Friday, November 27, 2015

இந்திய அரசியலமைப்பு சட்டதினம்



ந்திய ஜனநாயகத்தில் அரசியலமைப்பு சட்டம்தான் அரசுகளுக்கும், மக்களுக்கும் ஒரு மறை நூலாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் அடிப்படையில்தான், அனைத்து சட்டங்களும், விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அரசின் கடமைகளும், மக்களுக்கு உள்ள உரிமைகளும் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்தில்தான். பிரதமர் என்றாலும் சரி, முதல்–அமைச்சர்கள் என்றாலும் சரி, ஏன் மத்திய–மாநில மந்திரிகள், நீதிபதிகள் அனைவருமே அரசியல் சட்டத்தின் கீழ்தான் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதவிப்பிரமாணம் எடுக்கும்போதுகூட, ‘ஜெ.ஜெயலலிதா என்னும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், மாறாபற்றும் கொண்டு இருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதல்–அமைச்சராக உண்மையாகவும், உள்ளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும், ஒருதலைசார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்’ என்று கூறினார்.

இத்தகைய இந்திய அரசியல் சட்டம் 1949–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந்தேதிதான் டாக்டர் அம்பேத்கரை தலைமையாகக் கொண்ட, 284 பேர்களைக்கொண்ட அரசியல் நிர்ணய சபையால் எழுதி வெளியிடப்பட்டது. இந்த குழுவில் 15 பேர் பெண்கள். ஆனால், இது நடைமுறைக்கு வந்தது குடியரசு தினமான 1950–ம் ஆண்டு ஜனவரி 26–ந்தேதிதான். முழுக்க முழுக்க கையால் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலபிரதியை இன்றும் பாராளுமன்றத்தின் நூலகத்தில் பார்க்கலாம். பல வெளிநாட்டு அரசியல் சட்டங்களில் குறிப்பிட்டுள்ள நல்ல அம்சங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இங்கிலாந்து அரசியல் சட்டத்தின் அடிப்படை காணப்பட்டாலும், சுதந்திரம், சமத்துவம், நட்பு போன்றவை பிரான்சு நாட்டு அரசியல் சட்டத்திலும், ஐந்தாண்டு திட்டம் ரஷிய நாட்டு அரசியல் சட்டத்திலும், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்த அம்சம் ஜப்பான் அரசியல் சட்டத்திலும் இருந்து சேர்க்கப்பட்டவையாகும். 

கடந்த மாதம் 10–ந்தேதியன்று மும்பையில் அம்பேத்கர் பிறந்தநாளன்று அவருக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நம் நாட்டின் அரசியல் சட்டம் குறித்து மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். இது எப்படி உருவாக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக நவம்பர் 26–ந்தேதி அரசியலமைப்பு சட்டதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும். அன்றைய தினம் பள்ளிக்கூடங்களில் அரசியல் சட்டம் பற்றி போதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே நேற்று பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடருக்காக நேற்று தொடங்கப்பட்ட பாராளுமன்றத்தில்கூட இருநாட்கள் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான விவாதங்களே இடம் பெறுகின்றன.

ஆனால், இந்த ஒரு நாளில் மட்டும் அரசியல் சட்டம் தொடர்பான கருத்துகளை சொல்லிக்கொடுத்துவிட்டு, அன்று மட்டும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியை நடத்திவிட்டு, அதோடு மறந்துவிடுவதைவிட, எந்த கோட்பாடுகளால் நாடு இயங்கவேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டம் வகுத்துத்தந்துள்ளதோ, அதை முழுமையாக எதிர்கால சந்ததி தெரிந்துகொள்ள முதலில் ஆசிரியர் கல்வியிலும், அதேபோல பள்ளிக்கூட அளவில் அரசியல் சட்டமுகவுரை தொடங்கி, முக்கிய பிரகடனங்களை மாணவர்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் ஒரு பாடமாகவும் பல நாடுகளில் இருப்பதைப்போல சேர்த்தால், மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.