரவிச்சந்திரன், தாயார் மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரத்தை தெரிவித்தார். உடனே அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். இதற்கிடையே தாயார் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் பாளையங்கோட்டைக்கு வந்து, நேரடியாக ஆஸ்பத்திரிக்கு காலை 10.50 மணிக்கு சென்றார். தனது தாயார் மாரியம்மாளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறினார்கள்.

சொந்த ஊருக்கு...

இதைத்தொடர்ந்து மாரியம்மாளின் உடல் காலை 11.10 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து கலிங்கப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்ஸ் வேனுக்கு தனது தாயாரின் உடலை ஸ்டெச்சர் வண்டி மூலம் வைகோ தள்ளிக்கொண்டு வந்தார். ஆம்புலன்சில் உடலை ஏற்றிக்கொண்டு, அதே ஆம்புலன்ஸ் வேனில் வைகோவும், உறவினர்களும் கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டில் மாரியம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொது மக்கள் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று உடல் தகனம்

மாரியம்மாளின் இறுதி சடங்கு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கலிங்கப்பட்டியில் நடக்கிறது. வீட்டில் இருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

வைகோவின் தாயார் மாரியம்மாள் அரசியல் மற்றும் சமூக பணியில் அதிக ஆர்வம் உடையவர். 

சமீபத்தில் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திராஜன், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மலேசிய துணை முதல்வர் ராமசாமி, முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் அவரது வீட்டிற்கு சென்று மாரியம்மாளை சந்தித்து இருக்கிறார்கள்.

தலைவர்கள் இரங்கல்

கலிங்கப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியான மகாதேவன்பட்டி, சத்திரப்பட்டி, திருவேங்கடம், குருவிகுளம், குலசேகரப்பேரி, சங்கரன்கோவில், கரிசல்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வைகோவின் வீட்டிற்கு வந்து, மாரியம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வைகோவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய செயலாளர் டி.ராஜா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கனிமொழி எம்.பி. அஞ்சலி

தி.மு.க. மகளிரணி தலைவியும், எம்.பி.யுமான கனிமொழி நேற்று மாலை 4.05 மணிக்கு வைகோ இல்லத்திற்கு வந்து, மாரியம்மாள் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வைகோ மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தாயார் மாரியம்மாள் வாழ்நாள் முழுவதும் வைகோவின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். எல்லா போராட்டங்களிலும், பொது வாழ்விலும் இறுதி மூச்சுவரை மக்களுக்காக போராடி உள்ளார். அவரது புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும். தாயாரை இழந்து வாடும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். 
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
Dailythanthi_TM_625x60px_Final.gif

0 comments:

Post a Comment

Kindly post a comment.