Friday, November 27, 2015

பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுவுக்கு தடை விதிக்கப்படும்


பாட்னா: பீகாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுவுக்கு தடை விதிக்கப்படும்’’ என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இதில் முக்கிய அறிவிப்பாக பூரண மதுவிலக்கு திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். பாட்னாவில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது: மது குடிக்கும் ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது குடும்பங்கள் இதனால் கஷ்டப்படுகின்றன. குழந்தைகளின் கல்வி பாழாகிறது. மதுதான் குடும்ப வன்முறைக்கும் காரணமாகும். குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குற்றங்கள் மதுவினால் அதிகரிக்கிறது. மற்றவர்களை காட்டிலும் பெண்களே இதனால் மிகவும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.   இதனால் பீகாரில் மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளேன்.

 அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் அரசின் வருவாய் குறைந்தாலும், மக்கள் நலனையே முக்கியமாக கருதும் அரசு, அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மது தடை செய்யப்படும் என கடந்த ஜூலை மாதம் நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அவர் அறிவித்தபடி தற்போது, மது விலக்கு திட்டத்தை இப்போது கொண்டு வருகிறார்.  

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பேசிய, பீகார் மாநில கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்  அப்துல் ஜலீல் மஸ்தான், ‘‘மதுவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு விரைவில் மேற்கொள்ளும்’’ என்றார். 

பீகாரில் மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த ஆண்டில் ₹3,650 கோடி வருவாய் கிடைத்தது .

தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.