Wednesday, November 11, 2015

பிரபல உல்பா தலைவனை இந்தியாவிடம் ஒப்படைத்த ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் மோடி நன்றி !

பிரபல உல்பா தலைவனை இந்தியாவிடம் ஒப்படைத்த ஷேக் ஹசினாவுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்


உல்பா தலைவன் அனுப் சேட்டியாவை இந்தியாவிடம் ஒப்படைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம்வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

அசாமை சேர்ந்த உல்பா தீவிரவாதி அனுப் சேட்டியா. அந்த அமைப்பின் செயலாளராக இருந்த இவர் மீது கொலை, ஆள் கடத்தல்கள் மற்றும் கட்டாய மாமூல் வசூல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதற்காக அவரை போலீசார் தேடி வந்தனர். எனவே, அவர் இந்தியாவில் இருந்து தப்பி வங்காள தேசத்திற்குள் புகுந்தார். அங்கு அவரை கடந்த 1997–ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு அரசியல் அடைக்கலம் வழங்கும்படி வங்காளதேச அரசிடம் கடந்த 2005-ம் ஆண்டு அவர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த 2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் முயற்சி மேற்கொண்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதற்கிடையே, வங்காளதேசம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி கைதிகள் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் மேற்கொண்டார். மேலும், அனுப் சேட்டியாவை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தீவிர நடவடிக்கை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை அவரை இந்தியாவிடம் வங்காளதேச அரசு ஒப்படைத்தது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அனுப் சேட்டியாவை இந்தியாவிடம் 
ஒப்படைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

அவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவியமைக்காகவும் ஷேக் ஹசினாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார் என பிரதமரின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது..

மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.