Thursday, November 12, 2015

கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை காரில் பிணமாகக் கிடந்தார்


கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

முன்னாள் எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்தவர், ராஜேந்திரன் (வயது 63). டெல்லி மேல்–சபை அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர்.

இவர் நேற்று மாலை 5 மணியளவில் தன்னுடைய மனைவியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு தனது காரில் வெளியே புறப்பட்டுச் சென்றார். காரை அவரே ஓட்டினார். அவர் சர்வீஸ் ரோடு வழியாக கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் அருகில் சென்றார்.

பின்னர் அவர் நாற்கர சாலையில் இருந்து நியூ டவுன், சுபா நகர் பகுதிக்கு செல்லும் வழியில் தனது காரை திருப்பினார். சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வணிக வளாகம் அருகில் ராஜேந்திரன் தனது காரை நிறுத்தினார். அங்கு வணிக வளாகத்தை தவிர வேறு குடியிருப்புகள் அருகில் கிடையாது.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அங்கு காரை நிறுத்தியவுடன் ராஜேந்திரன் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் தன்னுடைய நெற்றியின் வலது பக்கத்தில் காதின் மேல் பகுதியில் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அவருடைய இடது காதின் மேல் பகுதி வழியாக துப்பாக்கி குண்டு பாய்ந்து வெளியேறியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி சரிந்தார்.துப்பாக்கி குண்டு பாய்ந்த சத்தம் கேட்டதும், அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் காரின் கதவுகளை திறந்து, ராஜேந்திரனின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜேந்திரனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேந்திரன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கை வரலாறு

தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன் தொடக்க காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தார். அவர் கடந்த 1984– 1989–ம் ஆண்டு கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் அவர் 1995– 2001–ம் ஆண்டு அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார். பின்னர் அவர் தி.மு.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றினார். அவர் தி.மு.க.வில் தூத்துக்குடி மாவட்ட பொருளாளராக பதவி வகித்தார். தற்போது அவர் தி.மு.க.வில் எந்த பொறுப்பிலும் இல்லை.

ராஜேந்திரன், தனியார் பஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். மேலும் அவருக்கு சொந்தமான தனியார் திருமண மண்டபம் இனாம் மணியாச்சியில் உள்ளது.

குடும்பம்

ராஜேந்திரனுக்கு ராஜலட்சுமி என்ற மல்லிகா என்ற மனைவியும், சூர்யா (28) என்ற மகனும், ஆர்த்தி (33), விஷாலி (25) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மகன் சூர்யா என்ஜினீயரிங் படித்து உள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

ராஜேந்திரன் தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற்று வைத்து இருந்தார். அந்த துப்பாக்கியின் மூலம் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டது தெரிய வந்தது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்தனர்.

செய்தி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.