Saturday, November 7, 2015

15–ந் தேதி முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி ½ சதவீதம் உயர்வு தூய்மை இந்தியா திட்ட நிதிக்காக !




தூய்மை இந்தியா திட்டத்துக்காக, மத்திய அரசு சேவை வரியை ½ சதவீதம் உயர்த்தி இருக்கிறது.

சேவை வரி

தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.

கடந்த மே 31–ந் தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1–ந் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

½ சதவீதம் உயர்வு

தற்போது, தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி மேலும் ½ சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாராளமாக நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு நேற்று ½ சதவீதம் உயர்த்தியது.

எனவே இனிமேல் சேவை வரி 14½ சதவீதமாக இருக்கும்.

15–ந் தேதி முதல் அமல்

இந்த ½ சதவீத சேவை வரி உயர்வு வருகிற 15–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த ½ சதவீத சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும்.

இதுபற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த கூடுதல் ½ சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செலவு அதிகரிக்கும்

எனவே, வருகிற 15–ந் தேதி முதல் சேவை வரியின் கீழ் வரும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கும் 14½ சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும்.

சேவை வரி உயர்வின் காரணமாக தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், சுற்றுலா கட்டணம், காப்பீடு கட்டணம் போன்றவை உயரும். இதனால் செலவு அதிகரிக்கும்.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.