Thursday, November 12, 2015

சிறுசேமிப்புக்கு வட்டி குறைப்பா? - தினத்தந்தி தலையங்கம்

 

கடந்த வாரத்தில் அரசு அறிவித்த பல அறிவிப்புகள், குறிப்பாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக .5சதவீதம் சேவை வரி உயர்த்தப்படும், அதாவது, இப்போதே 14 சதவீதம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக் கப்படும் சேவை வரி 14.5 சதவீதமாக உயர்த்தப்படும், ரெயில் டிக்கெட் ரத்து கட்டண உயர்வு உள்பட சில அறிவிப்புகளும், சமையல் கியாஸ் மானியம் சில பிரிவினருக்கு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவிப்பும், மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், இப்போது அடிமேல் அடியாக தபால் ஆபீசுகளில் மக்கள் போட்டிருக்கும் சிறுசேமிப்புக்கான வட்டியும் குறைக்கப் படப்போகிறது என்ற தகவல், மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.



சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2013–14–ம் ஆண்டில் நாட்டின் சேமிப்பு ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் 7.3 சதவீதமாக இருந்தது, 2014–15–ல் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற தகவலைத் தெரி வித்திருந்தது. தங்கத்திலும், ரியல் எஸ்டேட் அதாவது, நிலத்திலும் முதலீடு செய்து கொண்டிருந்த மக்கள், நிதி சேமிப்பு பக்கம் தாவியிருந்தனர். இதற்கு காரணம் பண வீக்கம் குறைந்ததுதான் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. பொதுவாக பணவீக்கம் அதிகமாக இருந்தால், மக்கள் தங்கத்தின் பக்கமும், நிலத்தின் பக்கமும் பார்வையை செலுத்துவார்கள். பணவீக்கம் 5 மற்றும் 6 சதவீதத்தையே சுற்றி வந்ததால், தங்கத்துக்கும், நிலத்துக்கும் சற்று மவுசு குறைந்தது. சேமிப்பு உயர்ந்தது. 



இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகள் மீது சலுகை மழையை பொழியத்தொடங்கியது. ரிசர்வ் வங்கி யின் கவர்னராக ரகுராம்ராஜன் பதவியேற்றவுடன், அடுத்தடுத்து வர்த்தக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துக் கொண்டே வந்தார். கடைசியாக .50 சதவீதம் குறைக்கப்பட்டு, இப்போது வங்கிகளுக்கான வட்டி வீதம் 6.75 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கி குறைத்த வட்டி விகிதத்தின் பலனை தொழில்கடன்களுக்கும், மக்களுக்கு வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டிக்கும் அளிக்கவில்லை என்ற குறை மக்களுக்கு இருக்கிறது.


இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் சிறுசேமிப்பாக தபால் அலுவலகங்களில் போடும் பணத்துக்கான வட்டியை இந்த மாத இறுதிக்குள் குறைக்க திட்டமிட்டிருப்பதாக வந்துள்ள செய்தி கவலை அளிக்கத்தக்கதாக இருக்கிறது. தபால் ஆபீசுகளில் இப்போது மக்கள் ஒரு ஆண்டுகாலம் முதல் சிறுசேமிப்புகள், மாதாந்திர வருமானத்திட்டம், நிரந்தர வைப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இருக்கின்றன. இதுமட்டு மல்லாமல், பி.பி.எப். என்று சொல்லப்படும் ‘பப்ளிக் பிராவிடன்டு பண்டு’ திட்டமும் இருக்கிறது. 


வங்கிகளில் பொதுமக்களுக்கு கொடுக்கும் வட்டியைவிட, தபால் அலுவலகங்களில் கொடுக்கும் வட்டி அதிகமாக இருப்பதால், மக்கள் வங்கி டெபாசிட்டை பெரிதும் விரும்பு வதில்லை. இப்போது அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டியைக் குறைக்கப்போகும் மத்திய அரசாங்கம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டியையும், பெண் குழந்தை களுக்கான சேமிப்பு திட்டத்துக்கான வட்டியையும் குறைக் காமல் விதிவிலக்கு அளிக்கலாமா? என்று பரிசீலிக்கிறது. 


தங்கள் வாழ்நாள் முழுவதும் தபால் ஆபீசுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, வயதான காலத்தில் அந்த சேமிப்பில் இருந்து கிடைக்கும் வட்டியை நம்பியே வாழும் வயதானவர்களுக்கு, வட்டியைக் கூட்ட திட்டமிட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. மேலும் வட்டிக்கு ஆசைப்பட்டு மக்கள் போலி நிதி நிறுவனங்களில் பணம் போடும் நிலையில், உள்ளதையும் இழக்கும் நிலையைத் தவிர்க்க, தபால் ஆபீசு சேமிப்பு வட்டிகள் மக்களை கவரும் வகையில் இருக்கவேண்டும். 

0 comments:

Post a Comment

Kindly post a comment.