Tuesday, October 6, 2015

மத்திய அரசுப்பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்கலாம்!

கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மன் மொழியை கற்பிக்க ஒப்பந்தம் கையெழுத்து

First Published : 06 October 2015 03:30 AM IST
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிப்பதற்கான ஒப்பந்தம், திங்கள்கிழமை கையெழுத்தானது.

 ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் வருகையையொட்டி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை நிர்வாகிகளும், தில்லியில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்கும் மேக்ஸ் முல்லர் பவன் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இனி வரும் காலங்களில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூடுதல் வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படும்'' என்றார்.

 முன்னதாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சம்ஸ்கிருதத்துக்குப் பதிலாக ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுக்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வந்தது.

 அந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, சம்ஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்கியது. மேலும், ஜெர்மன் மொழியைக் கற்பிப்பது தேசியக் கல்விக் கொள்கையை மீறுவதாகும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 குற்றவியல் ஒப்பந்தம் கையெழுத்தாகாதது ஏன்?

 இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருப்பதற்கு, மரண தண்டனை குறித்த சட்ட விதியே காரணம் என்று கூறப்படுகிறது.

 தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜெர்மனி நாட்டு உள்துறை இணையமைச்சர் கண்டர் கிரிங்ஸிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

 இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் குற்றவியல் விவகாரங்களில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம், மரண தண்டனை பற்றிய கருத்து வேறுபாடுகளால் தாமதமாகி வருகிறது. ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை இரு நாட்டுப் பிரதமர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை ஜெர்மனி நாட்டு நீதித்துறை பரிசீலித்து வருகிறது என நம்புகிறேன். ஒப்பந்தம் விரைவில் நிறைவேறுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கிரண் ரிஜிஜு கூறினார். 

நன்றி :- தினமணி
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.