Wednesday, November 11, 2015

லாலுவின் வீழ்ச்சியும், எழுச்சியும்!நீண்ட நெடிய தனது அரசியல் வாழ்வில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைக் கண்டவர்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத். அரசியல் ரீதியான வீழ்ச்சியும், எழுச்சியும் இவருக்குப் புதிதல்ல.
 1990-களில் பிகார் அரசியலின் முடிசூடா சக்ரவர்த்தி, பின்னர் மாட்டுத் தீவன திட்டத்தின் மூலம் ஏற்பட்ட ஊழல் கறை, எப்போதும் நகைச்சுவை கலந்த தொனியில் பேசுவதால் பிறரது ஏளனமான விமர்சனங்களை சந்திப்பவர் என பன்முகங்களைக் கொண்டவர் இவர். இருப்பினும், மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்து அரசியலில் உயர்ந்தவர் என்பதால் லாலு பிரசாத்தை அவரது இளமைக்கால நண்பர்கள் எப்போதுமே ஒரு சாதனையாளராகவே பார்க்கின்றனர்.
லாலு பிரசாத் பிகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புல்வாரியா மாவட்டத்தில் கடந்த 1948-ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆறாவது வயதில் அவர் பாட்னாவுக்கு குடிபெயர்ந்தார்.

பாட்னா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய பி.என். கல்லூரியில் 1966-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் சேர்ந்தார். அப்போதே மாணவர் பருவ அரசியலில் அதிகமான ஈடுபாட்டுடன் அவர் பங்கெடுக்கத் தொடங்கினார். இதன் பலனாக 1967-ஆம் ஆண்டில் பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக லாலு பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பதவியில் அவர் இரண்டு ஆண்டுகள் நீடித்தார். பின்னர் 1973-ஆம் ஆண்டில் அந்தச் சங்கத்தின் தலைவரானார்.
முழுநேர அரசியல் வாழ்க்கை: பிகாரில் நிலவிய ஊழல், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய மாணவர் இயக்கத்தில் 1974-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து, ஜே.பி.க்கு மிக நெருக்கமானவராக மாறிய அவர், கடந்த 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இளம் வயது எம்.பி. என்ற சாதனையை எட்டினார்.

பின்னர், அரசியலில் பல்வேறு படி நிலைகளைக் கடந்து 1990-ஆம் ஆண்டில் பிகார் (ஜனதா தளம் கட்சி சார்பில்) முதல்வராக லாலு பிரசாத் பதவியேற்றார். அதே ஆண்டில் பிகாரில் ரத யாத்திரை நடத்திய பாஜக மூத்த தலைவர் அத்வானியை கைது செய்ததன் மூலம், "மதச்சார்பற்ற தலைவர்' என்ற முகத்துடன் லாலுவின் புகழ் நாடெங்கிலும் பரவியது.

ஊழல் கறை: பிகாரில் செயல்படுத்தப்பட்ட மாட்டுத் தீவன திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் லாலு பிரசாத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 1997-ஆம் ஆண்டில் முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டது.

இதற்கிடையே, ஜனதா தள கட்சித் தலைவர்கள் லாலுவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால், அதே ஆண்டில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை அவர் தொடங்கினார். இதே காலகட்டத்தில் தனது மனைவி ராப்ரி தேவியை பிகார் முதல்வராக லாலு பிரசாத் கொண்டு வந்தார். லாலுவின் வழிகாட்டுதலில், 1997-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை (நடுவே சிறிய இடைவெளி தவிர்த்து) பிகார் முதல்வராக ராப்ரி தேவி பதவி வகித்தார். இதனால், பிகாரின் முடிசூடா மன்னனாக லாலு பிரசாத் கருதப்பட்டார்.

தேசிய அரசியல்: கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் நஷ்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன.
அரசியல் சரிவு: இருப்பினும், 2005, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள், 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் என அடுத்தடுத்து தொடர் தோல்வியை சந்தித்ததால் லாலுவின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டதாகவே கருதப்பட்டது.

 மீண்டும் எழுச்சி: இந்தச் சூழலில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் அரசியல் உலகில் மீண்டும் கிங் மேக்கராக லாலு பிரசாத் உருவெடுத்துள்ளார்.


செய்தி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.