Friday, November 20, 2015

முஸ்லிம்கள் பதிவு செய்ய வேண்டியதை கட்டாயமாக்குவேன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்

அயோவா, நியூட்டனில் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ்.


அயோவா, நியூட்டனில் பிரச்சாரம் மேற்கொண்ட 

அமெரிக்க அதிபர் வேட்பாளர் 

டோனல்ட் டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ்.


அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் தரவுப்பெட்டகத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வதைக் கட்டாயமாக்குவேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்.

என்.பி.சி. செய்தி சானல் நிருபர் ஒருவர், அனைத்து முஸ்லிம்களும் பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்படுவார்களா? என்று கேட்டதற்கு "முழுதாக அந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது உறுதி, அனைத்து முஸ்லிம்களும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்” என்றார். 

பிறகு, பதிவு செய்யும் நடைமுறை எவ்வாறு நிறைவேற்றப்படும் என்றும் மசூதிகள் இதில் ஈடுபடுத்தப்படுமா என்றும் கேட்டபோது, “பல்வேறு இடங்களில் பதிவு செய்வது நடைபெறும், இது நிர்வாகம் பற்றிய விவகாரம், நம் நாட்டில் நிர்வாகத்திறமை இல்லை” என்றார்.

நாஜி ஜெர்மனியில் யூதர்கள் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் மீண்டும் மீண்டும் “நீங்களே கூறுங்கள்” என்று கூறிக்கொண்டேயிருந்தாரே தவிர திருப்திகரமான பதில் எதையும் அளிக்கவில்லை. பிறகு இந்த கேள்விக்கு பதில் அளிப்பதையே நிறுத்தியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

டிரம்ப் மற்றும் பென் கார்சன் ஆகிய குடியரசுக் கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசி வருகின்றனர். 

பென் கார்சன் ஒருபடி மேலே சென்று சிரியாவிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை 'சீறும் நாய்கள்' என்று வியாழக்கிழமையன்று வர்ணித்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

பாரீஸில் ஐ.எஸ். தாக்குதலுக்குப் பிறகு சிரியா மற்றும் இராக்கிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளை கடுமையாக தடுத்துக் குறைப்பதற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்ததையடுத்து இவர்கள் இருவரும் இவ்வாறு பேசி வருகின்றனர்.

Keywords: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், முஸ்லிம்கள், அகதிகள், அமெரிக்கா, சிரியா, இராக்

நன்றி  : தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.