Monday, November 2, 2015

4 ஏக்கரில் ஒரு நாட்டை உருவாக்கிய இளைஞர்! ஜாகிஸ்தான் குடியரசு !


தனக்கென 4 ஏக்கரில் தனி நாட்டை அமெரிக்க இளைஞர் உருவாக்கியிருக்கிறார்.

 அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தின் பெரும் பகுதி பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசமாகும். அந்த மாகாணத்தின் எல்டர் மாவட்டப் பகுதியில், கடந்த 2005-ஆம் ஆண்டு இணைய வர்த்தகம் வழியாக 4 ஏக்கர் நிலத்தை ஜாக் லாண்ட்ஸ்பர்க் என்ற இளைஞர் வாங்கினார்.

 நியூயார்க்கைச் சேர்ந்த அவர் அடிப்படையில் ஒரு சிற்பி. நிலம் வாங்கியபோது அவருடைய வயது 20. தற்கால அரசியல், சமூக சூழல் மீது மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், தனது நிலத்தில் சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க அவர் திட்டமிட்டார்.

 நிலத்தைச் சுற்றி "எல்லைப்புற' வேலியை முதலில் அமைத்த அவர், கண்காணிப்பு கோபுரம், எல்லைப் பாதுகாப்புக்கு இயந்திர மனிதன் என ஒவ்வொன்றாக அமைத்தார்.

 அவருடைய பெயரைக் கொண்டே "ஜாகிஸ்தான் குடியரசு' என்று தனது நாட்டுக்குப் பெயரிட்டார். அந்நாட்டுக்கு அவர்தான் அதிபர். அதற்கென தேசியக் கொடி, பாஸ்போர்ட் உண்டு. தலைநகர் ஜாக்கோபோலிஸ்.

 ஆனால் அதன் வளங்கள் சற்றுக் குறைவுதான். இந்த நாட்டை அடைய ஒழுங்கான சாலை கூட கிடையாது. சாலையிலிருந்து விலகி, மணல் வெளியில் 24 கி.மீ. பயணம் செய்தால் ஜாகிஸ்தான் குடியரசின் எல்லையை அடையலாம். பெட்ரோல் வேண்டுமானால் 80 கி.மீ. செல்ல வேண்டும்.

 அந்த நாட்டில் இதுவரை இவர் உருவாக்கிய கண்காணிப்பு கோபுரம், காவல் இயந்திர மனிதன் ஆகியவற்றை "கலைப் படைப்புகள்' என்று அவர் கூறி வருகிறார்.
 "இந்த இடம் ஓர் உண்மையான தேசமாக வேண்டும் என்பதே என் லட்சியம். அது நிறைவேறாது என்று எனக்குத் தெரியும். இங்கு நான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறு படைப்புகள் மூலம், இதனை ஒரு தனி நாடு என்று எல்லோரும் கருத வேண்டும். அந்த நோக்கத்துடன் எனது முயற்சிகளைச் செய்து வருகிறேன்' என்று அவர் கூறினார்.

 அந்த நிலத்துக்கான பல்வேறு வரிகளை அவர் செலுத்தி வருகிறார். ஆனால் அதை அவர் வரி என்று குறிப்பிடாமல், அண்டை நாட்டுடன் நல்லுறவு காக்க அளித்து வரும் அன்பளிப்பு என்று குறிப்பிடுகிறார்.

 அவர் முறையாக வரி செலுத்துவதை உள்ளூர் அரசு அலுவலகம் உறுதி செய்தது.

 ஜாகிஸ்தான் குடியரசு உருவாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்களுக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இது தொடர்பான செய்தியை உள்ளூர் தொலைக்காட்சி சேனல் வெளியிட்டது. தொலைக்காட்சியில் இந்த விநோத செய்தி வெளியான பிறகு அமெரிக்கா முழுவதும் கடந்த இரண்டு நாள்களாகப் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது ஜாகிஸ்தான்..

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.