Monday, November 2, 2015

உனக்குள் இறங்கி உன்னைத் தேடு.!..


 நம்முடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படை, தேவை என்ற இரண்டெழுத்துச் சொல்லே தேவை. இந்தத் தேவை என்ற இரண்டெழுத்து தேடலையும், தேடல் வாய்ப்பினையும், வாய்ப்பு முயற்சியினையும், முயற்சி முன்னேற்றத்தையும், முன்னேற்றம் பொருளாதாரத்தையும், பொருளாதாரம் மகிழ்ச்சியையும், மகிழ்ச்சி நிறைவான வாழ்வையும் வழங்கி வருகிறது. ஒவ்வொருவரும் நமது தேவை என்ன என்பதை உணரும் போது தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

 தேவையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவரவர்கள் தங்களுக்குள் உள்நோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியம். தம்முடைய பார்வையைத் தமக்குள் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் தேவையை உணர முடியும். அதே போல், உலகத்தின் இத்தனை வளர்ச்சிக்கும் அடிப்படை மனிதனின் வயிற்றில் உருவாகும் பசியே. பசி என்ற ஒன்று இல்லையெனில் மனிதன் இருக்கும் இடத்தை விட்டு நகர்வதற்கு வாய்ப்புகளே இல்லை. மனித வாழ்வினைப் புரட்டிப் போட்ட மாபெரும் புரட்சி வயிற்றுப் பசி. பசி எப்படி வளர்ச்சிக்கு அடிப்படையோ, அதுபோல அறிவுப் பசி என்பது மனிதனுக்கு பல பரிமாணங்களைக் கொடுத்து வளர்வதற்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

 மனிதன் பார்த்தல், கேட்டல், படித்தல் மூலம் வெளியில் இருந்து உள்ளே எடுத்துச் செல்வது அறிவு. வெளியில் உள்ள பிரச்னைகளைச் சமாளிக்க உள்ளிருந்து வெளிவரும் ஆற்றல் நுண்ணறிவு. நுண்ணறிவை அதிக அளவு பயன்படுத்துபவர்களை அறிவாளிகள் என்கிறோம்.

 நாம் ஒவ்வொருவரும் நம்மை உள்நோக்கிப் பார்ப்பதன் மூலம் மட்டுமே நமக்குள் புதைந்திருக்கும் திறமைகளை உணர முடியும். திறமைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் போது மட்டுமே நமக்கு நாமே அடையாளங்களையும், முகவரிகளையும் உருவாக்க முடியும். 

 கண்களைத் திறந்து பார்க்கும் போது வெளி உலகம் நமக்கு தெரியும். கண்களை மூடி தனக்குள்ளே பார்க்கும் போது தான் நாம் யாரென, இந்த உலகத்திற்கு தெரியப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. ஆம், திறமைகளை வெளிப்படுத்தவும், வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு வகுப்பறைகள் வாய்ப்புகளை வழங்குகிறது. வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது.

 வாழ்க்கையில் தேடலைப் பழக்கப்படுத்திக் கொண்டு பயணிக்கும் போது, எதிர்பார்த்த விருப்பங்களையும், எதிர்பாராத நல்ல திருப்பங்களையும் அடைய முடியும். விருப்பங்களும், திருப்பங்களும் தரும் விளைவுகள் வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டும். உயர்வுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு தான் கடவுள். கோயிலில் வழிபடும் பிள்ளையார் கடவுள் என்றால் அப்பிள்ளையார் சிலை, சிற்பியின் உழைப்பு. ஆம்! ஒவ்வொருவரின் உழைப்பிலும் தான் கடவுள் இருக்கிறார்.

 கடலில் மீன் பிடிப்பவர்களின் மதிப்பை விட, ஆழ்கடலில் சென்று முத்தெடுப்பவர்களின் மதிப்பு மற்ற இருவரை விட அதிகம். அதே போல் தான், நம்மை நாமே உற்று நோக்கி நமக்குள் மிக ஆழமாகப் பயணித்து நம்மிடம் இருக்கும் பல திறமைகளை வெளிக்கொணரும் போது நமது மதிப்பும் உயரும்.

 ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் டார்ச், ரேடியோ, தொலைபேசி, கடிகாரம் என அனைத்தும் தனித்தனியாக இருந்தன. ஆனால், இன்றோ ஒரு அலைபேசியில் இவை அனைத்தும் அடங்கி உள்ளன. அலைபேசியானது உலகை உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளது. அதுபோல மாணவர்களும் ஏன் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பல திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் பன்முகத் திறன் பெற்றவர்களாக மாறவும் வேண்டியது இன்றையத் தேவை. தேவையை அறிவதும், தேவையைப் பெறுவதும் உனக்குள் இறங்கி உன்னைத் தேடும் போது மட்டுமே சாத்தியம்.

 தேவை, தேடல், ஆர்வம், வாய்ப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதாரம், மகிழ்ச்சி, நிறைவு. தேட தேட அறிவு, ஓட ஓட உழைப்பு உனக்குள் இறங்கி உன்னைத் தேடு. தேடியதை அடைய ஓடிக் கொண்டே இரு. வாழ்க்கை உன் பின்னால் வரும்.

நன்றி :- முழுமதி மணியன், மயிலாடுதுறை., தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.