Thursday, November 5, 2015

பணி நிரந்தரம் செய்யக்கோரிய அண்ணா நூற்றாண்டு நூலக தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பணி நிரந்தரம் செய்யக்கோரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை 10 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வேலைப்பார்த்து வரும் தற்காலிக பணியாளர்கள் ஜெயக்கொடி, லட்சுமி உள்ளிட்ட 16 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:–

தற்காலிக பணியாளர்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில், தற்காலிக பணியாளர்களாக, எந்தவித இடை நிறுத்தமும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்து, அரசு நூலக பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் இருவரை சட்ட ஆணையர்களாக நியமித்தது.

பணி நிரந்தரம்
இந்த வக்கீல்கள், நூலகத்தை ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில், தற்போதுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை போதாது என்றும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அரசு பூர்த்தி செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில், எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தனியார் பணியாளர்களான எங்களை பணி நீக்கம் செய்ய தடை விதிக்கவேண்டும்.

பரிசீலிக்க வேண்டும்
ஐகோர்ட்டு, பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும்போது, எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ரமேஷ் கணபதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 10 வாரத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.