Tuesday, November 10, 2015

புதுச்சேரி அருகே கரையை கடந்தது புயல் சின்னம்

மேலே - புதுச்சேரி கடற்கரையில் எழுந்த ராட்சத அலைகள். படம்: சிங்காரவேலு | கீழே - சென்னை மெரினாவில் சூழ்ந்த மழைநீர். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்


மேலே - புதுச்சேரி கடற்கரையில் எழுந்த ராட்சத அலைகள். படம்: சிங்காரவேலு | 
கீழே - சென்னை மெரினாவில் சூழ்ந்த மழைநீர். 
| படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்


வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன்காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி 9-ம் தேதி (இன்று) இரவு சென்னை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

காற்றழுத்தம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்யத் தொடங்கியது. காற்றின் வேகமும் அதிகரித்தது. நேற்று இரவு தொடங்கி விடியவிடிய கனமழை கொட்டியது. பலத்த காற்றால் கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் விநியோகமும் தடைபட்டது.

இந்நிலையில் இன்று காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடல் மற்றும் தரைக்காற்றின் வேகம் அதிகரித்தது. மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேற்கு வடமேற்காக நகரத்தொடங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியதாவது:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும். இந்த காலகட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 75 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரைப்பகுதியை அடைந்ததும், வடகடலோர மாவட்டங்களில் மழை குறையும். அதே நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட உள்மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.

கடந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் மழை குறைவாகவே பெய்தது. ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரணப் பணிகள்

இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து, நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கனமழையால் கடலூர் மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். முறிந்து விழுந்த மரங்களை அகற்றுதல், மின் விநியோகத்தை சீரமைத்தல் போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அம்பத்தூரில் 20 செ.மீ. மழை

தமிழகத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சென்னை அம்பத்தூரில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம், திருவண்ணாமலை 19, காரைக்கால், செங்கல்பட்டு, தாம்பரம் 18, மாமல்லபுரம், போளூர்- 17, காஞ்சிபுரம் -15, ஸ்ரீ பெரும்புதூர், நெய்வேலி, நாகை 14, செய்யாறு – 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று காலை 8 முதல் இன்று காலை 8 மணி வரை 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், நேற்று இரவு மட்டும் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேண்டாம் புயல்

வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று கூறப்பட்டது. புயலாக மாறியிருந்தால், மழையின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக புயல் தாக்கினால் அப்பகுதியில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி சென்றுவிடும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு நிலை அல்லது தாழ்வு மண்டலம் உருவாகி நிலைகொண்டிருந்தால் மட்டுமே அதிகளவு மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Keywords: கரையை கடந்தது, புயல் சின்னம், நிவாரணப் பணிகள் தீவிரம், கனமழை, வெள்ளம், மிதக்கும் வடமாவட்டங்கள்

நன்றி :- தி இந்து 

0 comments:

Post a Comment

Kindly post a comment.