Wednesday, October 28, 2015

சத்தான மாலை நேரச் சிற்றுண்டி - Vanisri Sivakumar

மிக்ஸ் ஃப்ரூட்ஸ் அடை

தேவையானவை:
அரிசி -  ஒரு கிண்ணம்
உளுந்து  - 2 மேசைக் கரண்டி
நறுக்கிய ஆப்பிள் - ஒரு கிண்ணம்
அன்னாசி - ஒரு கிண்ணம்
திராட்சைப்பழம்-  ஒரு கிண்ணம்
கடலைப்பருப்பு -  100 கிராம்
உப்பு -  தேவையான அளவு
செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். 
அரைத்த மாவுடன் சிறுதுண்டுகளாக நறுக்கிய ஆப்பிள், அன்னாசி மற்றும் சிறிய பன்னீர் திராட்சையைச் சேர்த்துக் கொள்ளவும்.
 அத்துடன் உப்பு சேர்த்துக் கலந்து, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து, சிறிது எண்ணெய்யை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க வாசனையான  மிக்ஸ் ஃப்ரூட்ஸ் அடை தயார்.
சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய டிபன் இது.

கேழ்வரகு ரொட்டி
 
தேவையானவை:
கேழ்வரகு மாவு  - ஒரு கிண்ணம்
வெங்காயம் - 1
முருங்கைக் கீரை - 1பிடி
மிளகாய் வற்றல்  - 3
எண்ணெய் , உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவில்  முருங்கைக் கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக பிளந்த மிளகாய் வற்றல், சிறிது உப்பு சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு தேவையான அளவு மாவை எடுத்து உருண்டைகளாக்கி ஒரு மெல்லிய ஈரத் துணியில் வைத்து ரொட்டியாக தட்டி, தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.  இந்த ரொட்டிகளைச் சூடாகப் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சத்தும் மிகுந்தது.

வாழைப்பூ வடை
 
தேவையானப் பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சோம்பு - 1 மேசைக் கரண்டி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் இஞ்சி, சோம்பு, பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப்   சேர்க்கவும்.
வாழைப்பூவை, மிகவும் பொடியாக நறுக்கித் தண்ணீரில் போட்டு அலசி  தண்ணீர் வடித்து எடுத்து  அரைத்த கடலைப்பருப்பு மாவுடன் சேர்க்கவும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து  எண்ணெய்ச் சட்டியில் வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடான சத்தான வாழைப்பூ வடை தயார். (வாழைப்பூவை லேசாக கொதிக்க வைத்தும் மாவுடன் சேர்க்கலாம்) மாலை நேரத்தில் தேங்காய் சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும்.

கோதுமை போளி
 
தேவையானப்பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம்
வெல்லம் பொடித்தது - 1 கிண்ணம்
சுக்குப்பொடி - 1/2 மேசைக் கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 மேசைக் கரண்டி
நெய் - 4 முதல் 5 மேசைக் கரண்டி
நல்லெண்ணெய் - 3 முதல் 4 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: கோதுமை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து சிறிது நல்லெண்ணெய்யைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். பின்னர் வாழை இலைத்துண்டு அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் சிறிதளவு மாவை வைத்து தட்டி, அதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, அதனை விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.
இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம்.

பசலைக்கீரை பக்கோடா
 
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை- 10 அல்லது 20
கடலை மாவு - 2 கிண்ணம்
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள்-1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
பொறிக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை: கடலை மாவு, தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து கெட்டியாகப் பிசையவும். அத்துடன் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். பின்னர் பசலைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும்.  பிறகு வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் மாவை சிறு சிறு பக்கோடாக்களாகப் பொறித்து எடுக்கவும். சத்தான பசலைக்கீரைப் பக்கோடா ரெடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.