Wednesday, October 28, 2015

புற்றுநோய் ஒழிப்பே இலக்கு: பள்ளி மாணவியின் வியத்தகு விழிப்புணர்வுப் பயணம்


தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி தொடங்கி கிராமங்கள் வரை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவி பாக்கியஸ்ரீ.

முதலாம் வகுப்பு படிக்கும் போதே அப்பாவிடம் தனக்கு மெடிக்கல் புத்தகம் வேண்டும் என்று கேட்க அவரும் சற்றும் யோசிக்காமல் வாங்கி கொடுத்துள்ளார். அன்று முதல் மருத்துவம், மனித உடல், நோய்களின் காரணம், அவற்றின் பெயர் விளக்கங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். அதோடு மருத்துவம் படித்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதே தனது லட்சியமாக உறுதியேற்றுள்ளார்.

மருத்துவத் துறையில் 2,500 வகையான நோய்களுக்கான காரணங்கள், அதற்கான மருந்துகள், மருத்துவப் பெயர்களுக்கான விளக்கங்கள் ஆகியவற்றை தனது இந்த பயணத்தின்போது எடுத்துரைக்கிறார்.

இது போன்ற சாதனை முயற்சிக்கு நான்காம் வகுப்பு முதல் ஏஷியாட்டிக் விருது, இந்தியன் புக் ஆப் விருது, தன்வந்திரி விருது என மொத்தம் 400 விருதுகள், 1500 சான்றிதழ்களுக்கு மேல் பெற்றுள்ளார் பாக்கியஸ்ரீ. 80 பள்ளிகள், 35 கல்லூரிகளில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மருத்துவம் குறித்து நேரடி விளக்க நிகழ்ச்சி நடத்தியுள்ளார். மருத்துவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். 200 ஊராட்சிகளில் படகாட்சிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களை விட்டுள்ளதாக பெருமை பொங்க கூறுகிறார்.

இது பற்றி மாணவி பாக்கியஸ்ரீ 'தி இந்து'விடம் கூறும்போது, "சென்னை அம்பத்தூரில் வசிக்கிறோம். அப்பா பிஎஸ்சி பட்டதாரி. விவசாயம் பார்க்கிறார். அம்மா பாக்கியலட்சுமி இல்லத்தரசி. தம்பி பிபின் பிரசாத். நான் சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

முதலாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மருத்துவம் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் விரும்பி படித்தேன். எனக்கு யாருமே கற்றுக் கொடுக்கவில்லை.

நானாகவே படித்து தெரிந்து கொண்டேன். முதலில் வார்த்தைகள் மற்றும் அதற்கான விரிவாக்கம் என்று தொடங்கினேன். படிப்படியாக நோய்கள், அதற்கான காரணங்கள், மருந்துகள், மருத்துவப் பெயர்களுக்கான விளக்கங்கள் என 2500 வகைகளை தெரிந்து கொண்டேன்.

அதிக பாதிப்பு தரும் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எல்லோரது உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கும். அது தூண்டப்படுவதற்கான சூழல் உடலில் உருவாகும் போது புற்றுநோயாக வளர்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கு. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது, ரசாயன உணவுப் பொருட்கள் பயன்பாடு போன்றவையால் புற்று நோய் பிரச்சினை உண்டாகிறது.

எதிர்கால தலைமுறை நலன்

புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதை தடுத்தால் நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கலாம். துரித உணவு மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்பாடு பள்ளிக் காலத்திலேயே தொடங்கி விடுகிறது.

இதனால் மாணவர்கள் மத்தியில் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தேன். எதிர்கால தலை முறை புற்றுநோய் இல்லாத தலை முறையாக வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். முதல் முதலாக என்னுடைய விழிப்புணர்வு உரையாடலை செஞ்சியிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தொடங்கினேன். ஒன்றரை மாத பயணத்தில் தமிழகத்தில் உள்ள 80 பள்ளிகள், 35 கல்லூரி களில் பிரச்சாரம் செய்துள்ளேன்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 45 நிமிடங்கள் தகவல்களை வழங்குவேன். அதன்பின்னர் மருத்துவர்கள், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். மேலும் இதுவரை 200 ஊராட்களில் உள்ள கிராமங்களில் படங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன்.

புதுச்சேரியில் வில்லியனூர், வடமங்கலம், செல்லிப்பட்டு கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு செய்துள்ளேன்.

ஒவ்வொரு ஊரிலும் அன்பான வரவேற்பு கிடைத்தது. பலர் செல்போனில் தொடர்பு கொண்டு தங்களுடைய நன்றியை தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் என்னிடம் ஆட்டோகிராப் வாங்கிச் சென்றுள்ளனர். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்ற பழக்கங்களையும் விட்டுள்ளனர். தமிழக அளவில் ஒவ்வொரு ஊரிலும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் காரணங்கள் பற்றியும் அறிக்கை தயாரித்து இருக்கிறேன்.

இந்த பயணம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க இருக்கிறேன். பள்ளி படிப்பிலும் நான் முதல் மதிப்பெண் எடுப்பேன். இந்த பயணம் மதிப்பெண்ணுக்காகவோ, சாதனைக்காகவோ செய்யவில்லை. புற்றுநோயாளிகளின் இறப்பை தடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். புற்றுநோய், வெண்புள்ளி போன்றவைகளுக்கு நிரந்தர தீர்வு காண மருந்து கண்டுபிடிப்பதே எனது லட்சியம்" என்கிறார் தன்னம்பிக்கையுடன். வாழ்த்துவோம்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.