Monday, November 2, 2015

பாதிக்கப்பட்டோரே லஞ்சத்தை நொறுக்கிய நிகழ்வுலஞ்சம் கொடுக்க மறுத்தவர்களுக்குப் பயம் போக்கி ஆதரவு அளித்தவுடன் அவர்களே லஞ்சத்தை நொறுக்கிய நிகழ்வு கீழே விவரிக்கப்படுகிறது. அரசாங்கம் லஞ்சம் கொடுக்க மறுக்கிறவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் மக்களே லஞ்சத்தை நாடு முழுவதும் நொறுக்கிவிடுவார்கள். அதற்கான எடுத்துக்காட்டுதான் கீழே உள்ள தகவல்.

 அந்த நாளில் 2000 - 2001-இல் ஸ்டான்லி மற்றும் R.S.R.M மருத்துவமனைகளில், ஊழியர்களின் லஞ்சக் கொடுமைகள் கொடிகட்டிப் பறந்தன. கொண்டு வந்த காசு எல்லாம் லஞ்சம் கொடுத்தே கரைந்துவிட்டது. இனி மருத்துவமனையில் இருக்க முடியவில்லை. நோய் தீரும் முன்னே நோயுடன் வீட்டுக்குப் போகிறோம் என்று நோயாளிகள் கதறியதாகவும், இன்னும் பலவாறும் நோயாளிகளின் கஷ்டங்களை பத்திரிகைகள் வெளியிட்டன.

 அப்போது அந்த மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மருத்துவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்த என்னிடம் மேற்படி நிலைமையைச் சமாளிக்கும்படி கண்காணிப்புப் பணியை அரசு அளித்தது. 

 புகாருக்கு ஆளானோரை, விசாரிக்கிற மாதிரி போக்குக்காட்டி "மெமோ' கொடுத்து, பதில்பெற்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விட்டுவிடுவது வழக்கம். இந்த வழக்கத்தை நான் விட்டுவிட்டேன். 

 நான் ஜனநாயக வழியை மேற்கொண்டேன். மருத்துவமனைக்கு வந்தவர்களை வளாகத்திற்குள், ஊரறிய கூட்டம் கூட்டினேன். ஈடுபாடு கொண்ட டாக்டர்களையும், பணியாளர் பிரதிநிதிகளையும், மாணவர்களையும் அழைத்துக் கொண்டேன். நான் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றினேன்.

 பாதிக்கப்பட்டோர்களை கூட்டத்தில் பேசச் செய்தேன். அவர்கள் தாங்கள் படும்பாடுகளை பொரிந்து தள்ளினார்கள். லஞ்சம் கொடுக்காதீர்கள், வேலையைக் கெடுத்து விடுவார்களோ என்று பயப்படாதீர்கள். வேலையைக் கெடுத்தால் சும்மா விடமாட்டேன் என்ற பயம் பணியாளர்களுக்கு உள்ளது. வேலையைக் கெடுக்க விடமாட்டேன் என்று அவர்களுக்கு உறுதி அளித்தேன். நீங்கள் தனித்தனியாக இருந்தால், பயமில்லாமல் லஞ்சம் கேட்பார்கள். இருவர், மூவராக இணைந்து இருங்கள். லஞ்சம் கேட்க அவர்களுக்கு பயம் வந்துவிடும் என்று கூறினேன்.

 உங்களுள் சிலர், வலியச் சென்று லஞ்சம் கொடுத்து, உங்களுடைய உரிமைகளை அவர்களுக்கு திருப்பிக் கொள்கிறார்கள். அவர்களையும் கவனியுங்கள் என்றேன். விதிமுறைப்படி நடக்கவும் கூறினேன். இவ்வாறு அடிக்கடி செய்தேன்.

 மக்கள் துணிவும், நன்னம்பிக்கையும் பெற்றார்கள், கூறியபடி செய்தார்கள். ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. இதுவரை நெருக்கடிக்கு நடுங்கி லஞ்சம் கொடுத்த மக்கள், இப்போது துணிந்து மறுத்துவிட்டார்கள். ஒன்று சேர்ந்து மறுத்துவிட்டனர். லஞ்சக்காரர்கள் மிரண்டு போனார்கள். வறண்டும் போனார்கள். 

 பணியாளர் பிரதிநிதிகள் என்னிடம் வேண்டிக் கொண்டார்கள். மக்கள் நலனை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வரவேண்டாம் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள், அப்படியும் செய்தேன்.

 உங்களுக்கு இவ்வளவு தொண்டுகள் செய்கிறோம். நீங்கள் வீட்டிற்கு போகும்போது ஏதாவது கொடுங்கள் என்று மக்களிடம் மண்டியிடாத குறையாக மன்றாடினார்கள். நாடு முழுவதும் செய்வதைத் தானே நாங்களும் செய்கிறோம் என்று மக்களிடம் வேண்டி நின்றார்கள். இந்த மாற்றத்தைப் பத்திரிகைகள் பாராட்டின.

 இவ்வாறாக, சிறிய அளவில் ஊழலை நொறுக்க முடிந்தது. நாட்டளவில் அலுவலகந்தோறும் இம்மாதிரி குழுக்கள் அமைத்து (பாதிக்கப்பட்டோர் - பணியாளர் குழுக்கள்) ஊழல் விஷயங்களை ஆங்காங்கே தீர்வு செய்து கொள்ள முடியும். இதற்கு அரசு மனம் வைக்க வேண்டும். 

 TNPSC தேர்வர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட அலுவலகங்களில் மேற்படி குழுக்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு அந்தந்த அலுவலக விதிமுறைகளைக் கற்பிக்கலாம். இப்படிச் செய்வதை தேர்வர்களுக்கு நிபந்தனையாக்கலாம்.

 தேர்வர்களை இப்படி ஈடுபடுத்துவதால் அவர்கள் பணியாளர்கள் ஆகும்போது சமூகத்துக்கும், நிர்வாகத்துக்கும் பெரும் பலனாக அமையும்.

 இந்தச் செயல்பாடுகள் லோக் ஆயுக்தாவிற்குச் செல்லும் புகார்களைக் குறைக்கும். இந்த நடவடிக்கைகள் லோக் ஆயுக்தாவிற்கு சாட்சியமாகவும் பயன்படும். எனவே, அரசாங்கம் இத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும்.

 டாக்டர் டி.வி.கோவிந்தன்,
 சென்னை.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.