Tuesday, November 10, 2015

பீஹார் தேர்தல் முடிவுகள் - தினத்தந்தி தலையங்கம்


இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் முடிவு என்பது ஒரு மேஜிக் நிபுணர் முன்னிலையில் இருக்கும் பெட்டி போன்றதுதான். கையில் ஒரு மந்திரக் கோலை வைத்துக்கொண்டு என்னென்னவோ சொல்வார், மேஜிக் செய்வார். ஆனால், பெட்டிக்குள் கைவிட்டு வெளியே எடுத்தபிறகுதான் அது முயலா?, வாத்தா?, புறாவா, பூங்கொத்தா? என்று பார்ப்பவர்களுக்கு தெரியும். அதுபோன்ற நிலைதான் இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளுக்கும். 


இந்திய மக்களின் மனதை யாராலும் கணிக்கமுடியாது. மின்னணுவாக்கு எந்திரத்தின் சீலை உடைத்து ஓட்டு எண்ணிய பிறகுதான் மக்களின் மனஓட்டத்தை, முடிவை அறிய முடியும். அதுதான் பீகார் தேர்தல் முடிவிலும் நடந்து இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய எல்லாக் கணிப்புகளும் ஐக்கியஜனதாதள அணியும், பா.ஜ.க. அணியும் ஒன்றையொன்று முந்தும் வகையில் நெருக்கமான போட்டி என்றும், ஓரிரு கணிப்புகள் பா.ஜ.க. அணிக்கு வெற்றி என்றும் தெரிவித்தன. ஆனால் எல்லோரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் தேர்தல்முடிவுகள் அமைந்து விட்டன.

பா.ஜ.க. அணியை விட ஏறத்தாழ மும்மடங்கு வெற்றியை நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் கொண்ட மகா கூட்டணி பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது. மொத்தம் உள்ள 243 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 58 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதள கூட்டணி 178 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வளவுக்கும் 2014 பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 22 இடங்களைப் பெற்ற பா.ஜ.க என்ற பெருமை உண்டு. பிரதமர் நரேந்திரமோடியும் இதுவரையில் எந்தவொரு பிரதமரும் செய்யாத அளவு தீவிர பிரசாரத்தை இந்த தேர்தலில் மேற்கொண்டார். தேர்தலின்போது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு இந்த முறை நடந்துள்ளது. பீகாரில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 6 சதவீதம் அதிகம். பொதுவாக, வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தால் ஆளுங்கட்சி தோற்றுவிடும் என்ற கணக்கு பொய்த்துவிட்டது. 

பீகாரை பொறுத்தமட்டில் அங்கு இன்றளவும் சாதி அரசியல்தான் மேலோங்கி இருக்கிறது. 82.7 சதவீதம் இந்துக்கள், முஸ்லிம்கள் 17 சதவீதம். எனவே, பா.ஜ.க. இந்த தேர்தலில் மாட்டு இறைச்சியை முக்கிய ஆயுதமாகக் கொண்டு போரிட்டது. ஆனால் அது எடுபடவில்லை. உணவு என்பது அவரவர் சுய விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அந்த விஷயத்தில் சகிப்புத்தன்மை வேண்டும் என்பதை இந்த தேர்தல் பாடம் புகட்டியுள்ளது. 



பீகாரில் உள்ள 51 சதவீத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், 16 சதவீத தலித் மக்களும், 15 சதவீத முன்னேறிய சாதியினரும் இருக்கிறார்கள். பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட சமுதாய ஓட்டுகளைப் பெற தனது முதல்–மந்திரி வேட்பாளராகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சுஷில் குமார் மோடியை அறிவித்தும் எடுபடவில்லை.

அடுத்த ஆண்டு மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. பீகார் தோல்வியின் தாக்கம் ஏற்படாமல் இருக்க தாங்கள் சென்று கொண்டு இருக்கும் இந்தப் பாதை மக்களுக்கு ஏற்புடையதா?, இல்லையா? என்பதைப் பா.ஜ.க. சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது

நிதிஷ்குமார் கூட்டணியில் உள்ள லாலுபிரசாத் யாதவ் கட்சி, காங்கிரஸ் கட்சி வெவ்வேறு வகையான கொள்கைகளைக் கொண்டது. ஆனாலும், மக்கள் நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆட்சியை நடத்தி காட்டினால், இதேபோல மகா கூட்டணி மற்ற மாநிலங்களிலும், அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் உருவாக வழிகாட்டிவிட முடியும்.

நன்றி ;-தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.