Friday, November 20, 2015

: புதிய சீசன் டிக்கெட் அறிமுகம்


சென்னை மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் - கோயம்பேடு இடையே செல்வதற்கான புதிய சீசன் டிக்கெட் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 10 முறை சென்று வருவதற்கு ரூ.320 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.320 கட்டணமாக செலுத்தி "டிரிப் ஸ்மார்ட்' அட்டையைப் பெற வேண்டும்.

 ஆலந்தூர் -கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. ஆனால் மற்ற போக்குவரத்து கட்டணத்தைக் காட்டிலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமாக இருந்ததால், அலுவலக நாள்களில் மெட்ரோ ரயில்களில் போதிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது.

 இதற்கிடையே, பயணிகளை ஊக்குவிக்கவும், அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் சுற்றுலாப் பயண அட்டையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டணச் சலுகையைப் பெற முடியும். இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

 "டிரிப் ஸ்மார்ட் அட்டை': இப்போது பயணிகளின் மெட்ரோ ரயில் பயன்பாட்டை அதிகரிக்க "டிரிப் ஸ்மார்ட் அட்டை' திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

 இந்த அட்டை மூன்று விதமான பயணத் திட்டத்தைக் கொண்டதாகும். அதாவது 10 முறை, 40 முறை, 60 முறை மெட்ரோ ரயிலில் சென்று வருவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 

 உதாரணத்துக்கு, ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 10 முறை சென்று வருவதற்கு ரூ.400 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், 7 நாள்களுக்கு 10 முறை ஆலந்தூர் - கோயம்பேடு சென்று வருவதற்கு ரூ.320 மட்டுமே கட்டணமாக இந்த அட்டையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மேலும், ஆலந்தூர் - கோயம்பேடு 40 முறை சென்று வர ரூ.1280, ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 60 முறை சென்று வர ரூ.1920 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை மூலம் மெட்ரோ ரயில் சாதாரண கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த "டிரிப் ஸ்மார்ட் அட்டையை' பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஏற்றவாறு பெற்றுக் கொள்ளலாம்.

10 முறை சென்று வருவதற்கான "டிரிப் ஸ்மார்ட் அட்டை' கட்டணம்

 ஆலந்தூர் - ஈக்காட்டுத்தாங்கல் ரூ.80
 ஆலந்தூர் - அசோக் நகர் ரூ.160
 ஆலந்தூர் - வடபழனி ரூ.240
 ஆலந்தூர் - அரும்பாக்கம் ரூ.320
 ஆலந்தூர் - சிஎம்பிடி ரூ.320
 ஆலந்தூர் - கோயம்பேடு ரூ.320
40 முறை சென்று வருவதற்கான கட்டணம்
 ஆலந்தூர் - ஈக்காட்டுத்தாங்கல் ரூ.320
 ஆலந்தூர் - அசோக் நகர் ரூ.640
 ஆலந்தூர் - வடபழனி ரூ.980
 ஆலந்தூர் - அரும்பாக்கம் ரூ.1,280
 ஆலந்தூர் - சிஎம்பிடி ரூ.1,280
 ஆலந்தூர் - கோயம்பேடு ரூ.1,280
60 முறை சென்று வருவதற்கான கட்டணம்
 ஆலந்தூர் - ஈக்காட்டுத்தாங்கல் ரூ.480
 ஆலந்தூர் - அசோக் நகர் ரூ.960
 ஆலந்தூர் - வடபழனி ரூ.1,440
 ஆலந்தூர் - அரும்பாக்கம் ரூ.1,920
 ஆலந்தூர் - சிஎம்பிடி ரூ.1,920
 ஆலந்தூர் - கோயம்பேடு ரூ.1,920

நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.