Wednesday, November 11, 2015

மகளை அறிமுகம் செய்கிறார் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி



ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவரும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்படவர்களின் உரிமைகளுக்காக போராடி வருபவருமான லட்சுமி அகர்வால் (26) தனது 7 மாத மகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.


லட்சுமி என்ற ஒற்றை பெயரிலேயே அறியப்படும் இவர் தனது மகளுக்கும் குடும்பப் பெயரை இணைக்காமல் ஒன்றை வார்த்தையில் ‘பிஹு’ என பெயரிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் பிறந்த பிஹுவை இதுவரை வெளியுலகுக்கு அறிமுகம் செய்யவில்லை.

இம்முடிவு லட்சுமியும் அவருடன் இணைந்து வாழும் அலோக் தீட்சித்தும் (28) சேர்ந்து எடுத்த முடிவாகும். ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ பிரச்சாரத்தில் தன்னுடன் இணைந்து செயல்படும் அலோக்-ஐ தனது வாழ்க்கை துணைவராக இணைத்துக் கொண்டார் லட்சுமி. இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை.

“எனது திருமணத்துக்கு வருவோர் எனது முகம் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை தவிர்த்தோம்” என்கிறார் லட்சுமி.

“சமூகத்தில் இரண்டு பேர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் என்ற சான்றிதழ் தேவையில்லை” என்கிறார் அலோக் தீட்சித்.

இந்த இணையர் தங்கள் குழந்தையை 7 மாதங்களுக்குப் பிறகு உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

“கடந்த 6-7 மாதங்களாக குழந்தைக்கும் எங்களுக்கும் நேரம் தேவைப்பட்டது. மேலும் தொடர்ந்து வேலைப்பளுவும் இருந்தது. லட்சுமி சமீபத்தில் தனது தந்தை மற்றும் தம்பியை இழந்தார்.

எனவே சுற்றத்தினர் அவரை கேள்விகளால் துளைப்பதை நானும் விரும்பவில்லை” என்று பிஹுவை அறிமுகம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களை கூறுகிறார் அலோக் தீட்சித்.

யார் இந்த லட்சுமி?

டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு தனது 16-வது வயதில் 32 வயது நபர் ஒருவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளானார் லட்சுமி. தனது காதலை ஏற்க மறுத்ததால் அந்நபர் லட்சுமி மீது ஆசிட் வீசினார். இதில் முகத்தில் கடும் பாதிப்புக்கு ஆளான லட்சுமி, அன்று முதல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக மாறினார். ஆசிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ‘சானவ் பவுன்டேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பு நடத்தி வரும் லட்சுமி, கடந்த 2014-ல் அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமாவிடம் இருந்து ‘உலகின் தைரியமான பெண்’ விருதை பெற்றார். ‘இண்டியன் ஆப் தி இயர்’ ஆக என்டிடிவி-யாலும் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை இவர் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். இதையடுத்து ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Keywords: மகளை அறிமுகம் செய்கிறார், ஆசிட் வீச்சு, பாதிக்கப்பட்ட லட்சுமி, ஆசிட்

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.