Friday, November 20, 2015

மாலியில் நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கிச் சூடு: 170 பேரை கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்ததாக தகவல்

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டல் | பட உதவி: ஓட்டல் நிர்வாகம்.

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள 

ராடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டல் | 

பட உதவி: ஓட்டல் நிர்வாகம்.

ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள நட்சத்திர ஓட்டலை கிளர்ச்சியாளர்கள் சிலர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த ஓட்டலில் இருந்த 170 பேரை அவர்கள் சிறைபிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மாலி நாட்டுத் தலைநகர் பமாகோவில் உள்ளது ரேடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டல். இந்த ஓட்டலில், வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஓட்டலுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் ஓட்டலை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் விடுதியில் இருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுதியின் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் போலீஸாரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

ஓட்டலில் அமைந்துள்ள பகுதியை தற்போது போலீஸார் சுற்றிவளைத்து சீல் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், லெப்டினன்ட் கர்னல் டியாரன் கோன் கூறும்போது, "ரேடிசன் பளூ விடுதியில் என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை" என்றார்.

மாலி - ராணுவ கிளர்ச்சிக்குப் பின்..

2012-ல் மாலி ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வடக்கு மாலியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

2013-ல் பிரான்ஸ் ராணுவ உதவியுடன் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், மேற்கு பகுதியில் இயங்கிய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் வலுவிழந்தன.

தற்போதும்கூட மாலியில் 1000-க்கும் மேற்பட்ட பிரான்ஸ் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கில் வலுவிழந்த பின்னர் இஸ்லாமிய இயக்கங்கள் மெல்ல மெல்ல தங்கள் ஆதிக்கத்தை தெற்கு நோக்கி திருப்பின.

கடந்த மார்ச் மாதம்கூட மாலி தலைநகர் பமாகோவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Keywords: மாலி, பிரான்ஸ் ராணுவம், தீவிரவாத தாக்குதல், துப்பாக்கிச் சூடு

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.