Sunday, November 22, 2015

நவீனக் கோட்பாடுகளின் முன்னோடி - முனைவர் பா.ஜெய்கணேஷ்



தமிழ் இலக்கண - இலக்கிய மரபில் பல உரையாசிரியர்கள் இருந்தபோதிலும் நச்சினார்க்கினியர்க்கு என்று தனித்த அடையாளம் உண்டு. ஆய்வாளர்களால் அதிகமாகப் பாராட்டப்பட்டவரும் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானவரும் இவர்தான்.

தொல்காப்பியர் செய்யுளியலில் வரையறுத்த "மாட்டு' என்னும் உறுப்பினை அடிப்படையாகக் கொண்டு தமது இலக்கியப் பிரதிகளுக்கு உரை எழுதியவர். "மாட்டு' என்பது இலக்கியத்தில் ஓரிடத்தில் உள்ள ஒரு சொல்லை இன்னொரு இடத்தில் உள்ள சொல்லோடு கொண்டு மாட்டி பொருள் கொள்வதாகும். இம்மாட்டு என்னும் உறுப்பு நீண்ட தொடர்நிலைச் செய்யுள்களைப் பொருள் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் இம் மாட்டு உறுப்பினை மையமாகக் கொண்டே தமது உரையை வழிநடத்தியுள்ளார்.

இவர், திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதும்போது, ""அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருண் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்னும் மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள் பத்தும் செய்தார்களாதலின் இவ்வாறே மாட்டி முடித்தல் யாண்டும் வருமென்றுணர்க.'' (திருமுரு, அடி-43-44) என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இவ்வாறு தெளிவுபடுத்தி குறிப்பிட்டுச் செல்ல 20ஆம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அம்மாட்டு இலக்கணத்தின் வழியான பொருள்கோளைக் கடுமையாக விமர்சித்தனர்.

அதற்குக் காரணம், அம்மாட்டிலக்கணம் செய்யுளைச் சிதைப்பதாக உள்ளது என்று கூறினர். மறைமலையடிகள் தமது முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையில்,

""பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை வரைகின்றார்'' என்று குறிப்பிடுகிறார். ஆனால், மாட்டு என்பது நவீன பொருள் கோடல் முறை என்று தமிழவன், அ.சதீஷ் உள்ளிட்டோர் தமது ஆய்வுகளில் குறிப்பிட்டுச் செல்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதமாக நச்சினார்க்கினியரின் பத்துப்பாட்டு நூல்களுக்கான உரைப்பகுதியின் இறுதிப்பகுதி அமைகிறது. ஒவ்வொரு நூலின் இறுதியிலும் அந்நூலில் பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு சொற்களை ஒருங்கே தொகுத்துத் தருகின்றார். இச்சொற்கள் ஏன் இவ்வாறு ஒவ்வொரு நூலின் இறுதியிலும் உரையாசிரியரால் தொகுத்துத் தரப்பட்டுள்ளது என்று பார்த்தால், அது அந்தப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட நூலின் ஒட்டுமொத்த விளக்கத்தை அளிப்பதாக உள்ளது.

 சான்றாக பொருநராற்றுப்படை நச்சினார்க்கினியர் உரையின் இறுதிப்பகுதி: பொருந(3), கோடியர் தலைவ, கொண்டதறிந (57), புகழ் மேம்படுக (60), ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை (52), நெறிதிரிந்தொராஅது (58), ஆற்றெ திர்ப்படுதலும் நோற்றதன் பயனே (59), போற்றிக் கேண்மதி (60) நின்னிரும் பேரொக்கலொடு (61), பசி ஓராஅல் வேண்டின், நீடின்று (62), எழுமதி (63), யானும் (64), இன்மை தீர வந்தனென் (129), உருகெழு குருசிலாகிய (131), உருவப்பஃறே ரிளையோன் சிறுவன் (130), கரிகால் வளவன் (148) நாடுகிழவோன் (248), குருசில், அன்னோன் (231), தாணிழன் மருங்கிற் குறுகி (149), மன்னர் நடுங்கத் தோன்றி (232), வாழியெனத் (231), தொழுது முன்னிற்குவிராயின் (150), நாட்டொடு (170), வேழம் (172), தரவிடைத் தங்கலோ விலன் (173) எனக்கூட்டி வினை முடிவு செய்க.



விளக்கம்: பொருநனே(3), கூத்தர்க்கெல்லாம் தலைவனே (57), பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் அறிபவனே (57), அடுத்தவர் புகழை அரசவைகளில் மேம்படுத்துபவனே (60), ஏழிசையின் கண்ணும் உரிமையுடையவனே (63), காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மன மகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்ட பின்பு (58), வழியறியாமையினாலே இவ்வழியைத் தப்பி வேறொறு வழியிற் போகாதே, இவ்வழியிலே என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன் (59), யான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக (60). பெரும் பசியோடு இருக்கும் நீயும் உன் சுற்றமும் 61), அந்தப் பசியைக் கைவிடுதல் விரும்புவையாயின் (62), காலநீட்டிப்பின்றி எழுந்திருப்பாயாக(63). செல்வம் பெற்ற யானும் (64), துன்பம் எப்போதும் இல்லை என்று வந்தேன் (129). உட்குதல் பொருந்திய தலைவன் (131), வென்ற வேலினையுடைய அழகினையுடைய பல தேரினையுடைய இளஞ்சேட் சென்னியுடைய புதல்வன் (130), கரிகால் வளவன் (148) காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடைய தலைவன் (248), யான் கூறிய அத்தன்மைகளையுடையோன் (231), அருளைத் தன்னிடத்திலே உடைய திருவடிகளை அண்ணிதாக நின்று சேர்ந்து வணங்கி (149), பகையரசர் நடுங்கும் படி விளங்கி (232), (இருக்கும் அவனை) வாழ்வாயாக (231), (எனக் கூறி) நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின் (150), நாட்டோடு (170), யானை தருதல் (172), தொழிலிடத்தே நிலைபெறுதலை ஒழிதலின் (173) என்று அந்தச் சொற்களுக்கான உரைப்பகுதியைத் தொகுத்தால் நூலின் பொருள் முழுவதுமாகக் கிடைக்கிறது. ஒரு பிரதியைக் கலைத்துப் போட்டாலும் அது தன்னகத்தே விளக்கத்தை ஒளித்து வைப்பது என்பது மேலைநாட்டுக் கோட்பாடு மட்டும் அல்ல. அது தமிழ் மண்ணிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனப்பாடக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பல அடிகளில் உள்ள பல்வேறு சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒருங்கு தொகுத்து அதன் விளக்கத்தை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நச்சினார்க்கினியர் செய்த முயற்சி அவரை நவீன கோட்பாட்டியலின் முன்னோடியாக அடையாளப்படுத்துகிறது.

-முனைவர் பா. ஜெய்கணேஷ்

நன்றி : - thinamaNi

0 comments:

Post a Comment

Kindly post a comment.