Wednesday, November 4, 2015

உம் பாடலில் பிழை இருக்கிறது கோவன்!?

கிராஃபிக்ஸ்: ம.ரீகன்

கிராஃபிக்ஸ்: ம.ரீகன்
எங்க கடைக்குப் பக்கத்துல இருக்க நாலு முக்குச் சந்திக்குப் பேரு கச்சேரி முக்கு. ஒரு காலத்துல வாய்ச் சண்டை, வாய்க்கா சண்டை, களவு, காதல்னு பூராப் பிரச்சினைக்கும் ஊர்க் கூட்டம் போட்டு, அங்கதான் தீர்ப்புச் சொல்வாங்க.

முதல்ல நாட்டாமை கேட்பாரு, ‘பிராது யார் மேல?’ன்னு. வழக்கு வெவகாரம்ல தேவையே இல்ல. பார்ட்டிக்காரன் பேரைக் கேட்டதுமே தீர்ப்பை முடிவு பண்ணிருவாரு. அப்புறம்தான் என்ன பிராதுன்னு கேட்பாரு. ‘பிராது குடுத்தது யாருல?’ன்னு கேட்கும்போதே குரல்ல எகத்தாளம் தெரிய ஆரம்பிச்சிரும். ‘குடிக்கக் கஞ்சியிருக்கால உனக்கு?’ன்னு சில நேரம் ஓப்பன் கமெண்ட் கூட அடிப்பாரு.

ஒரு மணி நேரம் நடக்குற விசாரணை முடிவுல, “எலே! ஊர்ல இருக்க பெரிய மனுஷங்களப் பூராம், உன்னைய மாரி வெட்டிப்பயன்னு நினைச்சிட்டியா? இனிமே இந்த மாரி சின்னத்தனமா பிராது குடுத்த, ஊரைவிட்டு ஒதுக்கிப்புடுவாம்… ஆமா”ன்னு எச்சரிப்பாரு. ‘ஒரு வேள, நம்ம மேலதான் தப்போ?’ன்னு பிராது குடுத்தவனே குழம்பிப் போய், சரிங்கய்யான்னு கும்பிட்டு விழுந்திடுவாம்.

கருத்துச் சுதந்திரம் என்பது…

அப்பேற்பட்ட வம்சத்துல வந்தவன் நான். அதனால, கோவன் கைது சரியா? தப்பா?ங்கிற வழக்கை நானே விசாரிச்சி, நடுநிலையோடு தீர்ப்புச் சொல்லப்போறேன். பொண்டாட்டி மூஞ்சியில முழிக்காமக் கிளம்பிரலாம்னு பாத்தா, பைக் சாவியை மறந்துட்டீங்கன்னு எதுக்க வந்துட்டா. “பீடிக் கடையில கூட போனஸ் போட்டுட்டாங்க. உனக்கு எப்ப?”ன்னு நொச்சு பண்ணுவாளேன்னு பயந்தேன். ‘கருத்துச் சுதந்திரம்னா என்னங்க?’ன்னு நானே எதிர்பார்க்காத கேள்வியைக் கேட்டுட்டா.

‘அம்முக்குட்டி, நீதான் தமிழ்நாடு அரசாங்கம். நான்தான் பத்திரிகை. நான் உன்னைய எவ்வளவு வேணுமின்னாலும் பாராட்டலாம். ஆனா, அறிவுரை சொல்றதா இருந்தா, ஒண்ணுக்குப் பத்துவாட்டி யோசிக்கணும் இல்லியா? அதுதான் கருத்துச் சுதந்திரம்’னு சொன்னேன். சந்தோஷமா ஒப்புக்கிட்டா. அதோட நிறுத்தியிருக்கணும். “என்னைய மாரி இல்லாம, எங்க அண்ணன் தைரியமா அண்ணிகிட்ட குத்தம் குறை சொல்வாரு தெரியுமில்ல. அந்த மாதிரி கருத்துச் சுதந்திரமும் மாநிலத்துக்கு மாநிலம், அரசியல்வாதிக்கு அரசியல்வாதி மாறும். புரிஞ்சுதா?’ன்னு கேட்டேன்.

“நல்லாப் புரியுதே. பதிமூணு வருஷ பத்திரிகை வாழ்க்கையில, ச.ம.க. சரத்குமார், நா.ம.க. கார்த்திக், தே.மு.தி.க. விஜயகாந்த் மாதிரி ஆட்களை (செய்தி) அடிச்சித்தான நீங்க ரிப்போர்ட்டரா ‘ஃபார்ம்’ஆகியிருக்கீங்க”ன்னு அசிங்கப்படுத்திட்டுப் போயிட்டா.

கண்ணதாசனைவிடப் பெரிய ஆளா?

விஷயத்துக்கு வருவோம். ‘தமிழ்நாட்டுல சரத்குமார், செ.கு.தமிழரசனைத் தவிர கிட்டத்தட்ட பூராப் பேர் மேலயும் கேஸ் போட்டுட்டாங்க. ஆனா, கோவன் மேல வழக்குப் போட்டதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு துள்ளுறாங்க? கோவன்னு பேரு வெச்சவங்க பூராம் இப்பிடித்தான் இருப்பாங்கபோல’ன்னு யோசிச்சுக்கிட்டே, தீர்ப்பை வாசிக்கிறேன் கேளுங்க.

“சாராயத்தைப் பத்தி பாட்டு படிக்கக் கூடாதுன்னு யாருய்யா சொன்னா? படி... கண்ணதாசனை விடவா நீ பெரிய கவிஞன்? ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ன்னு பாட வேண்டியதுதானே. புதுசா வேணுமா? ‘மச்சி ஓப்பன் தி பாட்டில்’னு பாடு.

டாஸ்மாக் கல்லாதான், அரசாங்கத்தோட கல்லா. ஆளுங்கட்சியோட கல்லாங்கிற அடிப்படை உண்மையைக் கூடப் புரிஞ்சுக்காமப் பாடுதீரே இது உமக்கே நியாயமா? அரசாங்கத்தோட அஸ்திவாரத்தையே அசைச்சுப் பார்த்தா, அரெஸ்ட் பண்ணாம அவார்டா குடுப்பாங்க?

பாட்டை மாத்து...

பாட்டுப் பாடுறது தப்பான்னு நீரு கேட்கலாம். 1966-ல அன்பே வான்னு ஒரு எம்.ஜி.ஆர். படம் வந்துச்சில்ல. அதுல புதிய வானம் புதிய பூமி பாட்டுல, ‘உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே’ன்னு ஒரு வரி வரும். காங்கிரஸ் ஆட்சியில அப்பிடிப் பாட்டெழுதலாமா? சென்சார் போர்டுல சொல்லி, ‘புதிய சூரியனின் பார்வையிலே’ன்னு பாட்டை மாத்தலையா? அதே வருஷம் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்துக்காக, ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’னு எழுதுன பாட்டை, ‘மேடையில் முழங்கு திருவிக போல்’னு மாத்தலையா?

பழசை விடும்… 2004ல ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’னு ஒரு படம் வந்துச்சே பாத்தீரா? அதுல ‘நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு’ன்னு தனுஷ் தம்பி வெவரம் இல்லாமப் பாடிட்டாப்ல. அரசாங்கமே டாஸ்மாக்கைத் தொறந்து ஒரு வருஷத்துல இப்படி அபசகுனமா பாடுறீங்கன்னு யாரோ கண்டிச்சதும், ‘நாட்டு நடப்பு நச்சுன்னுதான் இருக்கு’ன்னு அரசாங்கத்தைப் புகழ்ற மாதிரி பிளேட்டை மாத்திட்டாங்க தெரியுமில்ல?

அதனால, ‘ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’பாட்டை பேசாம, ‘ஊருக்கூரு தாய் திட்டம் முன்னேறுது தமிழகம்’னு மாத்தீரும்.

பாடத்திட்டத்தையும் மாத்துங்கப்பா

அதுக்கிடையில, பாடப் புஸ்தகம் தயாரிக்கிற பெரிய மனுஷங்களுக்கு ஒரு வார்த்தை… இதுக்கெல்லாம் நீங்கதாம்யா முதக் காரணம். அரசாங்கத்தைப் பாட்டுப் பாடி விமர்சிக்கலாம் என்ற நச்சுக் கருத்தைப் பள்ளிக் கூடத்துப் பாடப் புஸ்தகத்துலயே வெச்சிருக்கீங்க. ‘கொக்குப் பறக்குதடி பாப்பா, அதைக் கோபமின்றி கூப்பிடடி பாப்பா, தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு அங்கு தின்ன வழியில்லாத கொக்கு, நம் மக்களை ஏமாற்றும் கொக்கு அதன் மமதை அழிய வேண்டும் பாப்பா’ என்று விஸ்வநாததாஸ் ஆங்கிலேய அரசை விமர்சித்து சுதந்திர வேட்கையை தூண்டினார்னு பாடம் இருக்கு.

இப்பிடிப் பாடம் படிக்கிற பிள்ளைக பெரியவனா னதும் அதே பாணியில பாட்டுப் படிச்சி தேசத் துரோகியாக வாய்ப்பிருக்கு. அதனால ஒண்ணு, அந்தப் பாடத்தையே நீக்கிடுங்க. இல்லன்னா, ‘அப்போது நம்மை ஆண்டது தமிழ் தெரியாத வெள்ளைக்காரர்கள் என்பதால், விஸ்வநாததாஸ் தப்பித்துவிட்டார். இப்போது அது போன்று அரசை விமர்சித்துப் பாடினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்’ என்ற பின்குறிப்பையாவது பாடத்துல சேத்துருங்க.

ஏன் லேட்டு தெரியுமா?

‘இந்தப் பாட்டையும் வீடியோவையும் ரெண்டு, மூணு மாசத்துக்கு முன்னாடியே யூ டியூப்ல பாத்தோமே. இப்ப எதுக்குத் திடீர்னு கைது? ஒவ்வொரு அரசாங்கமும் அதோட கடைசிக் காலகட்டத்துல அதிக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். அதைத் தடுக்கிறதுக்குத்தான?’ன்னு எவனோ ஒரு புத்திசாலி என்கிட்ட கேட்டான். அவனுக்காகச் சின்ன விளக்கம்.

‘காலமெல்லாம் காத்திருப்பேன்’படத்துல ஒருத்தனை வெரட்டி வெரட்டி அடிப்பாரு ஆர்.சுந்தர்ராஜன். “அட! ஏங்க அவரைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?”ன்னு விஜய் கேட்டதும், ‘‘மூணு மாசத்துக்கு முன்னால அவன் என்னைய தேவாங்குன்னு திட்டிட்டாங்க. ஆனா, நேத்துதான் நான் தேவாங்கைப் பாத்தேன். அது எவ்ளோ அசிங்கமா இருக்கு தெரியுமா?”ன்னு பதில் சொல்வார் சுந்தர்ராஜன்.

அது மாதிரிதான் இதுவும். இந்தப் பாட்டோட அர்த்தம் ஒற்றர்களோட மெத்தனத்தால மேலிடத்து கவனத்துக்குக் கொஞ்சம் லேட்டாப் போயிருக்கு. அதனால, நடவடிக்கையும் லேட்டாயிருச்சிபோல!

கச்சேரி முக்கு தீர்ப்பு முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திரிச்சிப் போயிறாதீங்கப்பா. கருத்துச் சுதந்திரம் பத்தி ஒண்ணே ஒண்ணு சொல்லிக்குறேன். நித்ய கண்டம், பூர்ணாயுசுன்னு சொல்வாங்க பாருங்க. அது நம்ம ஊர்ல ரெண்டு விஷயத்துக்குப் பொருந்தும். ஒண்ணு, ஜனநாயகம். இன்னொண்ணு கருத்துச் சுதந்திரம். ‘இந்த வீங்கு வீங்கியிருக்கே எத்தன பேரு உன்னைய அடிச்சாங்க?’ன்னு கிரி வீரபாகுகிட்ட கேட்கிற மாதிரி, கருத்துச் சுதந்திரத்துக்கிட்ட கேட்டோம்னா, அது காந்தி காலத்துல இருந்து கருணாநிதி காலம் வரைக்கும் பெரிய லிஸ்ட் போட ஆரம்பிச்சிரும். அதனால, அம்மாதான் முதல்ல அடிச்சாங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரியாம ஒழுங்கா வீடு போய்ச் சேருங்க.

இதையும் மீறி, என் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பண்றதா இருந்தா, கருத்து அமைப்புக்கு மெயில் போடுங்க. அப்படின்னா என்னதா? என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க. கவிஞர் கனிமொழி கூடச் சேர்ந்து கருத்துன்னு ஒரு அமைப்பை 2005ல ஆரம்பிச்சாரே கார்த்தி சிதம்பரம் ஞாவகம் இல்லியா? எல்லாரும் தங்கள் கருத்துகளைத் தடையில்லாமச் சொல்லணும் என்ற லட்சியத்தோட, ‘கருத்து. காம்’னு ஒரு இணையதளம் கூட ஆரம்பிச்சாரே. பின்னால, ட்விட்டர்ல தன்னை விமர்சிச்ச பாண்டிச்சேரி ரவியோட கருத்துச் சுதந்திரத்தைத் தாங்கிக்க முடியாம, அவரைப் புடிச்சி உள்ளே தள்ளுனதாவது ஞாவகம் இருக்குதா? ஜாக்கிரதை!

- கே.கே. மகேஷ் தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

நன்றி :- தி இந்து

1 comments:

  1. அன்பே வா படத்தில் உதயசூரியன் என்ற வார்த்தை 1972ல் அதிமுக கட்சி ஆரம்பிக்கும் வரை இருந்தது. அதன் பின்தான் மாற்றப்பட்டது.

    ReplyDelete

Kindly post a comment.