Wednesday, November 4, 2015

சாதிச் சுழலில் காவிரிப் படுகை!


ஆத்துல ஒழுங்கா தண்ணி வராட்டியும் ஒரு குரூப் கையில காசு பொழங்கத்தான் செய்யுது மாப்ள. தெக்கலங்கமே திக்குமுக்காடுதுடா, ஒரு நெல்லு மணி விழுந்தாக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மொய்க்குறானுவ’. சில தினங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து அழைத்த என்னுடைய நண்பன் செல்வம் தீபாவளிக் கூட்டம் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.

தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் சிலர், நகரின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்த்து, ‘ஏதாவது கலை நிகழ்ச்சி நடக்கிறதா?’ என்று அவனிடம் கேட்டார்களாம். நகர் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால், அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் அவர்களால் வாசிக்க முடிந்திருந்தால் வெள்ளைக்காரர்களின் முகம் வெளிறியிருக்கும்!

ஆமாம், அத்தனை சுவரொட்டிகளிலும் சாதி வாடை. தஞ்சையில் ஒரு சுவர்கூட சுவரொட்டியின் கபளீகரத்திலிருந்து தப்பவில்லை. எங்கும் எதிலும் சுவரொட்டிகள். இலக்கியம், கட்டிடவியல், சமயம் வளர்த்த பூமியில் சாதிய துதிகளைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளைப் பார்க்கும் யாருக்கும் தஞ்சாவூர் சாதிச் சண்டை மைதானமாகிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஜீரணிக்க முடியாத மாற்றம் இது!

ஒரு ஊர் இப்படிக்கூட உருமாறுமா என்று ஆயாசமாக இருக்கிறது. ராஜராஜனைச் சொந்தம் கொண்டாடி மட்டுமே 5 சாதிகளின் ஆட்கள், சுவரொட்டிக் களேபரங்களை நடத்தியிருந்தனர். இதனுடன் மருதுபாண்டியர்கள், முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் சுவரொட்டிகளும் சேர்ந்துகொண்டன. ‘அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். பாசமுன்னா உயிரக் கொடுப்போம், பகைன்னா உயிர எடுப்போம்’... இன்னும் இத்யாதி இத்யாதி. தமிழ்த் திரைப்படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ எழுதுபவர்களை மிஞ்சிவிட்டார்கள், இந்தச் ‘சுவரொட்டிச் சிந்தனையாளர்கள்’!

நிலக்கிழார்கள் காங்கிரஸ்காரர்களாகவும், விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட்டுகளாகவும் அவதாரம் எடுத்த காலம் முதல் இன்றைய திராவிட அரசியல் காலம் வரை தஞ்சையின் அரசியல் பங்களிப்பு முக்கியமானது. ஆர். வெங்கட்ராமன், ஜி.கே. மூப்பனார், மு. கருணாநிதி, எஸ்.டி. சோமசுந்தரம் என தஞ்சை தந்த அரசியல்வாதிகளின் பட்டியல் நீளமானது!

இன்று ஈரோட்டில் திராவிடர் கழகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், தஞ்சையிலும், ஒரத்தநாட்டிலும் வாராவாரம் கடவுள் மறுப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் பல கிராமங்களில் தி.க. கொடிக் கம்பங்களையும், பெரியார் படிப்பகங்களையும் காணலாம். தஞ்சை நிலம் இன்ன சாதிக்கென்று சோற்றினைத் தரவில்லை. இப்படிப்பட்ட நிலத்தில் சாதியக் கவுச்சியின் வாசம் வீசுகிறதென்றால், அது நமது கட்டமைப்பின் தோல்வி என்றுதான் தோன்றுகிறது.

சென்ற மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சி வேட்பாளர்களை, அந்தந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இருவேறு சமூகத்தின் பிரதிநிதிகளாகத்தான் தஞ்சை மக்கள் பார்த்தார்கள்; பார்க்க வைக்கப்பட்டார்கள். வேட்பாளர் தேர்வு மட்டுமன்றி கட்சியின் கிளைச் செயலாளர் பதவி வரை மறைமுகமாகச் சாதிக் கணக்குகள் போடப்படுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலும் இதே நிலைதான். ஒரு சோற்றுப் பதம்தான் தஞ்சை. சுயமரியாதை வேரில் முளைத்த இயக்கங்கள் சிந்துகிற பூக்களில் சாதிய வாடை வீசுவது மிகப் பெரிய துரதிர்ஷ்டம்!

தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.