Sunday, November 1, 2015

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839- 1898)



 
 
திருநெல்வேலியில் வசித்துவந்த சைவ மரபினரான செந்தினாயகம்-பேச்சி முத்தம்மை 
ஆகியோரின் மகனாக விகாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 6ஆம் நாளில் (22.11.1839) 
தோன்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எனப்படும் முருகதாசர்.
 
உலகின் இயல்பான வாழ்வை வெறுத்த முருகதாசர், வள்ளிமலை முருகன் தலம் சென்று அவன் 
சன்னதியில் கல்லாடை ஆகியன வைத்து வழிபட்டு அதனை அணிவதாயினர். 
 
லங்கோடு, கௌபீனம், முழுநீறு, தண்டம், சிகையமைத்து விளங்கிய தன்மையால் தண்டபாணி 
சுவாமிகள் எனப்பட்டார். 
 
ஸ்ரீஅருணகிரிநாதர் திருப்புகழைப் பாடியதுபோல் இவரும் திருப்புகழ், சந்தப்பாடல் 
அதிகம் பாடியதால் திருப்புகழ்ச் சுவாமிகள் என்றும், அகப்பொருளின் துறைகளை 
அமைத்துச் சந்தயாப்பில் பெரிய பாடல்கள் “வண்ணம்” என்ற பெயரில் பாடல்களைப் 
பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார். 
 
தண்டபாணி சுவாமிகள் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தியவர். சென்னை திருவொற் றியூர், 
விழுப்புரம், கோலியனூர், ஒட்டன்சத்திரம் துமிசம்பட்டி உள்ளிட்ட இடங்களில் 
கோயில்களில் நடந்த உயிர் பலியைத் தடுத்து நிறுத்தியவர். 
 
வடலூர் அடிகளாரை இவர் மூன்றுமுறை சந்தித்திருக்கிறார். இதுபற்றி, “அவனுடன் 
மூன்று காலம் அளவளாய்ப் பேசியுள்ளேன். எள்ளளவும் பேதமின்றி என் கருத்திசைந்தே 
சொன்னான்” எனத் தெரிவித்திருக்கிறார். 
 
உதடுகள் ஒட்டாமல் குவியுமாறு பாடலமைப்பது வடமொழியில் “நீரோட்டம்” என்பர். இதனை 
“இதழகல் அந்தாதி” என அழகியத் தமிழில் அழைத்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், 
இம்முறையில் முப்பது எண்களமைய சென்னை, தில்லை, செந்தில், நெல்லை போன்ற 
தலங்களுக்கும், பொதுவாகவும் பாடியுள்ளார். 
 
இவரிடம் சந்த இலக்கணம் பயின்ற பெரும்புலவர்கள் கழுகுமலை இராமகிருஷ்ண பிள்ளை, 
அரண்வாயில் வேங்கட சுப்புப் பிள்ளை, தங்கவேலுப் பிள்ளை, ஊற்றுமலை ஜமீன் 
ஆஸ்தானப் புலவர் கந்தசாமிப் பிள்ளை, கோபாலசமுத்திரம் சண்முகதாசப் பிள்ளை, 
சித்திரபுத்திரப் பிள்ளை, சென்னை அட்டாவதானம் கல்யாண சுந்தர முதலியார், 
வண்ணக்களஞ்சியம் நாகலிங்க முனிவர், சந்தப்புலமை செந்தினாயக சுவாமிகள் 
ஆகியோராவர். 
 
சுவாமிகள் திருப்புகலூரில் தங்கித் திருமேனி வெளுப்பு முதலிய நூல்கள் செய்த 
சமயம், நடுநாட்டுத் திருவாமாத்தூர்ச் சிவபெருமான் இவரது மனவெளியில் தோன்றி, 
பசுக்கட்குக் கொம்பு கொடுத்த்து போன்ற வரலாறுகளை விளக்கி, அப்பகுதிக்கு 
வருமாறு ஆணையிட்டார். 
 
பின் விழுப்புரம் அருகே, பம்பையாற்றங்கரையில் அமைந்துள்ள திரு ஆமாத்தூர் வந்து 
தங்கிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒன்பதாண்டுகள் எல்லை தாண்டா 
விரதமிருந்து தவம் புரிந்தார். 
 
கலி ஐயாயிரமான விளம்பி ஆண்டு ஆனித்திங்கள் 23ஆம் நாள் (5.7.1898) திருஓண 
நன்னாளில் சுவாமிகள் திருவருட் கலந்தார். 
 
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்ட கௌமார மடாலயம், 
திருவாமாத்தூர் கிராமத்தில் இன்றளவும் நல்லமுறையில் இயங்கிவருகிறது. இவர் 
கைப்பட எழுதிய 50க்கும் மேற்பட்ட சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.